இவ்வியாழனன்று, கடல்சார் பணியாளர்கள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
கடல்சார் பணியாளருக்கு நம்பிக்கை
“இன்றைய கடினமான காலத்தில், கடல்சார்ந்த பணிகளில் ஈடுபாட்டிருப்போர், மற்றும், மீனவர்களாகிய உங்கள் பணி மிகவும் முக்கியமானது. நம்பிக்கையும், ஆறுதலும் தரும் செய்தியொன்றை இன்று உங்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், இந்த உலகநாளை மனதில் கொண்டு, ஜூன் 17, கடந்த புதனன்று மாலை, ‘கடலின் திருத்தூதுப்பணித்துவம்’ என்ற அமைப்பின் வழியே, கடலில் பணியாற்றும் தொழிலாளிகள் மற்றும், அவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக பணியாற்றுவோருக்கு காணொளிச் செய்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் 19 உருவாக்கியுள்ள நெருக்கடி வேளையில், வழக்கத்திற்கு மாறாக, கடல் நீர்ப்பரப்பில் அதிக நேரத்தை கழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்கள், மற்றும், அவர்களை பிரிந்திருக்கும் குடும்பத்தினரை, தான் நன்றியோடு நினைவில் கொள்வதாக, திருத்தந்தை, இச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கு…
அத்துடன், இன்று நிலவும் கொள்ளைநோய் நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கு, மனித சமுதாயம், தியாகத்தையும் அன்பையும் வளர்க்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
“நம்மிடையே உடன்பிறந்த உணர்வையும், இணைந்து வாழும் நிலையையும் உருவாக்க, அதிக தியாகத்துடனும், தாராளமனதுடனும், எவ்வித பலனையும் எதிர்பாராத அன்புடனும் செயலாற்றியவரின் எடுத்துக்காட்டுகளில் நாம் துவக்குவோம். இவ்வழியில், நாம் இந்த நெருக்கடியிலிருந்து சக்திமிக்கவர்களாக வெளியேறுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட இரண்டாம் டுவிட்டரில் பதிவாகியிருந்தன.
Source: New feed