கற்பாறை மீதும், மணல் மீதும் கட்டப்பட்ட வீடுகள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மறையுரைச் சிந்தனை (ஜூன் 25)
இறைவார்த்தையை வாழ்வாக்குவோம்.
ஆங்கில இலக்கியத்தில் மிகப் பிரபலமான ஒரு கதை ‘Mutiny On The Bounty’ என்பதாகும். இதில் மியூடினி என்ற நகரைச் சேர்ந்த ஒருசில இளையோரும், பெண்களும் திருட்டுத்தனமானக மதுபானம் விற்றதால் பிட்கைர்ன் (Pitcairn) என்ற தீவில் கைதிகளாக அடைக்கப்படுகிறார்கள்.
அங்கே சென்றவர்கள் சும்மா இருக்கவில்லை. வழக்கம்போல தங்களுடைய சேட்டையைச் செய்யத் தொடங்கினார்கள். ஒருமுறை அவர்களாகவே மதுபானம் தயாரித்துக் குடித்ததில், அந்தக் குழுவில் இருந்த எல்லாருமே இறந்துபோனார்கள். அலெக்ஸ்சாண்டர் ஸ்மித் என்ற ஒரே ஒரு இளைஞன் மட்டுமே உயிர்பிழைத்தான்.
ஒருநாள் அவன் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது விவிலியம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை முழுமையாக வாசிக்கத் தொடங்கினான். விவிலியம் தந்த உத்வேகத்தில் பிட்கைர்ன் என்ற தீவில் இருந்த மக்கள் யாவரையும் இறைவார்த்தைக்கு ஏற்ப கட்டியெழுப்பத் தொடங்கினான்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அமெரிக்கக் கப்பல் அங்கு வந்தது. அந்தக் கப்பலிலிருந்து இறங்கியவர்கள் அங்கு சிறைச்சாலை இருந்த அடையாளமே இல்லாதது கண்டு, திகைத்து நின்றார்கள். மேலும் அங்கே நோயாளிகள் என்றோ, படிக்காதவர் என்றோ யாரும் இல்லை. ஏனென்றால் அங்கே இருந்த யாவரும் கிறிஸ்துவை பற்றிய அறிவைப் பெற்றிருந்தார்கள். அந்த அறிவைப் பயன்படுத்தி தன்னுடைய வாழ்வையே மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தத் தீவே ஒரு சொர்க்கம் போன்று காட்சியளித்தது.
இறைவார்த்தையின்படி வாழும்போது ஒரு சமூகம் எப்படிப்பட்ட மாற்றம் அடைகிறது என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, யார் விண்ணரசுக்குள் செல்வார்? என்பதைக் குறித்துப் பேசுகிறார். “என்னை நோக்கி (இயேசுவை நோக்கி) ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே செல்வார்” என்று ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாகக் கூறுகின்றார். ஜெபங்களும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களும் மட்டும் ஒரு மனிதனை இறைவன் தரும் விண்ணரசுக்குள் கூட்டிச் சேர்பதில்லை, மாறாக இறைவார்த்தையின்படி/ தந்தைக் கடவுளின் திருவுளப்படி யாராரெல்லாம் நடக்கிறார்களே அவர்களே விண்ணரசுக்குள் செல்வார்கள் என்பது இயேசுவின் மிகத் தெளிவான போதனையாக இருக்கின்றது.
பல நேரங்கில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருசில ஜெபங்களைச் சொல்வதிலும், பக்தி முயற்சிகளில் ஈடுபடுவதிலும் மட்டுமே திருப்திப்பட்டுக் கொள்கிறோம். அதைக் கடந்து, வழிபாடு நம்முடைய வாழ்க்கையோடு ஒத்துப் போவதில்லை. அதனால்தான் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், “நம்பிக்கை செயல்வடிவம் பெறாவிட்டால், தன்னிலே உயிரற்றதாகும்” என்று (யாக் 2:17). நாம் நம்பியதை வாழ்வாக்கவில்லை என்றால், நமது நம்பிக்கை யாவும் வீணே. ஆதலால் இறைவார்த்தை நம்முடைய அன்றாட வாழ்வோடு ஒத்துப்போகும்படி வாழ்வோம்.
தொடர்ந்து ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேட்டு, இவற்றின்படி செயல்படும் எவரும், பாறையின்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். அதேவேளையில் நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவர்” என்று.
பாறையின் மீது கட்டப்பட்ட வீடு எப்போதும் உறுதியாக இருக்கும். மழையோ, புயலோ எதுவும் அதைத் தீண்டாது. ஆனால் மணல்மீது கட்டப்பட்ட வீடோ உறுதியற்று இருக்கும். அதற்கு எப்போது வேண்டுமானால் அழிவு ஏற்படும். இறைவார்த்தையைக் கேட்டு நடக்கும் யாவரும் பாறையின்மீது தன்னுடைய வீட்டைக் கட்டிய அளிவாளிக்கு ஒப்பானவர்களே. அவர்களை எந்த தீங்கும், துன்பமும் தீண்டாது.
ஆகையால் நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நமது அமைத்துக் கொள்வோம். அப்படி நடக்கும்போது நமது வாழ்வு பாறையின்மீது கட்டப்பட்ட வீட்டிற்கு ஒப்பாகும்; நாம் இறைவன் அளிக்கும் விண்ணரசை எளிதாகப் பெற முடியும்.
Source: New feed