இயேசுவின் திரு இருதயமானது உத்தரிப்புக் கடனாக வேதனைப்படுகிற திருச்சபைக்கு ஆறுதலும், உலகத்தில் போராடுகிற திருச்சபைக்கு அரசனும், அகில திருச்சபைக்கு மகிமையும் பாக்கியமுமாயிருக்கிறது. மோட்சமானது மாசில்லாத சேசுகிறிஸ்துவின் புகலிடமும், தெய்வீக பரிசுத்தத்தின் ஆலயமுமாக இருப்பதால், பாவதோஷத்தினின்று சுத்தப்படாத எந்த ஆத்துமமும் அங்கே பிரவேசிக்க முடியாது. தினமும் உலகத்தில் சாகிற இலட்சக்கணக்கான மக்களுள் பலர் அற்பப் பாவங்களோடும், அல்லது பொறுக்கப்பட்ட சாவான பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணாத நிலைமையோடும், தேவ சந்நிதானத்திற்கு முன் நிற்கிறார்கள்.
இந்த ஆத்துமங்களை ஆண்டவர் நரகத்துக்குத் தீர்வையிட மாட்டார். என்றாலும் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாமலும் மோட்சத்துக்குப் போகவும் முடியாது. சேசுவின் திரு இருதய அன்பானது ஒரு பக்கத்தில் அந்த ஆத்துமங்கள் மட்டில் குறைவான இரக்கமாயிருக்கத் தூண்டினாலும், மறுபக்கத்தில் தேவ நீதியானது முழுப் பரிகாரம் செய்ய கேட்கிறது. உத்தரிக்கிற ஸ்தல நெருப்பிலேதான் அந்த பரிதாபத்துக்குரிய ஆத்துமங்கள் தங்கள் பாவங்களுக்கும், அசட்டைத்தனத்துக்கும் பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் விசுவாசமும் பக்தியும் படிப்பிக்கிற படிப்பினை.
சேசுவின் திரு இருதய அன்பர்கள் இரண்டு தீர்மானம் செய்யவேண்டும். முதலாவது, சாவுக்குப் பிறகு இவ்வளவு துன்பங்களை வருவிக்கிற பாவங்களை இப்போதே வெறுத்துத்தள்ளி, அதிக பிரமாணிக்கமாகவும் உத்தமமாகவும் ஆண்டவருக்கு ஊழியம் செய்யவும், பிறரன்புக்கு விரோதமான வார்த்தைகளை விலக்கி, நமது வீண் மகிமை சுகபோகங்களை ஒறுத்து, ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், நாள்தோறும் மிக எளிதாய் நாம் கட்டிக்கொள்ளுகிற எல்லா அற்பப் பாவங்களையும் விட்டு விலக முயற்சிச் செய்ய வேண்டும்.
தவத்தாலும், நற்செயல்களாலும் நமது பாவங்களுக்கு இவ்வுலகத்திலேயே உத்தரிப்பது மிக எளிதாயிருக்கும். உத்தரிப்பு ஸ்தலத்தின் பயங்கரமான துன்பத்தில் அவைகளைப் பரிகரிக்கக் காத்திருப்பது அறியாமையாம். இரண்டாவது, உத்தரிக்கிற ஸ்தல நெருப்பில் வேதனைப்படுகிற நமது சகோதரர்களுடைய ஆத்துமங்களுக்கு ஆறுதலளித்து அவைகளை அந்த இடத்திலிருந்து விடுவிக்க நம்மாலான முயற்சி செய்ய வேண்டும். “என் மேல் இரங்குங்கள். என் நண்பர்களே! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்.
ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது” (யோபு 19: 21 என்று அந்த ஆத்துமாக்களிடத்திலிருந்து எழும்புகிற இந்த பரிதாபத்துக்குரிய வார்த்தைகள் நமது காதில் விழுகிறதில்லையா?. ஒரு சிநேகிதன் அல்லது ஓர் அயலான், எரிகிற காளவாயில் விழுந்ததை நீ கண்டால், நீ உடனே ஓடி சென்று அவனை அந்த நெருப்பிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பாயல்லவா? இதேவிதமாய் அந்த ஆத்துமாக்கள் விஷயத்திலும் நடந்துகொள். தங்களுக்குத் தாங்களே செய்யக்கூடாத உதவியை நீ அவர்களுக்குச் செய்ய வேண்டும்.
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிபுரிய நமது கையில் திருச்சபையானது கொடுத்திருக்கிற பிரதான கருவி திருப்பலி, செபமாலையும், நற்செயல்களுமாகும். அர்ச். பிரான்சிஸ் சவேரியாருடைய சரித்திரத்தில் நாம் வாசிப்பதென்னவென்றால், இந்தப் புனிதர் நாள்தோறும் மாலையில் சில சிறுவர்கள் கையில் ஜெபமாலை மணியைக் கொடுத்து தெருக்கள் வழியே கூட்டிக் கொண்டுபோய் பாவிகளுக்காகவும், உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காகவும் வேண்டிக்கொள்ள வாருங்கள் என்று சொல்லச் செய்வார். இந்த உத்தம் பக்திமுயற்சியை நாமும் நாள்தோறும் செய்வது நல்லது. ஏனென்றால் சில வேளை அந்த ஆத்துமாக்களில் சிலர் நமக்குத் தெரிந்தவர்களாயிருக்கலாம். வேறு சிலர் நமது நிமித்தம் அங்கே வேதனைப்படுகிறவர்களாயிருக்கலாம்.
சேசுவின் திருஇருதயப் பக்தர்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வேதனை குறைந்து மோட்சபாக்கியம் சேர இத்தனை எளிதான பல வழிகளை உபயோகிக்க நல்ல தீர்மானம் செய்யக்கடவார்களாக.
அந்த ஆத்துமங்களுக்கு உதவியான வழிகளிலெல்லாம் மேலான வழி ஏதென்றால், அவர்களுக்காக திருப்பலி நிறைவேற்றி சேசுகிறிஸ்துவின் திரு இரத்தப் பலன்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாகும். பல கிறிஸ்தவர்கள் உன்னதமான இந்த வழக்கத்தை முன்னிட்டு அந்த ஆத்துமங்களின் பாவ மன்னிப்புக்காக பல திருப்பலி நிறைவேற்றி வருகிறார்கள். இச் செயல்பாடுகள் சேசுவின் திரு இருதயத்துக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதுமல்லாமல், ஆத்துமாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன.
சில கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து அடக்கச் சடங்கில் பங்கு கொள்ளச் செய்து திருப்பலி நிறைவேற்றி ஆடம்பரமாய் சிமித்தேரியில் நல்லடக்கம் செய்வார்கள். இதோடு நின்று விடுவார்கள். பிறகு அவர்களைப்பற்றி நினைப்பதே இல்லை; இது சரியல்ல. இவ்விதம் அவர்களை மறந்துவிடாமல், அவர்கள் இறந்த ஆண்டு, நினைவுநாள், நவம்பரில் ஆத்துமாக்கள் திருநாள் போன்ற நாட்களில் அவர்களுக்காக திருப்பலி நிறைவேற்றுவதோடு, கல்லறையை அலங்கரித்து குருவானவரை அழைத்துச் சென்று செபிக்கவும் வேண்டும். மேலும் தொடர்ந்து அந்த ஆத்துமத்தின் இளைப்பாற்றிக்காகவும், அக்குடும்ப நலனுக்காகவும் இடையிடையே திருப்பலி நிறைவேற்றுவதும் தான் தர்மம் செய்வதும் சிறந்த வழக்கமாகும். நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவினர்களை நாம் மறவாமல் நன்றியுடன் அன்பு செய்து வருகிறோம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கும் சிறந்த நன்மாதிரிகையாய் இருக்கும்.
இப்படி உன்னுடைய உறவினர் அன்பர்களுடைய ஆத்துமங்களை மோட்சம் சேர்க்க முயற்சிக்கும் போதுதானே அந்த உத்தரிப்பு ஸ்தலத்தில் யாவராலும் மறந்து கைவிடப்பட்ட பல எழைகளுடைய ஆத்துமங்களை மறந்துவிடக்கூடாது. இவ்வுலகத்திலுள்ள தங்கள் அன்பர்களால் கைவிடப்பட்டு வேதனை அநுபவிக்கிற அந்த ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள், பலன்களை அடைந்து ஒப்புக்கொடு, திருப்பலி நிறைவேற்றப் பார். உன்னால் மோட்ச இராச்சியம் சேர்ந்த அந்த ஆத்துமங்கள் உனக்கு மிகவும் நன்றியறிந்திருப்பார்கள். தங்களுக்குத் தாங்களே உத்தரிக்கிற ஸ்தலத்தில் செய்துகொள்ளக் கூடாத உதவியை அவர்கள் உனக்குப் பிற்பாடு செய்வார்கள். சேசுவின் திருஇருதயத்திலிருந்து ஏராளமான அருட்கொடைகளையும் ஆசீர்வாதங்களையும் உனக்குப் பெற்றுக்கொடுப்பார்கள். கடைசியாய் அவர்கள் மோட்சத்திலிருக்கும் போது தங்களை உத்தரிக்கிற ஸ்தல வேதனையிலிருந்து காப்பாற்றின் தங்கள் உபகாரிகளுக்காக சர்வேசுரனிடம் வெகுவாய் பரிந்துரைப்பார்கள்.
ஆமென்.
Source: New feed