சேசுவின் திரு இருதயமும், பரிசுத்த தேவ நற்கருணையும்.
சேசு கிறிஸ்து திரு இருதய அன்பினால் ஏவப்பட்டு நமது ஆத்துமங்களுக்கு உணவாகவும், உயிராகவும் மீட்பாகவும் இருக்கும்படி நம்மோடுகூட பரிசுத்த தேவநற்கருணையில் வீற்றிருக்க ஆவல் கொண்டார். நமது மீட்பருடைய பரிசுத்த திரு சரீரத்தை நாம் இந்த திவ்ய நற்கருணையில் ஆராதித்து அன்பு செய்கிறோம். சேசுவின் திரு இருதய அன்பின் உயிருள்ள பலியான தேவ நற்கருணையில் மெய்யாகவே சேசுகிறீஸ்து நிறைந்து இருக்கிறார்.
தேவ நற்கருணைக்கும் தமது திரு இருதயத்திற்குமுள்ள ஒற்றுமையை நமக்கு காட்டும் பொருட்டு அர்ச். மார்கரீத் மரியா தேவ நற்கருணைக்கு முன்பாக ஆராதனை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் சேசுவின் திரு இருதயமானது மூன்று முக்கியமான காட்சிகளைக் கொடுக்க விரும்பியது.
தேவ நற்கருணைத் திருவிழாவின் எட்டாம் நாளைத் தெரிந்து கொண்டு அன்பில் நிறைந்த சேசுவின் திரு இருதயம் அர்ச். மார்கரீத் மரியாவை நோக்கி, மனிதர்களை முழுமையாய் அன்பு செய்த இந்த இருதயத்தை இதோபார் என்று காண்பித்து கூறியதாவது
மகளே, உனக்கு எத்தனை தடவை நற்கருணைப் பெற்றுக் கொள்ள அனுமதி கிடைக்கிறதோ, அத்தனை தடவையும் நற்கருணைப் பெற்றுக்கொள். விசேஷமாய் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் நற்கருணைப் பெற்றுக்கொள். வருடாவருடம் மிகுந்த ஆடம்பரத்தோடு நமது திரு இருதயத் திருவிழாவைச் சிறப்பித்து அன்று பரிகார நற்கருணை பெற்று ஒப்புக்கொடு.
நல்ல கிறிஸ்தவர்களையும், பக்தியுள்ள ஆன்மாக்களையும் ஏமாற்றும் பொருட்டு, பரிசுத்த தேவநற்கருணைக்கு மிகுந்த வெளி மரியாதையைக் காண்பித்து அதற்குப் புகழ்ச்சியாக இனிமையான பாடல்களையும், செபங்களையும் ஏற்படுத்து. ஒரு பக்கத்தில் கடவுளுடைய மகிமைக்கும் அவருடைய பரிசுத்தத்தனத்தையும், நீதியையும் எடுத்துக்காட்டி வேறோர் பக்கத்தில் மனிதர்கள் இந்த பரிசுத்த தேவனை அண்டிப் போகாமல் துர்ப்பாக்கியசாலிகளாக இருக்கிறார்களென்பதை ஞாபகப்படுத்தி, தேவ நற்கருணையை விட்டு ஆத்துமாக்களைப் பிரித்து வந்தார்கள்.
தேவ நற்கருணை நம்முடைய அன்றாட உணவாகவும், நமது ஆத்துமத்தின் உயிராகவும் இருந்து நமது இருதயத்தை பரிசுத்தப்படுத்தி தேவ வரப்பிரசாதங்களினால் அதை அலங்கரித்து, தமது திரு இருதயத்தில் அளிக்கிற தேவ சினேக அன்பு சுடரால் நிரப்புவதற்காகவே சேசுகிறிஸ்து இந்த அருட்சாதனத்தை உருவாக்கினார். ஆதலால் தேவ நற்கருணை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் சுறுசுறுப்பு, தேவ அன்பு திரு இருதயப் பக்தியை அர்ச். மார்கரீத் மரியாவுக்கும் உலகத்துக்கும் வெளியிட்டு மனிதர்களுடைய இதயங்களில் தேவ அன்பில் பற்றுக் கொள்ளச் செய்தார். சேசுவின் திரு இருதயப் பக்தியானது எந்தெந்தப் பங்குகளில் விளங்கி வருகிறதோ அந்தப் பங்குகளிலெல்லாம், முன் தேவ நற்கருணையின் பால் அக்கறைக் கொள்ளாத பல கிறிஸ்தவர்கள் அடிக்கடி இன்னும் நாள்தோறும் தேவ நற்கருணை பெற்று வருகிறார்கள். இது தவிர, பல இடங்களில் மாதத்தின் முதல் வெள்ளியானது சகலமும் பரிகாரமாகப் பொது நற்கருணை பெற்றுக் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பரிசுத்த திருத்தந்தையரின் விருப்பப்படி தினமும் அல்லது அடிக்கடி உட்கொள்ளுகிற இந்த தேவ நற்கருணையிலிருந்து அடையக்கூடிய பலன்களையெல்லாம் பல கிறிஸ்தவர்கள் உயிருள்ள விசுவாசமில்லாமலும், தக்க ஆயத்தம் இல்லாமலும் இந்த அருட்சாதனத்தை உட்கொள்ளுகிறார்கள். சிலருக்கு நற்கருணை உட்கொள்ளுவது வழக்கம். வேறு சிலருக்கு தேவ நற்கருணை உட்கொள்ளுவது ஒரு சடங்கு. நற்கருணை வாங்கிய பிறகு பலர் சரியான நன்றி செலுத்துவதில்லை. சேசுவின் திரு இருதயத்திற்குத் தங்களைத் திரும்பவும் ஒப்புக் கொடுக்கிறதில்லை.
மேற்கூறிய கிறிஸ்தவர்களைப் போல் நாமும் நடக்கக் கூடாது. தக்க ஆயத்தத்தோடும் உயிருள்ள விசுவாசத்தோடும் முன்மாதிரியோடும் தேவ நற்கருணையை நாடிச் செல்ல வேண்டும்.
செயல்.
உன் இதயமானது ஆண்டவர் குடியிருக்கும் ஆலயமென்று எப்போதும் நினைத்து அதை எந்த ஒரு சிறிய மாசும் இல்லாமல் காப்பாற்றுவாயாக.
சேசுவின் திருஇருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய திவ்ய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திருஇருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான் தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
Source: New feed