பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திங்கட்கிழமை
யோவான் 16: 29-33
“உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவோடு இருங்கள்”
நிகழ்வு
உலகில் எதற்குத் துன்பம் இருக்கின்றது என்பதற்குப் பிரபல இரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் சொல்லக்கூடிய கதை இது.
ஒரு காட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் சற்று வித்தியாசமானவர். பறவைகள், விலங்குகள் பேசக்கூடிய மொழிகள்கூட இவருக்கு நன்றாக விளங்கும். ஒருநாள் இவர் ஒரு பெரிய மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு கழுகும் புறாவும் பாம்பும் மானும் வந்தன. அவை நான்கும் துறவி படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மரத்தடியில் வந்து நின்றுகொண்டு, ‘இந்த உலகில் எதற்கு இவ்வளவு துன்பங்கள். இந்தத் துன்பங்களுக்குக் காரணமென்ன?’ என்பது தொடர்பாகப் பேசத் தொடங்கின.
முதலில் கழுகு பேசத் தொடங்கியது. “இந்த உலகில் இருக்கின்ற எல்லாத் துன்பங்களுக்குக் காரணம் பசிதான். தேவையான அளவுக்கு எல்லாருக்கும் உணவு கிடைத்துவிட்டால் துன்பம் இல்லை. அந்த உணவு கிடைக்காதபொழுதுதான், அதைத் தேடி நாம் போகிறோம்; கடைசியில் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றோம்.” கழுகைத் தொடர்ந்து புறா பேசத் தொடங்கியது: “இந்த உலகில் உள்ள துன்பங்களுக்கெல்லாம் காரணம், அன்புதான். ஒருவரிடம் நாம் அன்பு செலுத்துகின்றோம். அந்த அன்புக்குப் பதில் அன்பு அவர் செலுத்தவில்லை என்றாலோ அல்லது நாம் அன்பு செய்பவருக்கு யாராவது ஒருவர் கெடுதல் செய்தாலோ நாம் அவரைப் பழிதீர்க்க நினைக்கின்றோம். இப்படித்தான் நமக்குத் துன்பம் வருகின்றது.”
புறாவைத் தொடர்ந்து பாம்பு தன்னுடைய கருத்தைச் சொல்லத் தொடங்கியது: “இந்த உலகில் உள்ள துன்பங்களுக்குக் காரணம் சினம்தான். யாரும் நம்மைச் சீண்டாத வரையில் நாம் சினம் கொள்வதில்லை. எப்பொழுது ஒருவர் நம்மைச் சீண்டுகின்றாரோ அப்பொழுது நாம் உணர்ச்சிவசப் பட்டு சினம் கொள்கின்றோம். அதனாலேயே துன்பங்கள் வருகின்றன.” எல்லாரும் தங்களுடைய கருத்தைச் சொல்லி முடித்தபின்பு மான் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தது: “இந்த உலகத்தில் இருக்கின்ற துன்பத்திற்குக் காரணம் பயம்தான். எங்கே நம்முடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுவோ என்று பயந்து பயந்து வாழ்கின்றோம். அந்தப் பயத்தில் நாம் செய்யும் செயல்களே, நம்மைத் துன்பத்தில் விழத்தாட்டி விடுகின்றன.”
இப்படி எல்லாரும் பேசி முடித்தபின்பு, அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த துறவி அவைகளிடம், “இந்த உலகில் நமக்கு வரும் துன்பங்களுக்குப் பசியோ, அன்போ, சினமோ, பயமோ காரணமல்ல, நாம் வெவ்வேறு இயல்புகளுடன் இருக்கின்றோம். அதுதான் காரணம். ஒருவேளை நாம் ஒரே இயல்புடன் இருந்தால் எந்தத் துன்பமும் வராது” என்று சொல்லி முடித்தார்.
நாம் ஒரே இயல்புடையவர்களாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்றாலும், நமக்கு எப்படியெல்லாம் துன்பங்கள் வருகின்ற என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
துன்பம் இருக்கத்தான் செய்யும்; ஆனாலும் துணிவோடு இருக்கவேண்டும்
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான துன்பம் இருக்கலாம். யோபு சொல்வது போன்று, “மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம்தானே! (யோபு 7:1). இத்தகைய போராட்டம், துன்பம் எல்லாருக்கும் உண்டு, அது இயேசுவின் சீடர்களுக்கும் உண்டு. இத்தகைய துன்பங்களைக் கண்டு நாம் சோர்ந்து போய்விடக்கூடாது. மாறாகத் துணிவோடு இருக்கவேண்டும். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்றார். நாம் துன்பங்களைக் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு காரணத்தையும் இயேசு சொல்கின்றார். அது குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உலகை வெற்றிகொண்ட இயேசு
உலகத்தில் எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக தன்னுடைய சீடர்களுக்குத் துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், துணிவோடு இருக்கவேண்டும் என்று சொன்ன இயேசு, அதற்கான காரணத்தை, “நான் உலகின் மீது வெற்றிகொண்டுவிட்டேன்” என்று சொல்கின்றார். இந்த உலகின்மீது இயேசு வெற்றிகொண்டு விட்டார் எனில், இவ்வுலகின் தலைவனாகிய சாத்தான் தண்டனை பெற்றுவிட்டான் (யோவான் 16: 31); அவன் வெளியே துரத்தப்பட்டுவிட்டான் (யோவா 12: 31). அதனால் துணிவோடு இருங்கள் என்கின்றார் இயேசு.
ஆகையால், நாம் இயேசு இந்த உலகை வெற்றிகொண்டுவிட்டார் என்ற நம்பிக்கையில், நமக்கு வருகின்ற துன்பங்களைத் துணிவோடு எதிர்கொள்வோம்.
சிந்தனை
‘வலிமை பெறு; துணிவு கொள்; அஞ்சாதே; அவர்கள் முன் நடுங்காதே’ (இச 31: 6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இயேசு இவ்வுலகை வெற்றி கொண்டுவிட்டார் என்ற நம்பிக்கையில், துணிவோடு வாழ்க்கையை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed