திருக்காட்சிக்குப் பின்வரும் வாரம்
வெள்ளிக்கிழமை
லூக்கா 5: 12-16
“இதை யாருக்கும் சொல்லவேண்டாம்”
நிகழ்வு
ஒருசமயம் நெருங்கிய நண்பர்கள் இருவர், நான்கு சக்கர வண்டியில் ஒரு சுற்றுலாத் தலத்திற்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள். வழியில் ஒரு மாடு குறுக்கே வரவே, வண்டி அதன்மீது மோதாமல் இருக்க, வண்டியை ஓட்டிச் சென்றவர் பிரேக்கை அழுத்தினார்; ஆனால், வண்டி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக இருந்த ஒரு பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. அந்நேரத்தில் அந்த வழியாக லாரியில் வந்த ஒருவர், தன்னுடைய வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பள்ளத்தில் கிடந்த வண்டியை நோக்கி ஓடினார். அவர் அங்கு சென்றபொழுது, வண்டியானது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனே அவர் வண்டியின் கதவைத் திறந்து, அதற்குள் கிடந்த இருவரையும் தூக்கி வெளியேபோட்டார். நல்லவேளை… அவர்கள் இருவரும் மயக்கமுற்றுக் கிடந்தார்களே ஒழிய, பெரிதாக அடிபடவில்லை.
இதற்கிடையில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் நான்கு சக்கர வண்டி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுக் கிடப்பதையும் அதற்குள் இருந்தவர்களை ஒருவர் தனியோர் ஆளாக இருந்து மீட்டு, வெளியே போடுவதையும் கண்டு, அங்கு விரைந்து வந்தார்கள். பலர் அங்கு வருவதைப் லாரி ஓட்டுநர், தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்று அங்கிருந்து விரைவாகக் கிளம்பிப் போனார். அவர் அங்கிருந்திருந்து சென்ற சிறிது நேரத்திற்குள் காவல்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் அடிபட்டு, மயக்கநிலையில் இருந்தவர்களுக்கு முதலுதவியைச் செய்து, அவர்களை மயக்கம் தெளிவுறச் செய்தார்கள். பின்னர் அவர்கள் அந்த இருவரிடமும், “உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர்களோ, தங்களுக்கு யாரென்று தெரியவில்லை என்றார்கள். சுற்றி இருந்தவர்களிடமும் காவல்துறையினர் கேட்டபொழுது, அவர்களும் தெரியாது என்றே சொன்னார்கள்.
இது இவ்வாறு இருக்கையில், லாரியில் வந்து அடிப்படுக் கிடந்தவர்களுக்கு உதவி செய்தவரோ, இருவரை ஆபத்திலிருந்து கப்பாற்றியிருக்கின்றேன் என்ற சிறிதளவு மமதைகூட இல்லாமல், வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றார்.
தான் செய்த உதவி யாவருக்கும் தெரியவேண்டும்; எல்லாரும் தன்னைப் பாராட்டவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு நடுவில், தான் செய்த உதவி யாருக்குமே தெரியாமல் பார்த்துக்கொண்ட இந்த நிகழ்வில் வருகின்ற லாரி ஓட்டுநர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவரை நலப்படுத்திய பின்பு, அவரிடம், “இதை யாரிடமும் சொல்லவேண்டாம்” என்று கூறுகின்றார். இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகள் நமக்கு என்ன செய்தியை உணர்த்துகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.
விளம்பரத்தை விருப்பாத இயேசு
இன்று பலர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களைப் போன்று எதைச் செய்தாலும் அதன்மூலம் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதைக் காணமுடிகின்றது. ஒரு குழல் விளக்கைக் கோயிலுக்குக் கொடுத்தாலும், அதில் இன்னாருடைய உபயம் என்று எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவில் இயேசு கிறிஸ்து சற்று வித்தியாசமானவர் என்றால் அது மிகையில்லை., இயேசு தாம் செய்த எதையும் மக்கள் பார்த்துப் பாராட்டவேண்டும் என்பதற்காகவோ, விளம்பரத்திற்காகவோ செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், விளம்பரமே இயேசுவுக்குத் தேவையில்லை. அப்படிப்பட்டவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்தியபின் அவரிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று சொன்னதில் வியப்பேதுமில்லை.
தன்னைக் குறித்துச் சொல்வது தனது பணிவாழ்விற்குத் தடையென உணர்ந்த இயேசு
இயேசு தொழுநோயிலிருந்து நலமடைந்தவரிடம், “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று சொன்னது, அவர் விளம்பரத்தை விரும்பாதவர் என்று ஒருவிதமான விளக்கமாக இருந்தாலும், தொழுநோயிலிருந்து நலம் பெற்ற மனிதர் தன்னைக் குறித்து மற்றவரிடம் சொன்னால், அவர்கள் தன்னை ஒரு வல்ல செயல்களை நிகழ்த்துபவராகவும் அருமடையாங்களை நிகழ்த்துபவராகவுமே பார்க்கக்கூடும்… அது துன்புறும் மெசியாவாக இருந்து, இறையாட்சிப் பணியைச் செய்யும் தனக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்று இயேசு அவரிடம் அவ்வாறு சொல்கின்றார்.
ஆனால், இயேசு அந்த மனிதரிடம் சொன்னதற்கு மாறாக, அவர் எல்லாரிடமும் சொல்கின்றார். இதனால் இயேசு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குப் போகவேண்டிய நிலை ஏற்படுகின்றது. சில சமயங்களில் நாம் ஆர்வ மிகுதியால் இயேசு நம்மிடம் சொல்லாததையும் செய்துகொண்டிருக்கின்றோம். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் இயேசு நம்மிடம் சொன்னதன்படி நடக்கக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்’ (யோவா 2: 5) என்று மரியா பணியாளர்களைப் பார்த்துக் கூறுவார். எனவே நாம் இயேசு நம்மிடம் சொன்னபடி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed