பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம்
திங்கட்கிழமை
லூக்கா 8: 16-18
விளக்குத் தண்டின்மீது வைக்கப்படவேண்டிய விளக்கு
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஊடவியலாருமான மால்கம் முக்கேரிட்ஜ் (Malcolm Muggeridge 1903 – 1990) தன்னுடைய ‘Something Beautiful for God’ என்ற நூலில் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்ச்சி.
மால்கம் முக்கேரிட்ஜ், கல்கத்தாவில் உள்ள ‘சாகும் தருவாயில் இருப்போர்க்கான இல்லத்தில்’ (Home for the Dying) பணிசெய்துகொண்டிருந்த அன்னை தெரசாவையும் அவர் ஆற்றி வந்த பணிகளையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் குறித்து ஒரு குறும்படம் எடுப்பதற்குத் தீர்மானித்தார். அதன்படி அவர் தன்னுடைய படக்குழுவினரோடு கல்கத்தாவில் உள்ள அன்னையின் இல்லத்திற்கு வந்தார். அவர் அங்கு வந்தபோது, அன்னைத் தெரசா தன்னுடைய சபை அருள்சகோதரிகளோடு வீதிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த முதியோர்களை அள்ளியெடுத்து, அவர்கட்கான இல்லத்தில் கொண்டுபோய் வைத்தார். இதைக் கண்ட மால்கம் முக்கேரிட்ஜும் அவருடைய படக்குழுவினரும் ஒரு நிமிடம் வியந்து போனார்கள்.
பின்னர் மால்கம் முக்கேரிட்ஜ், தான் கூட்டிக்கொண்டு வந்த படக்குழுவினரோடு சேர்ந்து, அன்னை தெரசா, வீதிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த முதியோர்களை அள்ளியெடுத்துக் கொண்டு வருவதையும் அவர்களை அவர் அவர்கட்கான இல்லத்தில் கொண்டு போய் வைப்பதையும் அப்படியே படமாக்கினார். அப்பொழுது அவர்க்கு ஒரு சிக்கல் எழுந்தது. அது என்ன சிக்கலெனில், சாகும்தருவாயில் இருந்தோர்க்கான இல்லத்தில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருந்ததால், அன்னை தெரசா அந்த இல்லத்திற்குள் செய்துவந்த பணிகளை அவரால் சரியாகப் படமெடுக்க முடியவில்லை. அந்த இல்லத்தின் ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்தின் துணைகொண்டுதான் அன்னை தெரசா அங்கிருந்தவர்கட்குச் செய்துவந்த பணிகளைப் படமாக்கினார்.
அந்தக் காட்சிகளையெல்லாம் அவர் படமாக்கியபோது, ‘போதுமான வெளிச்சம் இல்லாததால், இக்காட்சிகளெல்லாம் திரையில் சரியாக வராது’ என்ற எண்ணத்தோடுதான் படமாக்கினார். எல்லாவற்றையும் படமாக்கியபின்பு மால்கம் முக்கேரிட்ஜும் அவருடைய படக்குழுவினரும் தாங்கள் படமெடுத்ததைத் திரையில் ஓட்டிப்பார்த்தபோது, வெளியே அவர் படமாக்கிய காட்சிகளைவிடவும், போதுமான வெளிச்சமில்லாத இல்லத்திற்குள் படமாக்கிய காட்சிகள் மிகவும் பிரமாதமாக – பிரகாசமாக இருந்தன. அதிலும் அன்னை தெரசாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருப்பதையும், அது அவர் இருந்த பகுதியைப் பிரகாசமாக்கியதையும் கண்டு மால்கம் முக்கேரிட்ஜ்ஜும் அவருடைய படக்குழுவினரும், ‘அன்னை தெரசா சாதாரண ஒரு பெண்மணி கிடையாது… அவர் இறைவனுடைய ஆசியை நிரம்பப்பெற்றவர்’ என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டனர். இது நடந்து ஏறக்குறைய பதினோரு ஆண்டுகள் கழித்து, மால்கம் முக்கேரிட்ஜ் கத்தோலிக்கத் திருஅவைக்கு மாறினார்.
யாரெல்லாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் விட்டுச்சென்ற அன்புப் பணியினைத் தொடர்ந்து செய்கின்றார்களோ, அவர்களைச் சுற்றி எப்போதும் ஒளிவட்டம் இருக்கும், ஏன், அவர்களே இந்த உலகிற்கு ஒளியாக இருப்பார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகம், நம்மிடம் இருக்கும் ஒளியை அல்லது கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் ஒளியை எல்லார்க்கும் பயன்படும் வகையில் கொடுக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஒளி கொடுக்கத்தான் விளக்கே ஒழிய, மூடி மறப்பதற்கு அல்ல
நற்செய்தியில் இயேசு, ‘எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோர்க்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பர்” என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கப்படவேண்டியவையாக இருக்கின்றன.
மத்தேயு நற்செய்தியில் இயேசு, “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்’ (மத் 5: 13) என்பார். அந்த அடிப்படையில், நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருக்கின்றோம்… ஒளியாக இருக்கவேண்டும். ஆனால், திருஅவை மெல்ல வளர்ந்து வந்த அந்தக் காலக்கட்டத்தில், ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கொடுத்த அச்சுறுத்தல்கட்கு அஞ்சி, பலர் கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்க மறுத்தார்கள். இந்தப் பின்னணியில் மேலே இயேசு சொன்ன வார்த்தைகளைச் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும்.
இயேசுவால் உலகிற்கு ஒளியாக இருக்க அழைக்கப்பட்ட நாம், எத்தகைய இடர் வரினும், துன்பம் வரினும் உலகிற்கு ஒளியாக இருந்து எல்லார்க்கும் ஒளி கொடுக்கவேண்டும். அத்தகைய வாழ்க்கைதான் இயேசு நம்மிடம் விருப்பும் வாழ்க்கை. எனவே, நாம் யார்க்கும் அஞ்சி, நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின்படி வாழாமல் இருப்பதை விடுத்து, எவர்க்கும் அஞ்சாமல், கிறிஸ்தவ நம்பிக்கையின்படி வாழ்ந்து உலகிற்கு ஒளியாவோம்.
சிந்தனை
‘மானிடா நீ அவர்கட்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே’ (எசே 2: 7) என்று ஆண்டவர் எசேக்கியேல் இறைவாக்கினரைப் பார்த்துக் கூறுவார். ஆண்டவர் கூறிய இவ்வார்த்தைளை நமது உள்ளத்தில் தாங்கி, யாருக்கும் அஞ்சாமல், நம்முடைய நம்பிக்கையின் படி வாழ்ந்து, உலகிற்கு ஒளியாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed