உலகிலுள்ள ஏறத்தாழ 180 கோடி இளையோர், காலநிலை மாற்றத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவளித்து, நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று, ஐ.நா.வின் இளையோர் அமைப்பின் பிரதிநிதி Jayathma Wickramanayake அவர்கள் கூறியுள்ளார்.
நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், செப்டம்பர் 21, இச்சனிக்கிழமையன்று இளையோர் கால்நிலை உச்சி மாநாடு நடைபெற்றதையடுத்து இவ்வாறு அவர், வேண்டுகோள் விடுத்தார். இளையோர் ஆர்வலர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுவோர், இளம் தொழில் அதிபர்கள், மற்றும், மாற்றங்களை உருவாக்குவோர் ஆகியோர், இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
வெள்ளிக்கிழமை போராட்டம்
மேலும், காலநிலை மாற்றத்தின் மீது உலகத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி, சுவீடன் மாணவி கிரேட்டா துன்பர்க் அவர்கள், முன்னெடுத்த போராட்டத்தில், செப்டம்பர் 20, இவ்வெள்ளியன்று, இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு போராடினர்.
செப்டம்பர் 20 முதல் 27 வரை, உலகம் முழுவதிலுமிருக்கின்ற மாணவர்கள் எதிர்காலத்துக்காகப் போராட வேண்டும் என கிரேட்டா அவர்கள் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, கானடா, தென் கொரியா, சிலே, ஹங்கேரி உள்ளிட்ட 150க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில், மாணவர்கள் மட்டுமன்றி பணியில் இருப்பவர்களும், பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர்
16 வயது நிரம்பிய மாணவி கிரேட்டா அவர்கள், உலக வெப்பமயமாதலால் தனது எதிர்காலம் அபாயத்துக்குள்ளாவதை எண்ணி, வெள்ளிக்கிழமை தோறும், பள்ளியை புறக்கணித்து, சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன்பாக, பதாகையைத் தாங்கி, தனி ஆளாக போராடத் துவங்கினார். அடுத்த சில வாரங்களில், பல பள்ளி மாணவர்களும் அவருடன் போராட்டத்தில் இணைந்தனர். பின், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய இவர், முழுநேரமாக களத்தில் இறங்கினார். இவரது செயல்பாடு கவனம் பெற, சமூக வலைதளங்களில் பரவியது. (Agencies)
Source: New feed