இன்று உங்களுக்கென இந்த நேரத்தை நான் ஒதுக்கியதற்காக எனக்கு நன்றி கூறினீர்கள். தன் மந்தையாகிய இளையோரோடு இருப்பதைவிட ஓர் ஆயருக்கு வேறு என்ன முக்கிய வேலை இருக்கப்போகிறது? நீங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும், நம்ப வேண்டும். நீங்கள் இந்த நாட்டிற்கு மட்டுமல்ல, திரு அவைக்கும், முழு மனித குலத்திற்குமான நிகழ்காலமும் வருங்காலமும். நீங்களே இக்காலத்தின் மகிழ்வு. வாழ்வதில் இருக்கும் மகிழ்வை உங்களில் காண முடிகிறது. இணக்கமின்மைகளும் பிரிவினைகளும் மோதல்களும் காணப்படும் இன்றைய உலகில், பகிர்ந்து வாழும் மகிழ்வே ஒப்புரவை உருவாக்குகிறது. நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், வரலாற்றின் புதிய பக்கத்தைப் படைக்க நாம் அனைவரும் தேவைப்படுகிறோம்.
கனவுகள் நனவாவதற்கு
நீங்கள் என்னிடம் இன்று இரு கேள்விகளை முன்வைத்தீர்கள். என்னைப்பொறுத்தவரையில் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இளையோரின் கனவுகள் நனவாவதற்கு என்ன செய்யவேண்டும் எனவும், நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இளையோரை எவ்விதம் ஈடுபடுத்த முடியும்? எனவும் இரு கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள்.
வாழ்வின் வாக்குறுதியாக இருக்கும் நீங்கள், உங்கள் விடாமுயற்சியை யாரும் திருட அனுமதித்து விடாதீர்கள். கனவுகளை நனவாக்குவது எவ்விதம்? நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண எவ்வாறு உதவுவது என்ற இரு கேள்விகளுக்கும் என் பதில் இதுதான். உங்கள் பாராம்பரியங்களிலிருந்து கற்றுக்கொண்ட நல்லவைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை பிறர் திருட விடாதீர்கள். விடாமுயற்சியை கைவிட்டு விடாதீர்கள்.
பகைமை என்பது போரே
உங்களுள் பலர் கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வமுடையவர்கள் என்பதை நான் அறிவேன். அதிலிருந்தே ஓர் உதாரணத்தை உங்கள் முன் எடுத்துவைக்கிறேன். கருஞ்சிறுத்தை என்று அறியப்படும் உங்கள் நாட்டு கால்பந்தாட்ட வீரர் Eusébio da Silva, இளவயதில் பல பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கினாலும், மிக இளவயதிலேயே தந்தையை இழந்தாலும், அவரின் கால்பந்தாட்ட ஆர்வம் குறையவில்லை. அவரின் கனவுகளை யாராலும் தடைசெய்ய முடியவில்லை. கால்பந்தாட்டத்தின் மீதான அவரின் ஆர்வம், கனவுகளுடனும், விடாமுயற்சிகளுடனும் முன்னோக்கிச் செல்ல வைத்தது.
நாட்டிற்கு இளையோர் எவ்விதத்தில் உதவ முடியும் என்ற கேள்வியை எழுப்பினீர்கள். இப்போது செய்வதுபோல், எப்போதும் இணைந்து செயல்படுங்கள். பகைமை என்பது ஒரு சமுதாய எதிரி என்பதை மறந்துவிடாதீர்கள். பகைமையால், குடும்பங்களும், நாடுகளும், உலகமும் அழிவுக்குள்ளாகியுள்ளது. இவ்வுலகின் மிகப்பெரிய பகைமை என்பது போரே.
ஆகவே, சமுதாயத்தில் நட்புணர்வை வளர்த்துக்கொள்ள உழையுங்கள். மோதல்களின் இடையே இசைவின் கருத்துக்களை கண்டுகொண்டு பாலங்களை கட்டியெழுப்பி அமைதியை உருவாக்கி, சந்திப்பு கலாசாரத்தின் மேன்மையை அனுபவியுங்கள்.
பிறரோடு இணைந்து கனவு காணுங்கள், பிறருக்கு எதிராக அல்ல. நமது சிறந்த கனவுகள் நம்பிக்கை, பொறுமை, அர்ப்பணம் ஆகியவை வழியாகவே நிறைவேறுகின்றன. மரியா முட்டோலா வழங்கிய சாட்சியம் உங்கள் கண்முன் உள்ளது. மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் கிட்டவில்லையெனினும், அவர் மனம் தளரவில்லை. நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் சிட்னி ஒலிம்பிக்கில் பங்குபெற்றபோது, தங்கப்பதக்கத்தை வென்றார். பின் உதவித் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவுவதில் தன்னை ஈடுபடுத்தினார்.
வயது முதிர்ந்தவர்களுக்கு..
நம் கனவுகளில் நாம் விடாப்பிடியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதை விளையாட்டுக்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன. நான் ஒரு முக்கியமான விடயத்தை உள்ளங்களுக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். முதியோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களே நம் வேர்கள். நமக்குச் சொல்லித்தர அவர்களிடம் நிறையவே உள்ளன.
உங்களின் பாரம்பரிய இசையோடு, பிற இசையையும் கலந்து புதிய ஓர் இசையை நீங்கள் உருவாக்கியுள்ளதுபோல், முதியோரின் அனுவங்களையும் இணைத்து உங்களின் பாதையைச் செம்மைப்படுத்துங்கள். மேலும், நகர்களுக்கு வேலைத்தேடி வந்து, வேலையும், தங்குமிடமும் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவி புரிய மறவாதீர்கள்.
அண்மைய காலத்தில் இரு பெரும்புயல்களால் இந்நாடு துன்பங்களை அனுபவித்துள்ளது. நம் பொது இல்லமான இந்த உலகை காப்பதற்கான ஆர்வத்தையும் அர்ப்பணத்தையும் இளையோரில் காண்கிறேன். இவ்வுலகமெனும் வீடு நம் அனைவருக்குமானது.
நான் இறுதியாக ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடவுள் உங்களை அன்பு கூர்கிறார். இது அனைத்து மத பாரம்பரியங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அன்பை நீங்களும் அனுபவியுங்கள். இந்த அன்பால், ஒப்புரவு இயலக்கூடியதாகின்றது. இந்த அன்பில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதால், நீங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும், அமைதியின் பாதையில் நடைபோடமுடியும். எனக்காகச் செபிக்க மறவாதீர்கள்.
Source: New feed