இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார்.
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.
பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார்.
அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழாவின் எட்டாம் நாள் அவரை ‘விண்ணரசி’ எனக் கொண்டாடுகின்றோம்.
‘அரசன்’ என்றவுடன் நமக்குச் சில நேரங்களில் வரும் கோபம், எரிச்சல், எதிர்ப்பு, ‘அரசி’ என்றவுடன் வருவதில்லை. ‘அரசி’ ஆக்ச்சுவலா ஒரு நல்ல நிலை. ‘அரசனுக்கு’ கடமைகளும் உண்டு, உரிமைகளும் உண்டு. ஆனால், ‘அரசிகளுக்கு’ உரிமைகள் மட்டும்தான். கடமைகள் கிடையாது. போரில் ஒரு நாடு தோற்றால் அது அரசனின் பொறுப்பே தவிர, அது அரசியின் பொறுப்பு அல்ல. அரசன் போர்க்களத்தில் இருக்க, அரசி ப்யூட்டி பார்லரில் இருந்த நிகழ்வுகள் வரலாற்றில் இருக்கின்றன.
‘அன்னை மரியாளை’ ‘அரசி’ என நாம் அழைப்பதன் பொருள் என்ன?
நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38) மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என வானதூதரிடம் சொல்கிறார். இவர் ‘அடிமை’ என்று சொன்னதால்தான், இவர் ‘அரசி’ ஆனார் என்று சொல்வதைவிட, இவர் ‘அரசி’யாக இருந்ததால்தான், தன்னை ‘அடிமை’ என்று சொன்னார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.
அதாவது, கபிரியேலிடம் தான் ‘அடிமை’ என்று சொன்னதால், மரியாளின் வேலை அடிமைக்குரிய வேலை அல்ல. மாறாக, ‘கன்னியாக’ இருந்தவள் ‘தாய்’ ஆகிறாள். இதுதான் முதல் அரசி நிலை. ‘கலக்கம்’ மறைந்து வாழ்வில் ‘தெளிவு’ பெறுகிறார். இது இரண்டாம் அரசி நிலை. கடவுளால் இயலாதது எதுவும் இல்லை என்றால், கடவுளின் மகனால் இயலாததும் எதுவும் இல்லை. அந்த மகனையே இவர் தன் உதரத்தில் ஏற்கிறார். ஆக, இவரால் ஆகாததும் ஒன்றும் இல்லை. இது மூன்றாவது அரசி நிலை.
ஆக, தனக்குக் கீழ் அனைத்தையும் பெற்றுக்கொண்ட மரியா தன்னை அதற்குக் கீழ் வைக்கிறார். அதுதான் அவரது அரசி நிலையின் அழகு. ஆக, மேலினும் மேல் பார்க்கும் உலகில், கீழினும் கீழ் பார் என்று மாற்றுப்பார்வைக்கு வித்திடுகிறார் இந்த மாதரசி, மங்கையர்க்கரசி, இளவலரசி.
நாளைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 9:2-4,6-7) மகிழ்ச்சி என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. வழக்கமாக, ‘அரசனைப் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்று நாம் சொல்வோம். மகிழ்ச்சி என்பது நிறைவின் வெளிப்பாடு. நிறைவு என்பது அரசனுக்கு மட்டுமே சாத்தியம் என்பதே இப்புரிதலின் பின்புலம்.
‘அறுவடை நாள் மகிழ்ச்சி,’ ‘கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது’ மகிழ்ச்சி என இரண்டு உருவகங்களைப் பார்க்கிறோம். இந்த இரண்டு உருவகங்களிலும் சொல்லப்படுவது என்னவென்றால், ‘துன்பத்துக்குப் பின் மகிழ்ச்சி’தான். ஆக, துன்பம் அல்லது வலி என்பது மகிழ்ச்சியின் தேவையை இன்னும் அதிகம் உணரச் செய்கிறது.
மரியாள் தன்னை அடிமை என்று ஆக்கியபோது, அவரிடம் வருத்தமோ, பயமோ இல்லை. மாறாக, தான் தன் கையில் இருக்கும் சூழலின் அரசி என தன் வாழ்க்கையைத் தன்னில் எடுக்கிறார். இன்னும் அதிக பொறுப்புணர்வுடன் செயலாற்றுகிறார்.
பொறுப்புகள் கூடக்கூட தலைமைத்துவம், மேன்மை கூடும்.
நாம் கொண்டாடும் விண்ணரசி மரியா நம் வாழ்வை நாம் அரசாள நமக்குக் கற்றுத்தருவாராக!
Source: New feed