பாஸ்கா காலம் நான்காம் வாரம்
திங்கட்கிழமை
யோவான் 10: 1-10
ஆடுகள் வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு வந்த இயேசு
நிகழ்வு
மோன்டேய்ஸ் என்றொரு குருவானவர் இருந்தார். அவர் மெக்சிக்கோவில் இருந்த ஒரு பங்கில் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தார். மக்களை நம்பிக்கை வாழ்வில் கட்டியெழுப்பிய அவரை எல்லாருக்கும் பிடித்துப்போனது. இப்படிப்பட்ட சமயத்தில் மெக்சிக்கோ அரசாங்கமானது, நாட்டில் எங்கேயும் கிறிஸ்தவ ஆலயங்களோ, ஆலய வழிபாடோ நடைபெறக்கூடாது என்ற ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து பல இடங்களில் ஆலய வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் அருட்தந்தை மோன்டேய்ஸ் மட்டும் யாருக்கும் பயப்படாமல், ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவந்தார். இச்செய்தியானது அரசாங்க அதிகாரிகளுடைய செவிகளை எட்டியது. அவர்கள் படைவீரர்களுடன் வந்து, அருட்தந்தை மோன்டேய்சைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று போட்டுவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்குப் பின்பு அவர்கள், ‘அரசாங்க ஆணைக்குக் கீழ்ப்படியாமல் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்திவந்த அருட்தந்தை மோன்டேய்சை கொன்றுபோட்டு விட்டதால், இனிமேல் யாரும் ஆலய வழிபாடு நடத்தமாட்டார்கள்’ என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அருட்தந்தை மோன்டேய்ஸ் கொல்லப்பட்ட அதே நாளில், அதே பங்கில் இன்னொரு குருவானவர் யாருக்கும் அஞ்சாமல் ஆலய வழிபாடுகளை நடத்தத் தொடங்கினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அரசாங்க அதிகாரிகள் ‘சாவுக்கு அஞ்சாத இதுபோன்ற அருட்தந்தையர்களை ஒன்றும் செய்ய முடியாது… ‘ஆலயங்கள் இருக்கக்கூடியது, ஆலய வழிபாடு நடக்கக்கூடாது’ என்று நாம் சொல்லச்சொல்ல இவர்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருப்பார்கள்’ என்று முன்பு விடுத்திருந்த அரசாங்க ஆணையை இரத்து செய்தார்கள்.
கிராஹாம் ஹில் எழுதிய ‘The power of glory’ என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வில் வரும் இந்த அருட்தந்தையர்கள், மெக்சிக்கன் திருஅவை அல்லது கிறிஸ்துவின் மந்தை இறைநம்பிக்கையில் வளரவும் இறையன்பிலும் பிறரன்பிலும் வாழவும் தங்களுடைய வாழ்வையே தர முன்வந்து, நல்ல ஆயர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள். இன்றைய நற்செய்தி வாசகமும் ஆடுகள், வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு தன்னையே தந்த நல்லாயன் இயேசுவைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
திருடர்களைப் போன்று செயல்பட்ட இஸ்ரயேல் தலைவர்கள்
யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் இயேசு, “நானே வாயில்” என்று சொல்லிவிட்டு, தனக்கு முன்பாக இருந்த ஆயர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதையும் தான் எப்படி இருப்பேன் என்பதை எடுத்துக் கூறுகின்றார். நாம் இயேசுவின் காலத்திற்கு முன்பாக ஆயர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை அறிந்துவிட்டு, நல்லாயன் இயேசு எப்படி இருந்தார்/ இருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வோம்.
இந்த நற்செய்திப் பகுதிக்கு முன்பாக இயேசு பிறவிலேயே பார்வையற்ற ஒருவரைக் குணப்படுத்தி இருப்பார். யூதத் தலைவர்களோ, “பிறவியிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று சொல்லி அவரைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள் (யோவா 9:34). இந்த ஒரு நிகழ்வு போதும், இயேசுவின் காலத்திற்கு முன்பாக ஆயர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு. மக்களை நல்லமுறையில் வழிநடத்தவேண்டிய ஆயர்கள் அல்லது யூதத் தலைவர்கள், பேராசையோடும் (லூக் 16:14) கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் (மாற் 12:40) ஆண்டவர் உறைந்திருக்கும் எருசலேம் திருக்கோவிலையே கள்வர் குகையாக மாற்றக் கூடியவர்களாகவும் (மத் 21: 13) இருந்தார்கள். இதனால்தான் இயேசு தன்னுடைய காலத்திற்கு முன்பாக இருந்த ஆயர்களை – யூதத் தலைவர்களை- திருடர்கள் என்று அழைக்கின்றார்.
தன்னுடைய மந்தை வாழ்வை நிறைவாகப் பெறுவதற்காக உயிரைத் தரும் நல்லாயன் இயேசு
தனக்கு முன்பாக இருந்த ஆயர்கள் எல்லாம் ஆயர்களே அல்ல என்று சொல்லும் இயேசு, தன்னை ஆடுகள் வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு வந்தவர் என்று குறிப்பிடுக்கின்றார்.
இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த ஆயர்கள் ஆடுகளை அறியாமலும் அவற்றை முன்னின்று வழிநடத்தாமலும் இருந்தபோது, நல்லாயனாம் இயேசு, ஆடுகளான தன் மக்களை நல்ல முறையில் அறிந்துவைத்திருக்கின்றார். அது மட்டுமல்லாமல், ஆடுகளுக்கும் முன்பாச் சென்று, அவைகளை நல்ல மேய்ச்சல் நிலங்களுக்கு இட்டுச் செல்கின்றார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆடுகளாகிய நமக்காகத் தன் உயிரையும் தருகின்றார். இதனால்தான் இயேசு நல்ல ஆயனாக இருக்கின்றார். ஆகவே, இப்படிப்பட்ட நல்ல ஆயன் தருக்கின்ற வாழ்வினைப் பெற நாம் ஒவ்வொருவரும் அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய வழியில் நடப்பது சாலச் சிறந்தது.
சிந்தனை
‘நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன் என்கிறார் ஆண்டவர்’ (எசே 43:15) என்கின்றது இறைவார்த்தை. ஆகவே, ஆடுகளாகிய நமக்கு எல்லாமுமாக இருக்கின்ற நல்லாயனின் குரல் கேட்டு, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed