பாஸ்கா காலம் மூன்றாம் வாரம்
திங்கட்கிழமை
யோவான் 6: 22-29
கடவுளுக்கேற்ற செயல் எது?
நிகழ்வு
ஒரு நகரில் செல்வரத்தினம் என்றொரு கல்லூரி மாணவன் இருந்தான். சாதாரண குடும்பத்தைத் சார்ந்த அவன், ஒருநாள் தன்னுடைய பெற்றோரோடு ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த அவனுடைய உற்றார் உறவினர் யாவரும் மிகவும் ஆடம்பரமாக உடை உடுத்திப் பகட்டாக இருப்பதைப் பார்த்தான். இதைப் பார்த்த பிறகு அவனுடைய உள்ளத்தில், ‘நாமும் இவர்களைப் போன்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து, எல்லாரும் மெச்சக்கூடிய அளவுக்கு வாழவேண்டும்’ என்ற எண்ணமானது உதித்தது. அன்றிலிருந்து அவன் அதே சிந்தனையோடு வாழத் தொடங்கினான்.
கல்லூரிப் படிப்பை முடித்தபின்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கலாமா? என்று யோசித்தான். அப்படி யோசித்துக்கொண்டிருக்கையில், ‘அடுத்தவருக்குக் கீழ் வேலைபார்த்து, மாதாமாதம் சம்பளம் வாங்கிப் பெரியாளாவது என்பது முடியாத காரியம்… சொந்தமாகத் தொழில் தொடங்கினால்தான் நம்முடைய இலட்சியம் நிறைவேறும்’ என்ற யோசனை வர, சிறிய அளவில் ஒரு தொழில் தொடங்கினான். அதில் அவன் படிப்படியாக வளர்ந்து நல்ல நிலையை அடைந்தான். இதற்குப் பின்பு அவனுக்குத் திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். ஆனால், அவன் அதிகமாகப் பணம் சம்பாதிக்கவேண்டும், பெரிய ஆளாக என்ற முனைப்பில் மனைவி, பிள்ளைகள் எல்லாரையும் மறந்தான்.
ஒருகட்டத்தில் வேலை வேலை என்று அலைந்ததால் அவனுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவன் நகரில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவனுக்குத் தீராத நோய் வந்திருப்பதாகச் சொன்னார்கள். இதைக் கேட்டு அவன் மிகவும் அதிர்ச்சியடைந்தவனாய், “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் என்னைக் குணப்படுத்துங்கள்” என்று கெஞ்சிக் கேட்டான். அவர்களோ அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள். ஆனால் சிகிச்சை எந்தவிதத்திலும் பயனளிக்காமல் போகவே, அவன் மிகக் குறைந்த வயதில் இறந்துபோனான்.
அழிந்து போகும் செல்வத்தைத் தேடி, கடைசியில் தன்னுடைய வாழ்வையே தொலைத்துக்கொண்ட இந்த செல்வரத்தினத்தைப் போன்றுதான் பலரும் அழிந்துபோகும் செல்வத்தைத் தேடி, வாழ்வையே தொலைத்து நிற்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை அழியா செல்வம் அல்லது அழியா உணவிற்காக உழைக்கவேண்டும் என்றோர் உயரிய அழைப்பினைத் தருகின்றது. நாம் அந்த அழியான செல்வம் அல்லது உணவினைப் பெற – கடவுளுக்கு ஏற்ற செயலாக – என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
அழிந்துபோவதைத் தேடி அலையும் மக்கள்
இயேசு ஐயாயிரம் பேருக்கு அப்பங்களைப் பகிர்ந்தளித்ததைத் (யோவா 6:1-15) தொடர்ந்து, மக்கள்கூட்டம் ‘இயேசுவுக்குப் பின்னால் சென்றால் எப்படியும் வயிறார உணவு கிடைக்கும்’ என்ற எண்ணத்தில் அவரைத் தேடி, கப்பர்நாகும் செல்கிறது. அப்பொழுதுதான் இயேசு தன்னைத் தேடிவந்த கூட்டத்திடம், “அழிந்துபோகும் உணவிற்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவிற்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்” என்கின்றார்.
மனித வாழ்விற்கு உணவோ, பணமோ தேவைதான். ஆனால், அவை மட்டுமே வாழ்க்கை கிடையாது. வாழ்வு அதைவிட அதி உன்னதமானது. இதைத்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, “உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகிறீர்கள்? நிறைவுதராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குச் செவிகொடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்” (எசா 55: 2-3) என்கின்றார். ஆகையால், அழிந்து போகின்ற உணவு, பணம் இன்னபிற காரியங்களைத் தேடி வாழ்வைத் தொலைப்பதற்குப் பதில் அழியா உணவை, அழியா செல்வத்தை, அழியா வாழ்வினைத் தரும் இறைவனுக்குச் செவிகொடுத்து, அதற்கேற்றாற்போல் வாழ்வது சாலச் சிறந்தது.
கடவுளுக்கேற்ற செயல் எது?
பணம், பொருள் இன்ன பிற காரியங்கள் எல்லாம் அழிந்துபோகக்கூடியவை என்று பார்த்தோம். அப்படியானால், அழியா உணவு எது? அதைப் பெற்றுக்கொள்ள ஒருவர் செய்வது? என்ற கேள்விகள் எழலாம். இக்கேள்விகளுக்கான பதிலைத்தான் இயேசு, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்” என்று சொல்கின்றார். இதன்மூலம் இயேசுவின்மேல் நம்பிக்கை வைப்பதுதான் அழியா உணவு அல்லது கடவுளுக்கு ஏற்ற செயல் என உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவின் காலத்தில் இருந்த யூதர்கள், அவரை நம்பாமல் அவர் தந்த அழியா வாழ்வினை உதறித் தள்ளினார்கள். நாம் அப்படிப்பட்ட தவற்றினைச் செய்யாமல், இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் தருகின்ற அழியா உணவு அல்லது அழியா வாழ்வினைப் பெறுவோம்.
சிந்தனை
‘இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு’ என்பார் யோவான் (1யோவா 5:13). நாம் அழிந்து போகின்ற உலக செல்வத்தின்மீது அல்ல, இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவர் காட்டிய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்
Source: New feed