இலங்கையில், முஸ்லிம் குடிமக்கள், புகலிடம் தேடுவோர் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கெதிராக பழிவாங்கும் செயல்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளது, FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு.
தங்கள் நாடுகளில் இடம்பெறும் சித்ரவதைகளுக்கு அஞ்சி, புகலிடம் தேடும் மக்களில் பலர், தற்போது குறிவைத்து தாக்கப்படுகின்றனர் எனவும், ஏறத்தாழ 900 பதிலடி தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், 150 பேர் காவல் நிலையங்களில் புகலிடம் தேடியுள்ளனர் எனவும், பீதேஸ் செய்தி கூறுகின்றது.
தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து பீதேஸ் செய்தியிடம் பேசியுள்ள, FABC கூட்டமைப்பின் தலைவரான, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், பயங்கரவாதம், காழ்ப்புணர்வுக்கு எரிபொருள் வழங்கி, இணக்கமின்மையை விதைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது, அதேவேளை, அன்பு, உடன்பிறந்த உணர்வு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவை, பயங்கரவாதத்தின் பகைவர்கள் என்று கூறியுள்ளார்.
வெறுப்பினால், அப்பாவி மக்களைக் குறிவைத்து தாக்கினால், நமக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ள கர்தினால் போ அவர்கள், ஆசியாவில், காழ்ப்புணர்வு மற்றும் சித்ரவதைகளால் துன்புறும் அனைவரோடும் ஆசிய ஆயர்களின் நெருக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில், சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், கடந்த காலத்தில், பாகுபாடுகளையும், சகிப்பற்றதன்மையையும், சித்ரவதைகளையும் அனுபவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள, கர்தினால் போ அவர்கள், ஒருவர் ஒருவர்க்கெதிராய் செயல்படுவது, சூழலை மேலும் மோசமாக்கும் எனவும் எச்சரித்துள்ளார்