இஞ்ஞாயிறு காலையில், தனது 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கினார். மூன்று நாள்கள் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில், முதலில் பல்கேரியா நாட்டில் இரண்டு நாள்கள் பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, மூன்றாவது நாளன்று, வட மாசிடோனியா செல்வார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு காலை 6.30 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமான நிலையத்தில் ஆல் இத்தாலியா நிறுவனப் பொறுப்பாளர்களை வாழ்த்தி, A321 ஆல் இத்தாலியா விமானத்தில், பல்கேரியத் தலைநகர் சோஃபியாவுக்குப் புறப்பட்டார். உரோம் நேரம் காலை 7 மணிக்கு, அதாவது இந்திய – இலங்கை நேரம் இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, விமான நிலையத்திலிருந்து திருத்தந்தை புறப்படும் வரை, பாதுகாப்பிற்காக, ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு, செபங்களும், வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்தியையும் திருத்தந்தை அனுப்பினார். சோஃபியா நோக்கி ஆல் இத்தாலியா விமானம் பறக்கத் தொடங்கியவுடன், திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், விமானத்தில் பயணம் செய்யும் பன்னாட்டு செய்தியாளர்கள் சார்பாக திருத்தந்தைக்கு காலை வணக்கம் சொல்லி வரவேற்றுப் பேசினார். குரோவேஷியா, போஸ்னியா-எர்சகொவினா, செர்பியா ஆகிய நாடுகளின் மீது விமானம் பறந்துசெல்கையில், அந்தந்த நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளை அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரண்டு மணி நேரம் பயணம் செய்து, பல்கேரியா நாட்டின் சோஃபியா நகர் விமான நிலையத்தை, உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை.
விமான நிலைய வரவேற்பு
விமான நிலையத்தில், பல்கேரியப் பிரதமர் Bojko Metodiev Borisov அவர்கள் திருத்தந்தையை வரவேற்றார். மரபு ஆடைகளை அணிந்திருந்த நான்கு சிறார், திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில், ஓர் அறையில், திருத்தந்தையும் பிரதமரும் தனியே சிறிது நேரம் கலந்துரையாடினர். நம் உலகில் விசுவாசத்தின் அடையாளமாக இருக்கும், மனிதராகிய தங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன், தாங்கள் அமைதிக்காகச் செபிக்கும் செபம், கிழக்கே உக்ரைன் வரையும், மேற்கு பால்கன் பகுதி வரையும் விரிந்துள்ள எம் பகுதிக்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று பிரதமர், திருத்தந்தையிடம் தெரிவித்தார். பின்னர், திருத்தந்தைக்கு, பல்கேரியத் தயிரைக் குடிக்கக் கொடுத்தார் பிரதமர். தான் அர்ஜென்டீனாவில் சிறுவனாக இருந்த சமயத்தில், பாட்டி தனக்கு முதன்முறையாக, பல்கேரியத் தயிரைக் கொடுத்தார் என திருத்தந்தை நினைவுகூர்ந்தார். மேலும், ஆர்த்தடாக்ஸ் புனிதக் குறியீடுகள், ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய ஆயர் ஆடை ஆகியவற்றையும் திருத்தந்தைக்கு அன்பளிப்பாக அளித்தார், பல்கேரியப் பிரதமர் Borisov.
இச்சந்திப்புக்குப் பின்னர், அங்கிருந்து 9.8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.