இவர் தச்சருடைய மகன் அல்லவா?
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.
அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை.
தொழிலாளரான புனித யோசேப்பு.
தச்சனின் மகன்.
இன்று உழைப்பாளர் தினம். இன்று தூய வளனாரை தொழிலாளர், உழைப்பாளி எனக் கொண்டாடி மகிழ்கிறது தாய்த்திருச்சபை.
அம்மா, அப்பாக்கள் சாதாரண கூலி வேலை செய்வதை பிள்ளைகள் அவ்வளவு எளிதாக வெளியில் சொல்வதில்லை. ஒரு டாக்டரின் மகன், ஒரு பொறியாளரின் மகன், ஒரு வழக்குரைஞரின் மகன், ஒரு ஆசிரியரின் மகன் என உள்ள வட்டத்தில் மில்லுக்கு வேலை செய்யும் ஒருவரின் மகன் இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். ‘உங்க அப்பா என்ன வேலை செய்றார்?’ என்ற கேள்விக்கு பெரும்பாலும் அவர் ‘மில் சூபர்வைசர்’ என்று பதில் சொல்வார்.
வேலையை நாம் அதன் கூலி மற்றும் செய்முறையை வைத்து நல்ல வேலை, கெட்ட வேலை என்று பிரித்துவிடுவதால்தான் அதைச் செய்பவர்களையும் நல்லவர்கள், கெட்டவர்கள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என பிரித்துவிடுகின்றோம்.
‘இவர் தச்சனின் மகன் அல்லவா!’ இயேசுவைக் காயப்படுத்த அவரின் சமகாலத்தவர் கையாண்ட ஒரு பெரிய உத்தி அவரின் பழைய காலத்தை நினைவூட்டுவது. பழைய காலத்தை ஒருவருக்கு நினைவூட்டுவதன் மூலம், ‘நீ ஒன்னும் பெரிய ஆளு இல்ல!’ ‘நீ தச்சனின் மகன்தான்!’ ‘உனக்கு எப்படி விவிலியம் தெரியும்?’ ‘உனக்கு எப்படி திருச்சட்டம் தெரியும்?’ ‘உனக்கு எப்படி வல்லசெயல்கள் செய்யத் தெரியும்?’ என்று மறைமுகமாகக் கேட்டனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால் இயேசு ஒருபோதும் இதற்கு எதிர்வினை ஆற்றவே இல்லை.
‘ஆம். நான் தச்சனின் மகன்தான்’ என்று ஏற்றுக்கொள்வதுபோல இருக்கிறது அவருடைய மௌனம்.
மற்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். ஆனால் இயேசு தன்னை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவே இல்லை. தன்னை ஏற்றுக்கொள்பவரே தன்னை முழுமையாக வளர்த்தெடுக்க முடியும். வளர்த்தெடுத்த தன்னை மற்றவருக்குக் கொடுக்க முடியும்.
உழைப்பு சில காலம்தான் என்பதை நாம் உணர வேண்டும். 70 வருடம் வாழ்கின்ற வாழ்க்கையில் நாம் 25 முதல் 55 வரை வெறும் 30 ஆண்டுகள்தாம் உழைக்கிறோம். 25க்கு முன்னும் 55க்கு; பின்னும் நாம் உழைக்கவில்லை என்றாலும் நம் இயல்பில் ஒன்றும் குறைவுபடுவதில்லையே. ஆக, உழைப்பை இரசிக்கும் அளவுக்கு ஓய்வையும் நாம் இரசிக்க வேண்டும். பல நேரங்களில் ஓய்வு வேலை செய்வதற்கான தயாரிப்பு என பார்க்கப்படுகிறது.
ஆகையால்தான் உழைப்பை பற்றி பேசுகின்ற இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர், ‘ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்’ என்று வேண்டிவிட்டு, வேகமாக ‘எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்’ என்கிறார்.
உழைப்பின் தினமாகிய இன்று கடவுள் தந்த இந்த மனித உழைப்பிற்காக, மனித உழைப்பின் பிதாமகன் ஆதாமுக்காக நன்றி கூறுவோம்.
உழைப்பு மட்டும் இல்லையென்றால் கடவுளிடம் கையேந்துபவர்களாக நாம் நின்றிருப்போம். உழைப்பு மட்டுமே கடவுளோடு நம்மைக் கைகோர்க்க வைக்கிறது. உழைப்பால் நாம் கடவுளின் உடன்படைப்பாளர்கள் ஆகிறோம்!
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
Source: New feed