பாஸ்காக் காலம் முதல்வாரம்
வியாழக்கிழமை
லூக்கா 24: 35-48
“அமைதி உரித்தாகுக”
நிகழ்வு
பல இடங்களிலிருந்தும் வந்திருந்த இளைஞர்கள் மலையடிவாரத்தில் இருந்த ஒரு குருகுலத்தில் தங்கி, கல்வி கற்று வந்தனர். ஒருநாள் குருவானவர் அந்த இளைஞர்களுக்குப் – மாணவர்களுக்குப் – போட்டி ஒன்றினை அறிவித்தார். “மாணவர்களே! நாளை உங்களுக்கு ஓவியப்போட்டி ஒன்றினை நடத்தப் போகிறேன்… நீங்கள் என்னிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நீங்கள் வரையும் ஓவியத்தின் மூலம் அறிந்து கொள்வேன்… ஓவியப்போட்டிக்கான தலைப்பானது நாளை உங்களுக்குப் போட்டியின்போது அறிவிக்கப்படும்… நீங்கள் நாளைக்கு காலையில் ஓவியம் வரைவதற்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று கூறினார். மாணவர்களும் “சரி குருவே! நாளை நாங்கள் போட்டிக்கு தயாராக வருகிறோம்” என்று ஒருமித்த குரலில் கூறிவிட்டுச் சென்றனர்.
மறுநாள் மாணவர்கள் அனைவரும் ஓவியம் வரைவதற்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்தனர். குருவானவர் மாணவர்களிடம், “அமைதி பற்றிய உங்கள் சிந்தனையை ஓவியமாக வரையுங்கள்” என்றார். உடனே எல்லாரும் அமைதி பற்றிய ஓவியத்தினை வரையத் தொடங்கினார்கள். போட்டியின் இறுதியில் குருவானவர் ஒவ்வொரு மாணவரின் ஓவியத்தையும் பார்வையிட்டார். ஒரு மாணவன் அழகான ஏரியை வரைந்திருந்தான். மலையடிவாரத்தில் அந்த ஏரி இருந்தது. ஏரியில் மலையின் பிம்பம் அழகாகத் தெரிந்தது. மற்றொருவன் பூக்களை வரைந்திருந்தான். அப்பூக்களைப் பறிக்கத் தூண்டும் அளவுக்கு ஓவியம் தத்ரூபமாக இருந்தது. இன்னொருவன் அழகான புறாக்களை வரைந்திருந்தான். அவற்றின் அழகு குருவானவரைக் கவர்ந்திழுத்தது. இப்படி ஒவ்வொருவரும் ஓவியத்தை நன்றாகவும் அழகாகவும் வரைந்திருந்தனர். கடைசியாக இருந்த மாணவனின் ஓவியத்தைப் பார்த்த குருவானவர் அவனைக் கட்டியணைத்துக்கொண்டார்.
‘அப்படியென்ன ஓவியத்தை அந்த மாணவர் வரைந்திருக்கின்றார்’ என்று எல்லா மாணவர்களும் அந்த மாணவருடைய ஓவியத்தைப் பார்த்தனர். அதில், கடலில் வானம் கறுத்த மேகங்களுடன் இடி, மின்னலுடன் மழைபொழிவது போன்றும் காற்று பலமாக வீசுவது போன்றும் பறவைகள் பயத்துடன் பறப்பது போன்றும் அவற்றுக்கு நடுவில் ஒரு கப்பலானது நிதானமாகப் பிரச்சினைகளைச் சமாளித்து போன்றும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மாணவர்கள் அனைவருக்கும், “குருவே! அமைதி என்ற தலைப்பிற்கும் ஓவியத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே” என்றனர். அதற்குக் குருவானவர் அவர்களிடம், “மாணவர்களே! இவ்வோவியத்தில் கறுத்த மேகங்கள் கொண்ட கடல்… இடிமின்னலுடன் கூடிய மழை… நிதானமான கப்பல்… இதில் அமைதி எங்கே இருக்கிறது என்று தானே எண்ணுகிறீர்கள்?” என்றார். அவர்களோ ஒருமித்த குரலில், “ஆமாம் குருவே!” என்றார்கள்.
குருவானவர் தொடர்ந்து சொன்னார்: “பிரச்சினையும் போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல… பிரச்சினையும் போராட்டமும் இருக்கும் இடத்தின் நடுவே இருந்துகொண்டு எதற்கும் கலங்காமல், எதுவும் தன்னைப் பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு, உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி. இந்த மாணவர் வரைந்திருக்கும் ஓவியத்தில், நிதானமாக உள்ள கப்பல் பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. எனவே, இந்த ஓவியத்தை வரைந்த மாணவரே என்னிடமிருந்து பாடங்களை நன்றாகக் கற்றிருக்கிறார். இவருக்கு வாழ்த்துகள்.”
எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நிதானம் தவறாமல், அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
அமைதியை இழந்துநின்ற சீடர்களுக்கு அமைதியைத் தரும் இயேசு
நற்செய்தியில், சீடர்கள் அனைவரும் ‘நிகழ்ந்த யாவற்றையும்’ குறித்து ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்று வாழ்த்துகிறார். இயேசு இவ்வாறு வாழ்த்தியதைக் கேட்டு, சீடர்கள் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, திகிலும் அச்சமும் கொண்டு ஓர் ஆவியைக் காண்பது போல் அவரைப் பார்க்கிறார்கள். உடனேதான் இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?” என்று சொல்லிவிட்டுத் தன் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பிக்கின்றார்.
நம்பிக்கை இல்லாத இடத்தில் அச்சமும் அமைதியில்லாத சூழலும் இருக்கும் (மாற் 4:40) என்கிறது இறைவார்த்தை. உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு இதற்கு முன்பாக ஓரிரு முறை தோன்றியிருந்தாலும், ‘அது ஆவியாக இருக்குமோ’ என்று அவர்கள் அவரை நம்பாமல் இருந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களிடம் ஆணிகளால் துளைக்கப்பட்ட (திபா 22:16) தன் கைகளையும் கால்களையும் காண்பிக்கிறார். மட்டுமல்லாமல், தான் ஆவியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், மீன்துண்டை எடுத்து அவர்களுக்கு முன்பாக உண்கிறார். இவையெல்லாவற்றிற்கும் மேலாக, தன்னுடைய சாட்சிகளாக இருக்க, அவர்களைத் திடப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு அச்சத்தோடும் அமைதியில்லாமலும் இருந்த சீடர்களுடைய உள்ளத்தில் அமைதியை விதைத்து, அவர்களுக்கு ஆற்றலையும் வல்லமையையும் கொடுக்கின்றார்.
Source: New feed