நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) காலை இடம் பெற்ற குண்டுத் தாக்குதல்கள் முழு இலங்கை நாட்டையும் ஏன் முழு உலகையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.இத்தாக்குதல்களால் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
இன்னும் பல நூறு பேர் காயமடைந்துள்ளனர். மனித உயிர்களைத் துச்சமென மதித்து, வணக்கத்தலங்களிலும் ஏனைய இடங்களிலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று (21) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த தாக்குதல்களின் போது இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாற்றிக்காகச் செபிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில குணமடையவும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தம் அன்புக்குரியவர்களை இழந்து ஆறாத்துயரில் மூழ்கியிருக்கும் அனைவருக்கும் இரக்கமுள்ள இறைவன் ஆறுதலை அளிக்க வேண்டுமென மன்றாடுகின்றோம்.
கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்குட்பட்ட கத்தோலிக்க ஆலயங்களான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும், நீர்கொழும்பு கற்றுவப்பிற்றிய புனித செபஸ்தியார் ஆலயத்திலும் மற்றும் மட்டக்களப்பு சீயோன் கிறிஸ்தவ ஆலயத்திலும் இயேசுவின் உயிர்ப்பு விழா ஆராதனையின் போது இடம் பெற்ற இத்தாக்குதல்கள் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் கொழும்பு உயர் மறைமாவட்டப் பேராயர், குறிப்பிட்ட ஆலயங்களின் பங்குத்தந்தையர்கள் மற்றும் இறைமக்களுக்கும், மட்டக்களப்பு கிறிஸ்தவ சமூகத்திற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவிக்கின்றோம். இத்துன்பமான வேளையில் எமது சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
மனிதநேயமற்ற மனிதர்களின் இத்தாக்குதல்களால் ஏதுமறியாத அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் வணக்கத்தலங்கள் இத்தாக்குதல்களுக்கான இலக்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதையும் அவர்களின் நோக்கம் என்ன என்பதையும் விரைவான விசாரணைகள் மூலம் அரசு விரைவில் வெளிப்படுத்தும் என நம்புகின்றோம். இதுபோன்ற மனுக்குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இத்தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மனம்மாற செபிப்போம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பபட்டுள்ளது.
Source: New feed