இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான, இஞ்ஞாயிறு காலையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீருக்குப் பின்னர், மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மிகவும் கொடூரமான இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயம் மற்றும் ஏனையோருக்கு, எனது ஆழ்ந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கின்றேன். அத்தாக்குதல் சமயத்தில் கிறிஸ்தவர்கள், செபத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கும், இதனால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்கின்றேன் என்றுரைத்தார் திருத்தந்தை.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் கத்தோலிக்க ஆலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் இஞ்ஞாயிறு காலையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில், குறைந்தது 137 பேர் இறந்துள்ளனர் மற்றும், நானூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் குன்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும், வானொலி மற்றும் தொலைகாட்சி வழியாக இச்செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லாருக்கும், இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைச் சொன்னார்.
பின்னர், எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1949ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உயிர்ப்புப் பெருவிழா அன்று, முதன்முறையாக, தொலைக்காட்சியில் பேசியது பற்றி குறிப்பிட்டார்.
Source: New feed