தவக்காலம் ஐந்தாம் வாரம்
வியாழக்கிழமை
யோவான் 8: 51-59
இயேசுவின் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்
நிகழ்வு
மேற்கு வெர்ஜினியாவில் உள்ளது கிரான்ட்வியூ என்ற நகரம். இங்குள்ள ட்ரீம்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் ஆலயத்தில் 03-03-2019 அன்று இரவு, மின்கசிவு காரணமாகப் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இரவுநேரம் என்பதால் செய்தி அங்கிருந்த தீயணைப்புத் துறையினருக்குத் தாமதமாகவே கிடைத்தது. அப்படியிருந்தும் அவர்கள் தீயை அணைக்க விரைந்து வந்தனர். அவர்கள் தீவிபத்து நடந்த இடத்திற்கு வருவதற்குள் தீயானது ஆலயம் முழுவதும் பரவி எரிந்துகொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயை அணைக்கக் கடுமையாகப் போராடினார்கள். ஆனாலும் அவர்களால் தீயைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நீண்டநேரப் போராட்டத்திற்குப் பின்புதான் அவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. தீயின் தீவிரம் ஓரளவுக்குத் தணிந்ததும் அவர்கள் ஆலயத்திற்குள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர். அப்பொழுது அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. ஆலயமே தீயில் எரிந்துகொண்டிருந்தபோது அங்கே வைக்கப்பட்டிருந்த திருவிவிலியங்கள் தீயின் நாவுகள் தீண்டாமல் அப்படியே இருந்தன.
இந்நிகழ்வு இயேசு சொன்ன, “விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா” (லூக்கா 21:33) என்பதை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது. உண்மையாகவே இயேசுவின் வார்த்தைகளுக்கு அழிவே இல்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கடைபிடிப்போர் அழியாமல் நிலைவாழ்வைப் பெறுவார் அல்லது சாகமாட்டார் என்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நிலைவாழ்வைத் தரும் இயேசுவின் வார்த்தைகள்
நற்செய்தி வாசகத்தில் இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னதைக் கேட்ட யூதர்கள் அவருக்கெதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். யூதர்களுடைய வாதமெல்லாம் ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். இவர்கள் எல்லாரையும்விட இயேசு பெரியவரா? என்பதுதான். யூதர்கள் முன்வைத்த இந்த வாதத்திற்கு அல்லது கேள்விக்கு, இயேசு, “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கின்றேன்” என்று பதிலளிக்கின்றார் இயேசுவின் இவ்வார்த்தைகளை, ஆண்டவராகிய கடவுள் எரியும் முட்புதரிலிருந்து மோசேயிடம் பேசிய, “இருக்கின்றவராகிய இருக்கின்றவர் நானே” (விப 3:14) என்ற வார்த்தைகளோடு இணைந்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் அர்த்தம் விளங்கும்.
யூதர்கள் இயேசுவிடம் நீர் ஆபிரகாமைவிடப் பெரியவரோ என்று கேட்கின்றபோது, அவர் அவர்களிடம், நான் ஆபிரகாமிற்கு முன்பாக, அதாவது படைப்பின் தொடக்கத்திலிருந்தே இருக்கின்றேன் என்று பதிலளிகின்றார். இப்படிப் படைப்பின் தொடக்கத்திலேயே இருக்கின்ற இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்போர் எப்படிச் சாகமுடியும்?. நிச்சயமாகச் சாகமாட்டார்கள்!. அதனால்தான் இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கின்றார்.
சாகாமை என்பது உடலில் சாகாமை அல்ல
‘என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகாமாட்டார்’ என்று இயேசு சொன்னதை யூதர்கள் மேலெழுந்தவாரியாகப் புரிந்துகொண்டார்கள். குறிப்பாக அவர்கள் உடலின் சாகாமை என்றே புரிந்துகொண்டார்கள். அதனால்தான் அவர்கள் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தும் ஆபிரகாமும் இறைவாக்கினர்களும் இறந்துபோனார்களே? என்று கேள்வி கேட்கின்றார்கள். இயேசு சொல்ல வந்தது அதுவல்ல, அதைவிட உயர்ந்தது. அது ஆன்மாவின் சாகாமை. அத்தகைய கொடையை எல்லாரும் பெற்றுக்கொள்ள முடியாது. அதை யாராரெல்லாம் இயேசுவை முழுமையாக நம்பி, அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய வார்த்தையின்படி நடக்கின்றார்களோ அவர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். எத்தனையோ தூயவர்களும் மறைசாட்சிகளும் இறையடியார்களும் இயேசுவை ஆழமாக நம்பி, அவரது வார்த்தையின்படி நடந்தார்கள். அதனால்தான் அவர்கள் இந்த மண்ணுலகத்தை விட்டுப் பிரிந்துபோனபின்னும் மக்களுடைய மனங்களில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்கள். நாம் அவர்களைப் போன்று வாழ்ந்தோமெனில், அவர்களுக்குக் கிடைத்த ஆசி நமக்கும் கிடைக்கும் என்பது உறுதி.
ஒருவர் இயேசுமீது வைக்கும் நம்பிக்கை எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாக இருக்கின்றது
யூதர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11) அதனால்தான் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல், அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்; அவரோடு விதண்டாவாதம் செய்தார்கள். ஒருவேளை அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவரை ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் அளித்த வாழ்வினை அவர்களால் பெற்றுக்கொண்டிருக்க முடியும். துரதிஸ்டம் என்னவெனில், அவர்கள் கடைசிவைக்கும் இயேசுவை இறைமகனாக ஏற்றுகொள்ளவில்லை என்பதே உண்மை. நாம் யூதர்களைப் போன்று இல்லாமல், இயேசுவை நம்பி அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து, அவர் தருகின்ற நிலைவாழ்வினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்’ என்பார் இயேசு (யோவா 6:40). நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு, அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed