உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டுவந்து நடுவில் நிறுத்தி, “போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.
இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார்.
மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
இயேசு நிமிர்ந்து பார்த்து, “அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், “இல்லை, ஐயா” என்றார். இ
யேசு அவரிடம், “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
(இந்நற்செய்தி முந்தின ஞாயிறு மூன்றாம் ஆண்டில் வாசிக்கப்பட்டிருந்தால், அதற்குப் பதிலாகப் பின்வரும் நற்செய்தியை வாசிக்கவும்).
உலகின் ஒளி நானே.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 12-20
அக்காலத்தில் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார். பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர். அதற்கு இயேசு, “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில் நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால் நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பு செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? என்னைப்பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்” என்றார். அப்போது அவர்கள், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்” என்றார். கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மையசிந்தனை .
உலகின் ஒளியாம் இயேசு.
மறையுரை.
திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர், திருத்தந்தையாக இருந்த சமயம் அவரைச் சந்திக்கப் பெரும் எண்ணிக்கையில் திருப்பயணிகள் வந்திருந்தனர். அவர்களோடு அவர் அன்பொழுகப் பேசினார். பின்னர் அவர்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் செல்லவேண்டிய நேரம் வந்ததும், அவர் அவர்களுக்கு இறையாசி வழங்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் அந்தத் திருப்பயணிகளில் பதிமூன்று வயது மதிக்கத்தக்க பார்வையற்ற சிறுவன் ஒருவன் இருப்பதைக் கண்டார்.
உடனே அவர் அவனைத் தனியாகக் கூப்பிட்டு, “தம்பி! ஒன்றை மனதில் வைத்துக்கொள். இறைவனின் பேரொளியைப் பெறவில்லை என்றால், இங்கிருக்கின்ற எல்லாரும் பார்வையற்றவர்கள்தான். அதனால், உன்னால் இவ்வுலகைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்தாதே… இறைவனின் பேரொளி உன்னை எந்நாளும் வழிநடத்தட்டும்” என்று அவனுக்கு ஆசிகூறி அனுப்பிவைத்தார்.
திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் அந்தச் சிறுவனுக்குக் கூறிய வார்த்தைகளிலிருந்து இறைவன்தான்/ இயேசுதான் பேரொளி என்ற உண்மையானது உறுதியாகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும், இயேசுவே உலகின் ஒளி என்று எடுத்துச் சொல்கின்றது. அவர் எப்படி உலகிற்கு ஒளியாக இருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
1) இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்ட ஒளி.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் சூரியன் இறைவனோடு தொடர்பு படுத்திப் பேசப்பட்டது. கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாக இருக்கின்றார் (திபா 84: 11) என்ற வார்த்தைகளும் நீதியின் கதிரவன் (மலா 4:2) என்ற வார்த்தைகளும் இதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. மேலும் யோவானின் முதல் திருமுகத்தில் வருகின்ற “கடவுள் ஒளியாய் இருக்கின்றார்” என்ற வார்த்தைகளும் (1 யோவா 1:5) ஒளியும் கடவுளும் வேறுவேறு அல்ல என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இந்தப் பின்னணில், நற்செய்தியில் இயேசு கூறுகின்ற, “உலகின் ஒளி நானே” என்று வார்த்தைகளை வைத்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சாலச் சிறந்தது.
2) உலகின் ஒளியாம் இயேசு.
நற்செய்தி வாசகத்தில் இயேசு, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்கின்றார்.
யோவான் நற்செய்தியாளர் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் முக்கியமான மூன்று விடயங்களைத் தன்னுடைய நற்செய்தியில் பயன்படுத்துகின்றார். ஒன்று, மன்னா (யோவா 6). இரண்டு, தண்ணீர் (யோவா 7). மூன்று இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ஒளி (யோவா 8).. இங்கு அவர் இயேசு சொன்ன “உலகின் ஒளி நானே” என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டுவிட்டு, பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் நெருப்புத்தூணின் உதவியால் பாலைவனத்தில் நடந்துசென்றதையும் யூதர்கள் கொண்டாடிய கூடாரப் பெருவிழாவில் (Feast of Tabernacles) வைக்கப்படும் நான்கு பெரிய விளக்குதண்டுகளையும் நினைவுபடுத்தி, உண்மையாகவே இயேசு உலகின் ஒளி என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். மேலும் யாராரெல்லாம் இயேசுவைப் பின்தொடர்ந்து நடக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டார்கள், வாழ்விற்கான ஒளியைக் கொண்டிருப்பார்கள் என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கின்றார்.
3) இயேசு கூறியதை நம்ப மறுத்த பரிசேயகூட்டம்.
இயேசு, “உலகின் ஒளி நானே” என்று சொன்னதைக் கேட்ட பரிசேயக் கூட்டம், “உம்மைப் பற்றி நீரே சான்று பகர்கின்றீர்; உன் சான்று செல்லாது” என்கின்றார். யூதர்கள் தனியொரு நபருடைய சான்றினை ஏற்றுக்கொள்வது கிடையாது (எண் 35: 30; இச 17:6). அந்த அடிப்படையில் அவர்கள் தனியொரு மனிதனாக (!) இயேசு தன்னைக் குறித்து சான்று பகர்வது செல்லாது என்கின்றார்கள். ஆனால், இயேசுவோ தன்னைப் பற்றித் தான் மட்டுமல்ல, தந்தைக் கடவுளும் சான்று பகர்கின்றார் என்கின்றார். அவர்களோ இயேசு சொல்வதை ஏற்றுக்கொள்ளாத மந்த புத்தியுடைவர்களாக இருக்கின்றார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும், உலகின் ஒளியாம் இயேசுவைப் பின்தொடர்ந்து நடக்கின்றபோது வாழ்வினைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது மறுக்கமுடியாது. ஏனெனில், வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்ற (யோவா 6: 63) வார்த்தைகளைப் பேசுகின்ற, இயேசுவைப் பின்பற்றி நடக்கின்ற ஒருவர் நிலைவாழ்வைப் பெறாமல் போகார் (யோவா 6:58)
சிந்தனை.
‘என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே’ (திபா 119:105) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, வாழ்க்கைப் பாதைக்கு – பயணத்திற்கு – ஒளிதருகின்ற உலகின் ஒளியாம் இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed