தவக்காலம் நான்காம் வாரம்
செவ்வாய்க்கிழமை
யோவான் 5: 1-3, 5-16
உடல் பலவீனமானவர்களுக்கு உதவு
நிகழ்வு
நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லாத ஓர் அருமையான கணவன் – மனைவிக்கு அழகானதொரு மகன் பிறந்தான். அவனுக்கு எழில் என்று பெயர்சூட்டிய அந்தக் கணவனும் மனைவியும் அவன்மீது தங்களுடைய மொத்த அன்பையும் காட்டி வந்தனர். ‘எழில்தான் தங்களுடைய வாழ்வில் எல்லாம்’ என்று நினைத்து வாழ்ந்து வந்த அந்தக் கணவன் மனைவியினுடைய வாழ்வில் திடிரென்று புயல்வீசத் தொடங்கியது.
அப்பொழுது எழிலுக்கு நான்குவயது இருக்கும். நன்றாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த எழிலால் திடிரென்று நடக்கமுடியாமல் போனது. அவனுடைய பெற்றோர் அவனை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று சிகிச்சை அளித்துப் பார்த்தபொழுதுதான், அவனுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மை தெரியவந்தது இதை அறிந்த அவனுடைய பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். ‘பலவருடங்களுக்குப் பிறகுப் பிறந்தக் நம் குழந்தைக்கு இப்படியோர் நிலைமையா?’ என்று அவர்கள் வருத்தப்பட்டார்கள். இருந்தாலும், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, மகனை அவனுடைய முந்தைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்று எத்தனையோ மருத்தவமனையை ஏறி இறங்கினார்கள். ஏறக்குறைய இரண்டாண்டுகால சிகிச்சைக்குப் பின், அவனால் ஓரளவு நடக்க முடிந்தது.
இதற்குப் பிறகு எழிலின் பெற்றோர் அவனைத் தங்களுடைய வீட்டிற்கு மிக அருகில் இருந்த ஓர் ஆங்கில வழிக்கல்விப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அவனும் அங்கு நன்றாகப் படித்துவந்தான்.
ஒருநாள், பள்ளிக்கூடம் முடிந்ததற்கான மணி ஒலித்தவுடன் எல்லா மாணவர்களும் வெளியே வேகமாக ஓடிவந்தனர். எல்லாரும் வெளியே வந்தபிறகு எழில் மெல்ல நடந்துவந்தான். ஆனால், அவன் தனியாக வரவில்லை. அவனுடைய நண்பன் அன்பரசனின் துணையுடன் வந்தான். உண்மையாகவே, பள்ளிக்கூடத்தில் அன்பரசன்தான் எழிலுக்கு உற்ற துணையாக இருந்து, எழில் எங்கு சென்றாலும் அவனோடு சென்று, அவனுக்குப் பக்க பலமாக இருந்தான். இதனால் நடப்பதற்கு கஷ்டப்பட்ட எழில் அன்பரசனின் உதவியால் அந்தக் கஷ்டத்தை மறந்து பள்ளிக்கூட நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக செலவழிக்கத் தொடங்கினான்.
இந்நிகழ்வில் வரும் எழிலுக்கு .பக்க பலமாக இருந்த அன்பரசனைப் போன்று, உடல் பலவீனமாக இருக்கும் ஒவ்வொருக்கும் ஓர் அன்பரசன் கிடைத்தால், அவர்களுடைய வாழ்க்கை எத்துணை அழகாக இருக்கும்! யோசித்துப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
உடல்நலமற்றிருந்தவருக்கு உதவியாய் வந்த இயேசு
நற்செய்தியில் இயேசு, பெத்சதா குளத்தருகில் முப்பத்தெட்டு ஆடுகளாக உடல் நலமற்றுப் படுத்தபடுக்கையாய் கிடந்த ஒருவருக்குக் குணமளிக்கின்ற நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். உடல் நலமற்றிருந்த அந்த மனிதர் முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் படுக்கையில் கிடந்தார் என்பது, இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் முப்பத்தெட்டு ஆண்டுகளாக அலைந்து திரிந்ததை நினைவூட்டுகின்றது (இச 2:14). இவ்வளவு நீண்டகாலமாக படுக்கையில் கிடந்த அந்த மனிதரை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தது மிகவும் வியப்பாக இருக்கின்றது. அப்படிப்பட்ட மனிதர்மீது இயேசு அன்புகொண்டு, அவரைக் குணப்படுத்துகின்றார்.
இயேசு அம்மனிதரை நலமாக்கிய விதம் மிகவும் புதுமையாக இருக்கின்றது. இயேசு தாமாகவே அவரிடம் சென்று, “நீர் நலம்பெற விரும்புகிறீரா?” என்று கேட்கின்றார். அவர் இயேசு கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று பதில் சொல்லாமல், தன்னுடைய இயலாமையையும் அடுத்தவரின் கண்டுகொள்ளாத் தன்மையையும் அவரிடம் எடுத்துச் சொல்கின்றார். அதன்பிறகுதான் இயேசு அம்மனிதரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்று சொல்லி குணப்படுத்துகின்றார்.
இயேசுவைப் போன்று நாமும் ‘எளியவர்’மீது இரங்குவோம்
முப்பத்தெட்டு ஆண்டுகளாக உடல் நலமற்றிருந்த அம்மனிதரைக் இயேசு குணப்படுத்தியது அவர் மெசியா என்பதை நிரூபிக்கின்றது (எசா 35: 3-6) எப்படியென்றால், மெசியா காலத்தில் என்னென்ன நடக்கும் என்று இறைவாக்கினர்கள் சொன்னது இயேசுவில் நிறைவேறுகின்றது. மேலும் இந்நிகழ்வு நாமும் நம்மோடு வாழக்கூடிய எளியவர், வறியவர், உடல் நலமற்றோர், மாற்றுத்திறனாளிகள்மீது இரக்கம்கொண்டு வாழ அழைப்புத் தருகின்றது. பெத்சதா என்றால், இரக்கத்தின் அல்லது அருளின் வீடு என்பது பொருள். இங்கு இயேசுவின் இரக்கம் அந்த உடல்மற்றவர்மீது வெளிப்பட்டதுபோல், நம்முடைய இரக்கம் மற்றவர்களிடம் வெளிப்படச் செய்வோம். இயேசுவின் உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனை
‘இறக்கத்தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ என்பார் அன்னைத் தெரசா. ஆகையால், நாம் நம்மோடு வாழக்கூடிய உடல் நலமற்றோர், மாற்றுத்திறனாளிகள் இன்னும் பல்வேறு பிணிகளால், பிரச்சினைகளால் வருந்துவோர்மீது இயேசுவைப் போன்று இரக்கத்தோடும் அன்போடும கரிசனையோடும் நடந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed