மனம் திருந்த விரும்பாத கத்தோலிக்க போதைப்பொருள் வர்த்தகர்களோடு இருக்கின்ற உறவைத் துண்டித்துக் கொள்ளுமாறு, இலங்கை தலத்திருஅவை தலைவர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக, கொழும்புவில், மார்ச் 31ம் தேதியன்று மௌன பேரணி ஒன்றை, தலைமையேற்று நடத்துவதாக அறிவித்துள்ள, கொழும்பு பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்கர், அதை விட்டுவிடுவதற்கு எவ்வித அடையாளங்களையும் காட்டவில்லையெனில், பங்கு ஆலயங்கள் அவர்களை ஏற்கக்கூடாது என்றும், திருநற்கருணை வாங்குதல், இறந்தோர் அடக்கச்சடங்கு வழிபாடுகள் உட்பட, கத்தோலிக்கர் என்ற முறையில் அவர்களுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட வேண்டுமென்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு உயர்மறைமாவட்டத்திலுள்ள அனைத்துப் பங்குத்தளங்களுக்கும் இவ்வாறு விண்ணப்பித்துள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்நடவடிக்கையில், கிறிஸ்தவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கர்தினால் இரஞ்சித் அவர்களின் முயற்சியினால் நடைபெறவுள்ள இப்பேரணியில், இலங்கை புத்தமத தலைவர் Thambawita Gunawansa அவர்கள் உட்பட, பல்வேறு சமயத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.
Source: New feed