தவக்காலம் இரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மத்தேயு 21: 33-43, 45-46
மிகுந்த கனிதருவோம்
நிகழ்வு
ஆற்றங்கரையோரம் தியானத்தில் இருந்த ஒரு துறவியிடம் வந்த ஓர் இளைஞன், ஒரு செடியைக் காட்டி சவால்விட்டான். “இது பூக்குமா? பூக்காதா?”. சிறிது நேரம் கண்மூடிய அந்தத் துறவி உறுதியாகச் சொன்னார். “இது பூக்கும்”. மறுவினாடி அதனைப் பிடுங்கி வீசினான் அந்த இளைஞன்.
அன்று மாலை வீசிய சுழற்காற்றும் மழையும் மக்களை நிலைகுனியச் செய்தது. ஆனால், பிடுங்கி வீசப்பட்ட செடி மட்டும் மண்ணில் வேரூன்றி எழுந்தது. செடியைப் பிடுங்கி எறிந்த இளைஞன் துறவியிடம் வந்து காரணத்தைக் கேட்டான். துறவி சொன்னார், “நான் ஜோதிடம் சொல்லவில்லை… அந்தத் தாவரத்தின் இயல்பில் மலரவேண்டும் என்ற தவிப்பு இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அதனால்தான் அவ்வளவு உறுதியாய்ச் சொன்னேன். வளரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் வளர்வார்கள்”.
இந்த மண்ணுலகில் பிறந்த ஒவ்வொருவரும் வளரவேண்டியவர்கள், வளர்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த கனிகொடுக்க வேண்டியவர்கள். இப்படிப்பட்ட உயர்ந்த செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேல் என்னும் திராட்சைத் தோட்டம்
நற்செய்தியில் இயேசு கொடிய திராட்சைத் தோட்ட உரிமையாளர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்தில் (5: 1-7) இடம்பெறும் இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது.
வழக்கமாகத் திராட்சைத் தோட்டம் அமைக்கும் ஒருவர், நிலத்தை நன்றாகப் பண்படுத்தி, அதிலுள்ள கற்களை எல்லாம் அகற்றி, நல்ல இனத் திராட்சைச் செடிகளை நட்டுவைப்பார். மேலும் அதற்கு எந்தவிதத்திலும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக சுற்றிலும் வேலி போட்டு, பிழிவுக்குழி வெட்டி, காவல்மாடம் அமைப்பார். இப்படியெல்லாம் செய்துதான் ஒருவர் திராட்சைத் தோட்டத்தை அமைப்பார்.
நற்செய்தியில் இயேசு, இஸ்ரயேல் மக்களைத் திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடுகின்றார். எப்படி ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பராமரிக்க திராட்சைத் தோட்ட உரிமையாளர் மேலே கண்டவாறு என்னவெல்லாம் செய்கின்றாரோ, அது போன்று ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேல் மக்களை அடிமைத்தன வீடாக எகிப்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை அவர்களுக்கு வழங்கினார். அது மட்டுமல்லமால், அவர்களை வழிநடத்துவதற்கு இறைவாக்கினர்களையும் நீதித்தலைவர்களையும் அனுப்பிவைத்தார். இப்படியெல்லாம் இஸ்ரேயல் மக்களுக்கு நன்மைகளைச் செய்த இறைவன், அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்ப்பதுதானே முறை. ஆனால், அவர்கள் பலனைக் கொடுக்காமல், பலனைக் கேட்கச் சென்ற எல்லாரையும் பிடித்து அடித்துத் துன்புறுத்துகின்றார்கள்.
இறைமகன் இயேசுவைப் புறக்கணித்த இஸ்ரேயல் மக்கள்
இறைவாக்கினர்களையும் இறையடியார்களையும் பிடித்துத் துன்புறுத்திய இஸ்ரேயல் மக்களிடம், ஆண்டவராக கடவுள், தன் மகனை அனுப்பினாலாவது உரிய பலனைத் தருவார்கள் என்று இயேசுவை அனுப்பி வைக்கிறார். அவர்களோ அவரைப் பிடித்து, வெளியே தள்ளிக் கொன்றுபோடுகிறார்கள் (எபி 13: 12-13). இதனால் சினம்கொள்ளும் கடவுள் யூதர்களிடம் இருந்த இறையாட்சியை புறவினத்து மக்களுக்குக் கொடுக்கின்றார். கடவுளிடமிருந்து ஏராளமாக ஆசி பெற்ற இஸ்ரேயல் அதற்கான பலனைத் தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் பலன்தராது போனதால் அவர்களிடமிருந்த வாய்ப்பு பறிக்கப்பட்டு, வேறு மக்களுக்குப் கொடுக்கப்படுகின்றது.
கனிகொடுத்த வாழ்வதே கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை
யோவான் நற்செய்தியில் இயேசு கூறுவார், “நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.” (யோவா 15:8). யூதர்களுக்குக் கனி கொடுப்பதற்கான எல்லா வாய்ப்பு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவர்கள் கனிகொடுக்காமல் போனதால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு புறவினத்து மக்களுக்கு கொடுக்கப்படுகின்றது. எனவே, கனிகொடுக்காமல் இருக்கின்றபோது, யூதர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பதை மறந்துவிடக்கூடாது.
இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் யூதர்கள் யாரை வேண்டாமென்று ஒதுக்கினார்களோ அவரே – இயேசுவே – மூலைக்கல்லாக மாறுகின்றார் (1பேது 2: 7-9) அதே நேரத்தில் யாராரெல்லாம் அவரிடம் நம்பிக்கை கொண்டார்களோ அவர்களுக்கு அவர் விலைமதிப்புள்ளவராக மாறுகின்றார். ஆகவே, இயேசுவை யாராரெல்லாம் ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, அதன்படி வாழ்கின்றார்களோ அவர்கள் மிகுந்த கணிதருவார்கள் என்பது உறுதி.
சிந்தனை
நமக்கு முன்பாக இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. ஒன்று இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருடைய விழுமியங்களின் படி வாழ்ந்து, மிகுந்த கணிதருவது. இன்னொன்று இயேசுவைப் புறக்கணித்து வாழ்வைத் தொலைப்பது. இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதற்கேற்ப நம் வாழ்வு அமைகின்றது.
நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, விழுமியங்களின் படி வாழ்ந்து, மிகுந்த கணிதருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed