இப்பொழுது இலாசர் ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 19-31
அக்காலத்தில் இயேசு பரிசேயரை நோக்கிக் கூறியது: “செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து, நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.
அவர், `தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.
அதற்கு ஆபிரகாம், `மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது’ என்றார்.
அவர், `அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே’ என்றார்.
அதற்கு ஆபிரகாம், `மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்’ என்றார்.
அவர், `அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்’ என்றார்.
ஆபிரகாம், `அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவி சாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மையசிந்தனை .
அடுத்தவர்மீது அக்கரை.
மறையுரைச் சிந்தனை.
கடந்த நூற்றாண்டில் மும்பையில் நடைபெற்ற ஒரு தமிழ்க்கழக கூட்டத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் சென்றிருந்தார்.
அவர் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் தன்னிடம் இருக்கும் வேட்டியைத் துவைத்துக் காயப்போட்டுவிட்டு, லுங்கியை அணிந்துகொள்வார். அடுத்த நாள் கூட்டத்திற்குச் செல்லும்போது முந்தைய நாள் துவைத்துக் காயப்போட்ட வேட்டியை எடுத்து அணிந்துகொண்டு கூட்டத்திற்குச் செல்வார். ஏனென்றால் அவரிடம் ஒரே ஒரு வேட்டிதான் இருந்தது.
இதைக் கவனித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவருக்கு 12 மில் வேட்டிகளை வாங்கிக்கொடுத்து, அணிந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார்கள். அவர் அதைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் அதை தன்னோடு வைத்துக்கொள்ளவில்லை. மாறாக பக்கத்தில் இருந்த சேரியில் வாழ்ந்த மக்களுக்குக் கொடுத்துவிட்டு, மீண்டுமாக ஒரே ஒரு வேட்டியோடே வலம்வந்தார்.
இப்படி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், ஏழைகள்மீது அக்கறை கொண்டும் வாழ்ந்தவர் வேறுயாருமல்ல, தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான ஜீவானந்தம் எனப்படும் பா.ஜீவா அவர்களே. நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், நம்மோடு வாழும் ஏழை, எளிய மக்கள்மீது அக்கறைகொண்டு வாழவேண்டும் என்பதை இவருடைய வாழ்க்கையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.
ஆனால் இன்றைக்கு மனிதர்கள் தனக்கு அடுத்திருப்பவரைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாமல், சுயநலச் சேற்றில் வாழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்ககூடிய பணக்காரன்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு செல்வரும், இலாசரும் பற்றிய உவமையை சொல்கிறார். செல்வரோ நாள்தோறும் ஆடம்பரமாக ஆடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு வாழ்கிறான். ஆனால் அவனுடைய வீட்டு வாசலில் உடலெல்லாம் புண்களோடு, வறிய நிலையில் ஏழை இலாசர் படுத்துக்கிடக்கிறான். அவனைப் பற்றி, செல்வந்தன் கொஞ்சம்கூட அக்கறைகொள்ளவில்லை. அதனால்தான் அவன் இறந்த பிறகு பாதாளத்திலும், ஏழை இலாசாரோ ஆபிரகாமின் மடியிலும் இருக்கிறார்கள்.
இயேசு கூறும் இந்த உவமை நமக்கு ஒருசில உண்மைகளை சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழக்கூடிய மக்கள்மீது அக்கறைகொண்டு வாழவேண்டும். உவமையில் வரும் செல்வந்தன் ஏழை இலாசருக்கு தீங்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அதேவேளையில் அவன் தன்னுடைய வீட்டுவாசலில் இருந்த ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளாமையே செல்வந்தனுக்கு மிகபெரிய தண்டனையைக் கொண்டுவந்து சேர்த்தது.
அடுத்ததாக நாம் ஒவ்வொருவரும் கடவுளையே நம்பி வாழும் மக்களாக வேண்டும் என்றதொரு அழைப்பினையும் இந்த உவமையானது நமக்குக் கற்றுத்தருகிறது. உவமையில் வரும் இலாசரை இந்த உலகமானது வஞ்சித்திருந்தாலும் அவர் கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்திருக்கலாம். அதனால்தான் கடவுள் அவருக்கு பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுகின்றார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் கடவுளை நம்பி வாழும் மக்களாக மாறவேண்டும்.
மத்தேயு நற்செய்தி 5:3 ல் வாசிக்கின்றோம், “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்று. நாம் ஏழைகளைப் போன்று/ இலாசரைப் போன்று கடவுள்தான் எனக்கு எல்லாம் என்று வாழ்கிறபோது அவர் நமக்கு எல்லா ஆசிரையும் தருவார் என்பது உண்மை.
எனவே நம்மோடு வாழும் மக்கள்மீது அக்கறைகொண்டு வாழ்வோம். அதேநேரத்தில் கடவுளை நம்பி நமது வாழ்வை அமைப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
Source: New feed