நற்செய்தி வாசகம்.
அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28
அக்காலத்தில் இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, “இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்.
ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்” என்று அவர்களிடம் கூறினார். பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். “உமக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு அவரிடம் கேட்டார்.
அவர், “நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்” என்று வேண்டினார்.
அதற்கு இயேசு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டார். அவர்கள் “எங்களால் இயலும்” என்றார்கள்.
அவர் அவர்களை நோக்கி, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர்.
இயேசு அவர்களை வரவழைத்து, “பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மையசிந்தனை .
பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே.
மறையுரைச் சிந்தனை.
உலகப் புகழ்பெற்ற “மாயோ கிளினிக்”கின் நிறுவனர் மருத்துவர் சார்லஸ் மாயோ என்பவர். இவரது நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல பகுதிகளிலே பரவி இருக்கின்றன. இவர் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு.
ஒருநாள் அவர் தன்னுடைய நண்பர் ஒருவரை விருந்திற்கு வீட்டுக்கு அழைத்திருந்தார். அவரும் நண்பரின் அழைப்பினை ஏற்று, விருந்துக்கு வந்திருந்தார். விருந்து இரவு நீண்டநேரம் வரை நீடித்தது. பின்னர் சார்லஸ் மாயோ தனது நண்பரை விருந்தினர் அறையில் விட்டுவிட்டு, தன்னுடைய அறைக்குத் திரும்பினார். அப்போது ஏதோ ஒரு காரணத்திற்காக நண்பரின் அறைக்கு திரும்பச் சென்றவர் பாதியிலே வந்துவிட்டார்.
அவர் திரும்பும்போது நண்பரின் காலணிகள் வாசலுக்கு வெளியே இருப்பதைக் கண்டார். அவை அழுக்கும், தூசியும் படிந்திருப்பதைக் கண்டு, உடனே அந்தக் காலணிகளைச் சுத்தப்படுத்தி, வெளியே வைத்துவிட்டு, தந்து அறைக்கு வந்து தூங்கச் சென்றார்.
அடுத்தநாள் காலைவேளையில் நண்பர் எழுந்து, குளித்து தயாரான பிறகு, தனது காலணிகளைச் தேடினார். அவை துடைத்து பளபளப்பாக இருப்பதைப் பார்த்துவிட்டு, யாரோ ஒரு கடைநிலை ஊழியர்தான் இப்படி துடைத்து, அழகாக வைத்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டார். அவர் காலை உணவு உண்ணும்போது சார்லஸ் மாயோவிடம் இதைச் சொல்லிவிட்டுச் சொன்னார், “உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் ஊழியர் மிகவும் நன்றாக வேலைபார்க்கிறார். ஏனென்றால் என்னுடைய அழுக்குப் படிந்த காலணிகளைச் சுத்தமாக வைத்திருக்கிறார்” என்றார். அதற்கு அவர், “எங்கள் வீட்டில் ஊழியர் என்று யாரும் கிடையாது, நான்தான் நேற்று இரவு உங்களுடைய காலணிகளைத் துடைத்து வைத்தவன்” என்றார்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத அவருடைய நண்பர், “சார்லஸ் மாயோ! நீங்கள் எதற்கு என்னுடைய காலணிகளைத் துடைத்தீர்கள், நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்?’ என்றார். அதற்கு அவர், “நான் இதுபோன்ற பணிவிடைகளைச் செய்கிறபோது எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பெரியது” என்றார். இதைக் கேட்ட அவருடைய நண்பர் வாயடைத்து நின்றார்.
தான் சமுதாயத்தில் மிகப்பெரிய மனிதராக இருந்தாலும், தன்னுடைய நண்பரின் காலணிகளைத் துடைக்கும் அளவுக்கு தாழ்ந்துபோன சார்லஸ் மாயோவின் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் செபதேயுவின் மனைவி அதாவது யோவான், யாக்கோபு ஆகியோரின் தாய் தன்னுடைய மகன்களுக்கு ஆட்சியுரிமையில் பங்கு தருமாறு கேட்கிறார். அதற்கு இயேசு, “ஆட்சியுரிமையில் பங்கு தருவது என்னுடைய செயல்ல, மாறாக அது தந்தையால் அருளப்படும்” என்கிறார். தொடர்ந்து இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொல்கிறார், “உங்களில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும், உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” என்று..
இயேசு சீடர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. பல நேரங்களில் தலைவர் என்று சொன்னால் பிறரை/நமது பொறுப்பில் இருப்பவர்களை அடக்கி ஆளவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு தலைவர் என்றால் பணியாளராக, தொண்டராக இருக்கவேண்டும் என்ற புதிய நெறியை நமக்கு போதிக்கிறார். அதனை இயேசுவும் தன்னுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டினார்.
தலைவன் என்பவன் தனக்குக் கீழ் உள்ளவர்களை மதிப்பவன், அவர்களைச் செயல்பட வைப்பவன்” என்பான் லாவோட்ஸ் என்ற அறிஞன். ஆதலால் இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஆணவத்தை, அகந்தையை அகற்றி, தாழ்ச்சியோடு தொண்டு செய்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed