இந்தியாவில் தோழமையுணர்வு, உணவுப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும், அனைத்துக் குடிமக்களுக்கும் மாண்புநிறை வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்யும் நடவடிக்கைகளில், இந்த தவக்காலத்தில் ஈடுபட்டுள்ளது, இந்திய காரித்தாஸ் அமைப்பு.
இந்திய கத்தோலிக்க ஆயர்களின், மனிதாபிமான அமைப்பான காரித்தாஸ், இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும், தலத்திருஅவையின் பல்வேறு தலைவர்கள் மற்றும் பொதுநிலையினர் அமைப்புகளை, இந்நடவடிக்கையில் ஈடுபடுத்திள்ளது.
‘சத்துணவு: நம் உரிமை’ என்ற தலைப்பில், 2019ம் ஆண்டின் தவக்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய காரித்தாஸ் அமைப்பு, இந்தியாவில் தோற்கடிக்கப்பட வேண்டிய பகைவர்கள், பசியும் நோய்களுமே என்றுரைத்துள்ளது.
மக்கள் ஊட்டச்சத்துணவின்றி துன்புறுவது, மனித சமுதாயத்திற்கு, வேதனையளிக்கின்ற, மற்றும் வெட்கத்துக்குரிய நிலை என்றும், உலகில் ஊட்டச்சத்துணவின்றி துன்புறும் சிறார் மற்றும் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்றும், காரித்தாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, 38.4 விழுக்காட்டுச் சிறார், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நோய்களாலும், 35.8 விழுக்காட்டுச் சிறார், எடைகுறைவாலும் துன்புறுகின்றனர்.
ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ள, 2030ம் ஆண்டின் 17 நீடித்த நிலைத்த வளர்ச்சித் திட்ட இலக்குகளை எட்டுவதன் ஒரு பகுதியாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமையை மேம்படுத்துவதற்கு, உலக அளவில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில், இந்திய கத்தோலிக்கக் குழுமங்களும் இணைய வேண்டுமென, இந்திய காரித்தாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
Source: New feed