மற்றவர்களின் குறைகள் குறித்து அதிகம் அசைபோடுதல், மற்றும், புறங்கூறுதல் என்ற பழக்கங்களைக் கைவிட்டு, தங்கள் பாவங்கள் குறித்து அதிக கவனம் செலுத்த கத்தோலிக்கர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? என இயேசு கூறியதை எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறப்பிற்குப்பின் பாவக்கழுவாய் தேடும் இடமான உத்தரிக்கும் தலத்தில் துன்புறுவதைவிட, இவ்வுலகிலேயே நம் பாவங்களை உணர்ந்து ஏற்றுக்கொள்வது நலம் பயக்கும் என்று கூறினார்.
நம் குறைகளை காண மறுத்து, பிறர் குற்றங்களை ஆராய்ந்துப் பார்ப்பதில் வல்லுனர்களாக இருக்கும் நாம், அதையும் தாண்டி, மற்றவர்களைக் குறித்து புறம் கூறி, மனிதர்களிடையே முரண்பாடுகளையும், பகைமையையும், தீமைகளையும் விதைத்து வருகிறோம் என்றுரைத்தார் திருத்தந்தை.
“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? என்று இயேசு இஞ்ஞாயிறு நற்செய்தியில் எழுப்பும் கேள்வியையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனையோருக்கு கற்பிக்கும் பொறுப்பிலுள்ளோர்கள், குறிப்பாக, ஆன்மீக மேய்ப்பர்கள், அரசு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர், தங்கள் கடமையுணர்ந்து, மக்களை நல்வழியில் நடத்திச் செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்
Source: New feed