பொதுக்காலம் ஏழாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மாற்கு 10: 1-12
கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்
நிகழ்வு
நகரில் இருந்த பிரபல மருத்துவமனை அது. ஒரு காலைவேளையில் தன் கையிலிருந்த காயத்துக்கு மருந்துபோட வந்த முதியவர் ஒருவர் அங்கிருந்த மருத்துவரிடம் கேட்டார், “என்னைச் சீக்கிரம் இங்கிருந்து அனுப்ப முடியுமா?… இன்னொரு மருத்துவமனைக்கு அரைமணி நேரத்தில் நான் போகவேண்டும்.” “ஏனிந்த அவசரம்?” என்று அந்த மருத்துவர் கேட்டபோது, பெரியவர் சொன்னார், “என் மனைவி அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்… நான் உட்பட யாருமே அடையாளம் தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள்… அவளோடுதான் தினமும் காலை உணவு சாப்பிடுவேன்”.
பெரியவர் சொன்னதை ஆச்சரியம் மேலிடக் கேட்டுக்கொண்டிருந்த மருத்துவர் அவரைப் பார்த்துக் கேட்டார், “உங்கள் மனைவிக்குத்தான் உங்களை அடையாளம் தெரியாதே! ஏன் அவர் தனியாய் சாப்பிட்டால் என்ன?”. முதியவர் சிறிதும் தாமதியாமல் சொன்னார், “அவளுக்கு நான் யார் என்று தெரியாது… அவள் யார் என்று எனக்குத் தெரியுமே”.
தன் மனைவி சுயநினைவு இல்லாமல் இருந்த சூழ்நிலையிலும், அவரை நல்லவிதமாய் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று துடித்த அந்தப் பெரியவரின் அன்பு நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.
மணவிலக்கு தொடர்பான பரிசேயர்களின் கேள்வி
நற்செய்தியில், இயேசு யோர்தான் அக்கரைப் பகுதிக்கு வருகின்றபோது, அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்று ‘துடியாய்த் துடித்த’ பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது?” என்றொரு கேள்வியைக் கேட்கிறார்கள்.
முதலில் இந்நிகழ்வு நடந்தது எங்கே? இப்பகுதியில் நிலவிய அரசியல் என்ன? என்பதைத் தெரிந்துகொண்டோம் எனில், பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விக்குப் பின்னால் இருந்த ‘வக்கிரப் புத்தி’ நமக்குப் புரிந்துவிடும். இயேசு இருந்தது யோர்தான் அக்கரைப் பகுதி, இப்பகுதியை அப்போது ஆண்டுவந்தவன் ஏரோது அந்திபாஸ். இவன்தான் தன் சகோதரனான பிலிப்புவின் மனைவியோடு வாழ்ந்துவந்தவன்; இவள் பொருட்டு திருமுழுக்கு யோவானைக் கொல்லத் துணிந்தவன் (மாற் 6: 14-29). இந்தப் பின்னணியில்தான் இப்போது பரிசேயர்கள், தாங்கள் கேள்விக்கின்ற மணவிலக்கு தொடர்பான கேள்விக்கு இயேசு என்ன சொன்னாலும் அதை ஏரோது அந்திபாஸுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்கள்.
இதுதவிர யூதர்களிடம் மணவிலக்கு தொடர்பாக இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.
மணவிலக்கு தொடர்பாக யூதர்கள் மத்தியில் இருந்த இருவேறு கருத்துகள்
பொதுவாக யூத இரபிக்கள் மணவிலக்கு தொடர்பாகப் பேசுவதற்கு யோசிப்பார்கள். ஏனென்றால், அவர்களிடம் இருந்த இருவேறு குழுக்கள், இருவேறு விதமான கருத்துகளைக் கொண்டிருந்தார்கள். யூத இரபி ஹில்லல் என்பவரோ, எந்தவொரு காரணமும் இல்லாமல் கணவன் தன் மனைவியை விலக்கிவிடலாம் எனச் சொல்லிவந்தார். இரபி ஷிம்மாய் (Shimmai) என்பவரோ ‘தன் மனைவி ஒழுக்கமில்லாதவள்’ என்று கண்டால் மட்டும் அவளை விளக்கி விடலாம் என்ற சொல்லிவந்தார். இப்படி இருவேறு கருத்துகள் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலையில், இயேசு மணவிலக்கு செய்வது முறை அல்லது முறையில்லை என்று எப்படிச் சொன்னாலும் ஒருசாராரை இயேசுவுக்கு எதிராகத் திரும்பிவிட்டு, சிக்கலில் மாட்டிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்களிடம் இயேசு, இது முறை, முறையில்லை என்பதை நேரடியாகச் சொல்லாமல், “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்ற கேள்வியைக் கேட்டு அவர்களை மடைமாற்றி விடுகின்றார்.
மோசே இட்ட கட்டளை என்ன?
ஓர் ஆண் அல்லது கணவன் தன் மனைவி ‘ஒழுக்கமில்லாமல்’ இருக்கின்றாள் என்று கண்டால், அவளிடம் முறிவுச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, வேறொரு பெண்ணை மணக்கலாம், அந்தப் பெண்ணும் வேறோர் ஆணை மணக்கலாம் (இச 24: 1-4). இதுதான் மோசே யூதர்களுக்குக் கொடுத்த சட்டம். இச்சட்டம் பெண்ணை ‘ஒரு பொருட்டாகக் கூட’ மதிக்காத அன்றைய யூத சமூகத்தில், அவள் வேறோர் ஆணை மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதற்காகவாவது உரிமை அளித்திருக்கின்றே என்று மகிழ்ச்சியடையலாம். அனால், இச்சட்டம் கூட யூதர்களின் கடின உள்ளத்தின் பொருட்டுத்தான் கொடுக்கப்பட்டது என்கின்றார். இயேசு. அப்படியானால் மணமுறிவு தொடர்பாக இயேசு சொல்கின்ற கருத்துதான் என்ன? என்று கேள்வி எழலாம்.
ஓருடலாய் வாழவேண்டும்
மணவிலக்கு தொடர்பாக பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு கடைசியில் இயேசு தொடக்க நூலில் வருகின்ற வார்த்தைகளைச் சொல்லி (தொநூ 1: 27, 2: 21-25) விளக்கம் அளிக்கின்றார். ‘கணவனும் மனைவியும் ஓருடலாக வாழவேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பமே ஒழிய, அவர்கள் பிரிந்து வாழவேண்டும் என்பதல்ல’ என்று இயேசு அவர்களுக்கு அழகாகப் பதில் சொல்கின்றார். ஆகையால், இயேசு சொல்வது போன்று கணவனும் மனைவியும் ஓருடலாய் நிலைத்திருக்க அவர்கள் பிரமாணிக்கமாகவும் அன்பாகவும் வாழ்வது நல்லது.
சிந்தனை
‘மனிதன். தனித்திருப்பது நல்லதல்ல’ என்று நினைத்துதான் கடவுள் ஆதாமுக்குத் துணையாக ஏவாளைப் படைத்தார். ஆகையால், பிரிந்துவிடவேண்டும், விட்டு விலகிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அப்புறப்படுத்திவிட்டு அன்பு மயமான குடும்பத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed