பொதுக்காலம் ஏழாம் வாரம்
வியாழக்கிழமை
மாற்கு 9: 41-50
உங்கள் கை/கால்/கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்…
நிகழ்வு
ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். ஒருநாள் அவர் தன்னுடைய சாவு நெருங்கி வருவதை உணர்ந்து, தன்னுடைய மூன்று மகன்களையும் அழைத்து, “என் அன்பு மக்களே! என்னுடைய சாவு நெருங்கி வருவதை நான் உணர்கிறேன்… நான் இறப்பதற்கு முன்பு ஒரே ஒரு விடயத்தை மட்டும் உங்களிடம் சொல்லித் தெளிவுபடுத்திவிட்டால், நான் நிம்மதியாக உயிர் துறப்பேன்” என்றார். “என்ன விடயம்… சொல்லுங்கள் அப்பா… நாங்கள் அதை உடனே செய்கிறோம்” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள் அவருடைய மூன்று மகன்களும்.
உடனே தந்தை இளைய மகனைப் பார்த்து, “என் அன்பு மகனே! ஓரிரு வாரங்களுக்கு முன்பாக நம்முடைய தோட்டத்தில் நட்ட மல்லிகைச் செடியைப் பிடுங்கிக்கொண்டு வா” என்றார். “இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு இளைய மகன் தோட்டத்தில் நடப்பட்டிருந்த மல்லிகைச் செடி ஒன்றைப் பிடுங்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். பின்னர் அவர் தன்னுடைய இரண்டாவது மகனிடம், “என் அன்பு மகனே! நான் சொல்வதை நீ தட்டாமல் செய்வாய் என்று நம்புகிறேன்… நம்முடைய தோட்டத்தின் ஓரத்தில் மண்டிக்கிடக்கின்ற புதரிலிருந்து ஒரு செடியைப் பிடுங்கிக்கொண்டு வா” என்றார். அவனும், “இதோ வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு தோட்டத்தின் ஓரத்தில் மண்டிக்கிடந்த புதரிலிருந்து நன்றாக வளர்ந்திருந்த ஒரு செடியை தனது ஒரு கையால் பிடுங்க முயற்சி செய்தான் அது முடியாமல் போகவே, தன்னுடைய இரண்டு கைகளையும் பயன்படுத்தி, அந்தச் செடியை வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தான்.
கடைசியாகத் தந்தை மூத்த மகனைக் கூப்பிட்டு, “என் அன்பு மகனே! நம்முடைய தோட்டத்தின் நடுவில் வளர்ந்திருகின்ற வேப்பமரத்தைப் பிடுங்கிக் கொண்டு வா” என்றார். அவனும் தந்தை சொல்லிவிட்டார் என்பதற்காக எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல், தோட்டத்திற்குச் சென்று, அதன் நடுவில் இருந்த வேப்பமரத்தைப் பிடுங்குவதற்கு முயற்சி செய்து பார்த்தான். அவன் எவ்வளவோ முயற்சி செய்தும், வேப்பமரத்தைப் பிடுங்க முடியாமல் போகவே, தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். அப்பொழுது தந்தை, மற்ற இரண்டு மகன்களையும் பார்த்து, “நீங்களும் அவனோடு சென்று வேப்ப மரத்தைப் பிடுங்குவதற்கு முயற்சிசெய்து பாருங்கள்” என்றார். அவர்களும் தோட்டத்திற்குச் சென்று, அதன் நடுவில் இருந்த வேப்பமரத்தைப் பிடுங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள். அது முடியாமல் போகவே, தந்தையிடம் வந்து தங்களுடைய தோல்வியை ஒத்துக்கொண்டார்.
அப்பொழுது தந்தை அவர்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார், “என் அன்பு மக்களே! எந்தவொரு பாவத்திலும் விழுந்துவிடாதீர்கள்… ஒருவேளை நீங்கள் ஒரு பாவத்தில் விழுந்துவிட்டால், அதனை உடனடியாக உங்களிடமிருந்து களைவதற்கு முயற்சி செய்து பாருங்கள்… அப்படியில்லை என்றால் பெரிய மரம்போல் உங்களுடைய பாவம் வளர்ந்துவிடும் அல்லது அந்தப் பாவத்திற்கு முற்றிலுமாக நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். பிறகு அதை உங்களுடைய வாழ்விலிருந்து அகற்றுவது மிகவும் கடினம்… அவ்வளவுதான் நான் சொல்ல வந்த செய்தி.” இவ்வாறு அவர் தன் மகன்களிடம் பேசிவிட்டு, தன்னுடைய ஆவியைத் துறந்தார்.
பாவத்தைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
மாசற்றோராய் வாழ இயேசு விடுக்கும் அழைப்பு
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, யாருக்கும் இடறலாக இராதீர்கள்… அப்படி யாராவது, யாருக்கும் இடறலாக இருந்தால் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது நல்லது என்று சொல்லிவிட்டு, நம்முடைய கையோ, காலோ, கண்ணோ நம்மைப் பாவத்தில் விழச் செய்தால் உடனே அதனைப் பிடுங்கியோ, வெட்டியோ எறிந்துவிடுங்கள், இல்லையென்றால் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் சற்றுக் கடினமாக இருந்தாலும், ஒவ்வொருவருடைய உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டும், ஏனெனில், உள்ளேயிருந்துதான் எல்லா வகையான தீய எண்ணங்களும் தோன்றுகின்றன என்பதால் (மாற் 7: 20-23) அப்படிச் சொல்கின்றார்.
நரகம் பற்றிய இயேசுவின் கருத்து
இயேசு சொன்ன செய்தியை உள்வாங்கிக் கொள்ளாமல், பாவத்திற்கு அடிமையாவோர் நரகத்தில் நல்லப்படுவதாகவும் இயேசு சொல்கிறார். நரகம் எனப் பொருள்படும் கெஹன்னா (Gehenna) என்ற வார்த்தை ‘ஹின்னன் பள்ளத்தாக்கு’ (Valley of Hinnon) என்ற எபிரேய மூலத்திலிருந்து வந்த வார்த்தையாகும். இந்த ஹின்னன் பள்ளத்தாக்கு எருசலேமிற்கு வெளியில் இருக்கின்ற ஒரு பள்ளத்தாக்காகும். இப்பள்ளத்தாக்கு எப்போதும் நெருப்பு மயமாக இருக்கும். மேலும் இங்குதான் ஆகாஸ் மன்னன் மொலேக் எனப்படும் நெருப்புக் கடவுளுக்கு தன் மகன்களையே பலிகொடுத்தான் (1 குறி 28: 1-3). பாவத்திற்கு அடிமையாவோரும் இந்த ஹின்னன் பள்ளத்தாக்கினை போன்று நெருப்பு மாயமாக இருக்கும் நரகத்திற்குள் தள்ளப்படுவார்கள் என்பது இயேசு நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.
Source: New feed