எம் வானகத் தந்தாய் என்ற இயேசு கற்பித்த செபம் குறித்த தன் புதன் மறைக்கல்வித் தொடரில் கடந்த வாரம், இறைவனை நாம் தந்தை என அழைப்பது குறித்த விளக்கத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் ‘இறைவனின் திருப்பெயர் தூயது என போற்றப்பெறுக’ என்ற, அந்த செபத்தின் இரண்டாவது வாக்கியம் குறித்து எடுத்துரைத்து விளக்கமளித்தார். முதலில் இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து ‘நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்’ (எசே.36:23) என்ற பகுதி வாசிக்கப்பட, திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.
அன்பு சகோதரர் சகோதரிகளே, வானகத்திலுள்ள எம் தந்தாய் என்ற என்ற செபம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, இச்செபத்தின் ஏழு வேண்டுதல்களுள் முதலாவதான, ‘உமது பெயர் தூயது என போற்றப்பெறுக’ என்பது குறித்து நோக்குவோம். ஒரு பக்கம் இறைவனைக் குறித்து தியானிப்பதாகவும், மறுபக்கம், நம் தேவைகள் குறித்த உண்மையான விண்ணப்பத்தை கொண்டிருப்பதாகவும் உள்ள, அனைத்துச் செபங்களின் வடிவமைப்பை இங்கு நாம் காண்கிறோம். நாம் இறைவனிடம் பேசும்போது, நம்மைவிட நம்மைக் குறித்து அதிகம் அறிந்தவராக அவர் இருக்கிறார். நம்மைப் பொறுத்தவரையில் இறைவன் நமக்கு ஒரு மறைபொருளாகத் தெரிந்தாலும், அவர் கண்களுக்கு நாம் ஒரு புரியாப்புதிர் அல்ல. தன்னை நோக்கித் திரும்பும் தன் குழந்தைகளின் பார்வையை உணர்ந்து, அவர்களின் நிலையை உடனடியாகப் புரிந்துகொள்ளும் ஓர் அன்னையைப் போன்றவர் இறைவன். ஆகவே, செபத்தின் முதல் படி என்பது, நம்மையே முற்றிலுமாக அவருக்கும், அவரின் பராமரிப்புக்கும் கையளிப்பதாகும். இந்த நிலைதான் நம்மை, ‘உமது பெயர் தூயது என போற்றப்பெறுக’ என செபிக்க இட்டுச்செல்கிறது. இந்த வார்த்தைகளில் நாம் இறைவனின் மகத்துவத்தில் நம் முழு நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக, அவரின் திருப்பெயர் நம் மனங்களிலும், நம் குடும்பங்களிலும், சமூகத்திலும், உலகம் முழுவதிலும் புனிதம் என போற்றப்பட வேண்டும் எனவும் இறைஞ்சுகிறோம். நாம் இதை ஏன் கேட்கிறோம் என்றால், இறைவனே தம் அன்பால் நம்மை மாற்றியமைத்து, நம்மைப் புனிதப்படுத்துகிறார். செபம் அனைத்து அச்சங்களையும் விரட்டி அடிக்கின்றது. ஏனெனில், நாம் செபிக்கும்போது, தந்தையாம் இறைவன் நம்மை அன்புகூர்கிறார், நம் கரங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இறைமகன் தம் கரங்களை உயர்த்துகிறார், தூய ஆவியாரும் மறைவான வழியில் இவ்வுலக மீட்புக்காகச் செயலாற்றுகிறார்
Source: New feed