பொதுக்காலம் ஏழாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மாற்கு 9: 30-37
இயேசுவை ஏற்றுக்கொள்வோர் யார்?
நிகழ்வு
மேற்கு வங்காளத்தில் வித்யாசாகர் என்றோர் அறிஞர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல் அவர் கல்விக் கடலாக விளங்கினார்; அவரிடம் பேசுவதை மக்கள் பெருமையாக நினைத்தார்கள். ஒருநாள் அவருடைய தலைமையில் சொற்பொழிவாற்றும் அறியதோர் வாய்ப்பு ஓர் இளைஞனுக்குக் கிடைத்தது. பகட்டாக ஆடையணிந்துகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு இருப்பூர்தியில் (இரயில்) வந்து இறங்கினான் அந்த இளைஞன். கையில் வைத்திருந்த பெட்டியைத் தூக்கிச் செல்வது அவனுக்கு மிகவும் இழிவாக இருந்தது. எனவே, அவன் கூலியாளைத் தேடினான். அவன் நேரத்திற்கு, கூலியாள் யாரும் அங்கு கிடைக்கவில்லை.
அவன் இவ்வாறு தவிப்பதைப் பார்த்த பெரியவர் ஒருவர், “ஏதேனும் உதவி வேண்டுமா?” என்று கேட்டார். “இங்கு கூலியாள் யாரும் இல்லை… அதனால் இந்தப் பெட்டியை அரங்கம்வரை தூக்கி வரவேண்டும்” என்றார். “அவ்வளவுதானா…” என்ற அவர், “நானும் அங்குதான் செல்கிறேன்… உன்னுடைய பெட்டியை நான் தூக்கிகொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு அரங்கம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
சிறிதுநேரத்தில் இருவரும் அரங்கத்தை அடைந்தார்கள். அப்பொழுது பெட்டியைத் தூக்கிவந்த அந்தப் பெரியவரை அங்கிருந்த எல்லாரும் மாலை மரியாதையோடு வரவேற்று மேடைக்குக் அழைத்துச் சென்றார்கள். அதன்பிறகுதான் அந்த இளைஞனுக்குத் தெரிந்தது, அவர் வித்யாசாகர் என்று. உடனே அவன், ‘எல்லாரும் போற்றி வணங்கும் அறிஞர் பெருமகனாரையா இப்படி வேலை வாங்கினேன்… பெரிய தவறு செய்துவிட்டேனே’ என்று, அவருடைய திருவடிகளில் விழுந்து, “ஐயா! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டான்.
அவனைத் தூக்கிய அவர், “இளைஞனே! வருந்தவேண்டாம்…. பிறர் துன்பப்பட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது… அதனால்தான் உன்னுடைய துன்பத்தைப் போக்க உதவிசெய்தேன்” என்றார்.
எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்ட வித்யாசாகர் சாதாரண ஒரு பணியாளரைப் போன்று பணிசெய்தது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு இத்தகையதோர் அறிவுரையைத்தான் தருகின்றார். எனவே, நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீடர்கள்
இயேசு தன் சீடர்களிடம், எருசலேமில் தான் படவேண்டிய பாடுகளைக் குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றார். சீடர்களோ இதைப் பற்றி எதுவும் கவலைப்படாமல், ‘தங்களுடைய பிரச்சினை தங்களுக்கு’ என்பதுபோல் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இப்படியிருந்த சீடர்களுக்கு இயேசு என்ன அறிவுரை சொன்னார் என்று சிந்தித்துப் பார்ப்பது முன்னால், அவர்கள் ஏன் இப்படியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று அறிந்துகொள்வது நல்லது.
இயேசு மலைக்குச் செல்லும்போது தன்னோடு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் கூட்டிக்கொண்டு போகின்றார். இத்தகைய சூழ்நிலையில்தான் இயேசுயின் சீடர்கள், ‘நான் பெரியவனா, நீ பெரியவனா’ என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள். இயேசு அவ்வளவு வேதனயுடன் தன்னுடைய பாடுகளைக் குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கும்போது, சீடர்களோ அந்த கனாகனத்தைப் புரிந்துகொள்ளாமல், இப்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மிகவும் வியப்பாக இருக்கின்றது.
முதல்வராக இருக்க விரும்புகிறவர் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கவேண்டும்
தன்னுடைய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அறிந்த இயேசு அவர்களை அழைத்து, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு ஒரு சிறுபிள்ளையை எடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” என்கின்றார்.
Source: New feed