பொதுக்காலம் ஆறாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மாற்கு 8: 14-21
வாழ்க்கை என்பது போதிப்பதிலில்லை வாழ்ந்துகாட்டுவதில் உள்ளது
நிகழ்வு
ஒரு தொடர்வண்டியில், முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் ஒரு தாயும் அவருடைய பத்து வயது மகளும் பயணம் செய்தார்கள். அந்தப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்த பெரும்பாலோர் முகநூல், வாட்சப் என நோண்டிக்கொண்டிருந்தபோது, இந்தத் தாயும் இவருடைய மகளும் கையில் புத்தகம் வைத்துப் படித்துக்கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்துவிட்டு பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர், “நாங்களெல்லாம் செல்போனை வைத்து நோண்டிகொண்டிருக்கும்போது, உங்களால் மட்டும் எப்படிப் புத்தகம் படிக்க முடிகின்றது?… உங்களை விடுங்கள், இந்தச் சிறிய வயதிலும் உங்களுடைய மகளால் எப்படி புத்தகம் வாசிக்க முடிகின்றது?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இன்னொருவர், “என் மகனுக்கு செல்போன்தான் உலகம். அது இல்லாமல் அவனால் இருக்கவே முடியாது. அப்படியிருக்கும்போது உங்களுடைய மகளால் மட்டும் எப்படி புத்தகம் வாசிக்க முடிகிறது” என்று கேட்டார்.
பக்கத்துக்கு இருக்கையில் இருந்தவர்கள் எல்லாம் அந்தத் தாயிடம் கேள்வியாய் கேட்டுக்கொண்டிருந்தபோது, கடைசியாக அந்தத் தாய் சொன்னார், “எந்தக் குழந்தையும் புத்தத்தைப் படி படி என்று சொல்லிக்கொண்டிருந்தால், அது ஒருநாளும் படிக்காது. மாறாக, அந்தக் குழந்தைக்குப் படிக்கின்ற ஆர்வத்தை ஊட்ட, நாம் முதலில் படிக்கத் தொடங்கினால், அது தன்னாலே படிக்கத் தொடங்கிவிடும். நான் என்னுடைய குழந்தைக்கு புத்தகம் படிக்கின்ற ஆர்வத்தை ஊட்டவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நான் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். அதனால் என்னைப் பார்த்துவிட்டு என்னுடைய மகள் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவ்வளவுதான்.”
ஒரு விஷயத்தை மணிக்கணக்காகப் போதிப்பதைக் காட்டிலும், அதனை வாழ்ந்து காட்டுவதால், உண்டாகுகின்ற பலன் எப்போதும் அபரிவிதமாய் இருக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்” என்கின்றார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளுக்கு அர்த்தமென்ன, அதற்கும் மேலே இடம்பெற்ற நிகழ்விற்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்துப் பார்ப்போம்.
‘புளிப்பு மாவு’ என்ற பதத்தின் அர்த்தம்
புளிப்பு மாவைக் குறித்து முதலில், விடுதலைப் பயண நூலில் வாசிக்கின்றோம். இங்கு இஸ்ரயேல் மக்கள் பாஸ்கா உணவை உண்ணும்போது, புளிப்பற்ற அப்பத்தை உண்ணவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை, யாராவது புளித்த அப்பத்தை உண்டால், அவர் அன்னியரானாலும் நாட்டுக் குடிமகனாலும் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவர் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் (விப 12: 18-20). மேலும், ஆண்டவருக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே (விப 23:18) என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் சிறிதளவு புளிப்பு மாவு மாவு முழுவதையும் புளிப்புள்ளதாக மாற்றிவிடும் (கலா 5:9) என்பதால்தான்.
அடுத்ததாக, ‘புளிப்பு மாவு’ என்ற பதம் பவுலடியரால் தன்னுடைய திருமுகங்களில் கையாளப்பட்டதற்கான குறிப்புகள் இருக்கின்றன. அங்கு அவர் தப்பறைக் கொள்கை (கலா 5:1-9), பாவம் (1 கொரி 5) போன்ற அர்த்தங்களில் பயன்படுத்துகின்றார். இது இப்படி இருக்க, இயேசு கிறிஸ்து ‘புளிப்பு மாவு’ என்பதை வெளிவேடம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகின்றார் (லூக் 12:1). அதுவே இன்றைய நற்செய்தி வாசகத்தோடு இணைந்து போவதால், ‘புளிப்பு மாவு’ என்பதை வெளிவேடம் என்ற அர்த்தத்தில் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசேயர்களின் வெளிவேடம் என்ன?
பரிசேயர்களின் வெளிவேடத்தைக் குறித்து கவனமாக இருங்கள் என்று இயேசு சொல்கிறார் எனில், அவர்களைப் போன்று சொல்வது ஒன்றாம் செய்வது ஒன்றாய் இராதீர்கள்… மாறாக வாழ்ந்துகாட்டுங்கள் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கற்பிக்கின்றார். ஏனெனில் பரிசேயர்கள் சொன்னார்கள், செயலில் காட்டவில்லை (மத் 23:2). இது மட்டுமல்லாம,ல் அவர்கள் இவ்வுலகக் கவலையினால் தங்களுடைய வாழ்வினை அழித்துக் கொண்டார்கள். அதனாலும் அவர்களைக் குறித்து சீடர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று சொல்லிலும் செயலிலும் வல்லவராக இருக்கவேண்டும் (லூக் 24: 19). அதுவிட்டுவிட்டு போதிப்பது ஒன்றாய் அல்லது சொல்வது ஒன்றாய், செய்வது ஒன்றாய் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்!
சிந்தனை
வாழ்ந்து காட்டுவதை விட சிறந்த போதனை எதுவுமில்லை. ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கின்ற இந்த வாழ்வால் நாம் கடவுளின் மக்கள் என்பதை நிரூபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed