பொதுக்காலம் ஆறாம் வாரம்
திங்கள்கிழமை
மாற்கு 8: 11-13
அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு…
நிகழ்வு
கிராமப்புறத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வந்த இளங்குருவானவர் ஒருவர், ஒருநாள் திருப்பலிக்குத் தவறாது வந்த ஒரு மூதாட்டியை அழைத்து, “பாட்டி! நம்பிக்கை என்றால் என்ன? அதை மட்டும் சொல்லிவிட்டுப் போங்கள்” என்றார். மூதாட்டியோ சற்றுத் தயக்கத்துடன், “சுவாமி! நான் அவ்வளவாகப் படித்தது கிடையாது… என்னிடத்தில் போய் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறீர்களே” என்றார்.
“பரவாயில்லை பாட்டி! நான் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல நிறையப் படித்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை… நீங்கள் ஒவ்வொருநாளும் ஆலயத்திற்குத் தவறாமல் வருகிறீர்கள் அல்லவா! அதனால்தான் இந்தக் கேள்வியைக் உங்களிடம் கேட்கிறேன்” என்றார் குருவானவர். மூதாட்டி சிறிதுநேரம் யோசித்துப் பார்த்துவிட்டு, “என்னைப் பொறுத்தவரையில், நம்பிக்கை என்பது விவிலியத்தில் ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது, அவ்வளவுதான்” என்றார். அந்த மூதாட்டி சொன்ன பதிலைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்ட குருவானவர், “பாட்டி! உங்கள் பதில் மிகச்சிறப்பாக இருக்கின்றது… நம்பிக்கை என்பதற்கு இதைவிடவும் சிறப்பான பதிலை யாரும் சொல்லிவிட முடியாது… மகிழ்ச்சி!” என்று அவரை இருகைகள் கூப்பி வணங்கினார்.
நம்பிக்கை என்பதற்கு மூதாட்டி சொன்ன பதிலை விடவும் சிறந்த பதில் அல்லது சிறந்த விளக்கம் வேறு யாராலும் கொடுத்துவிட முடியுமா? என்று தெரியவில்லை. நம்பிக்கை என்பது இறைவனின் வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்று இருக்கும்போது, அதற்கு முற்றிலும் மாறாக இயேசு சொன்னதை நம்பாமல், அவநம்பிக்கையோடு அவரிடத்தில் அடையாளம் கேட்ட, பரிசேயக் கூட்டத்திற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவிடம் அடையாளம் கேட்ட பரிசேயக்கூட்டம்
நற்செய்தி வாசகத்தில், பரிசேயர் இயேசுவிடம் வந்து, வானிலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி கேட்கின்றார்கள். அவர்கள் இயேசு வழக்கமாகச் செய்துகொண்டிருந்த பேய் ஓட்டுதல், பிணிகளைப் போக்குதல் போன்ற அடையாளங்களைக் கேட்கவில்லை. மாறாக, அடையாளம் என்று அவர்கள் கேட்டதெல்லாம் விண்ணிலிருந்து நெருப்பு விழுவது மாதிரியான அடையாளம் (யோவா 6: 30-31). இதனால் இயேசு அவர்களிடம் உங்களுக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்பட மாட்டாது என்று மிக உறுதியாகச் சொல்கின்றார். இஸ்ரயேல் மக்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அப்படிப்பட்டவர்களிடம் இறைவன் மட்டில் ஆழமான நம்பிக்கை இருந்திருக்கவேண்டும்!. ஆனால், அத்தகைய நம்பிக்கை அவர்களிடம் இல்லாததினால் இயேசு வருத்தப்படுகின்றார்.
அடையாளம் கேட்பது எதைக் குறிக்கின்றது
பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் காட்டும்படி கேட்டபோது, இயேசு அவர்களிடம் எந்த அடையாளமும் கொடுக்கப்பட மாட்டாது என்று சொல்கின்றாரே, உண்மையில் அடையாளம் கேட்பது விவிலியத்தில் எதைக் குறிக்கின்றது? என்று தெரிந்துகொள்வது நல்லது.
இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைவனத்தில் நடந்துசென்றபோது, தண்ணீர் கேட்டு மேசேயிடம் வாதாடினார்கள். அதுமட்டுமல்லாமல், எகிப்திலிருந்து தங்களை அழைத்துக்கொண்டு வந்தது, இப்படித் தண்ணீர் இல்லாமல் சாகடிக்கவா? என்றெல்லாம் பேசுவார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளின் உடன் உறைதலையும் (Presence) சோதிப்பார்கள். இதனால் அந்த இடம் மாஸா என்றும் மெரிபா என்றும் அழைக்கப்பட்டது (விப 17:1-7). இஸ்ரயேல் மக்கள் இப்படி மோசேயையும் இறைவனையும் தண்ணீர் கேட்டு சோதித்ததால், அடையாளம் கேட்பது என்பது அவநம்பிக்கைக்குச் சமமாகும். பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் கேட்டதையும் அவர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைத்தான் நமக்கு தெளிவாக எடுத்துக்கூறுகின்றது.
மாற்கு நற்செய்தியில் யோனாவின் அடையாளம் கொடுக்கப்படாதது ஏன்?
பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் கேட்கும்போது, மத்தேயு நற்செய்தியில் இயேசு, யோனாவின் அடையாளத்தைக் கொடுப்பது மாதிரி இடம்பெறும். ஆனால், மாற்கு நற்செய்தியில் அப்படி எதுவும் இடம்பெறாததற்குக் காரணம், மாற்கு நற்செய்தியானது புறவினத்து மக்களுக்கு எழுதப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டுதான் யோனாவின் அடையாளம் மாற்கு நற்செய்தியில் இடம்பெறாமல் இருக்கின்றது. இயேசு தன்னுடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை மிகப்பெரிய அடையாளமாகக் குறித்துக் காட்டவே யோனானின் அடையாளத்தைப் பயன்படுத்தினார் என்பதை இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டும். அப்படியிருந்தும் பரிசேயர்கள் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததுதான் விந்தையிலும் விந்தையான ஒரு செயல்.
சிந்தனை
‘இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமை அளித்தார்’ என்பார் யோவான் நற்செய்தியாளர் (யோவா 1: 12). நாம் பரிசேயர்களைப் போன்று இயேசுவிடம் அவ நம்பிக்கை கொண்டிருக்காமல், நூற்றுவத் தலைவனைப் போன்று கானானியப் பெண்மணியைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed