IFAD என்றழைக்கப்படும் ‘வேளாண்மை முன்னேற்றத்திற்கு பன்னாட்டு நிதி’ என்ற நிறுவனம், உரோம் நகரில் நடத்தும் 42வது அமர்வைத் துவக்கி வைத்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேளாண்மையைக் குறித்து, பன்னாட்டு சமுதாயம், தன் பொறுப்பை உணர்ந்து செயலாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இன்றையச் சூழலில், காற்று, நீர், நிலம் என்ற அனைத்து இயற்கை வளங்களும் சீரழிந்து வருவதை அனைவரும் உணர்கிறோம் என்றும், இதனால், விவசாயிகள் தங்கள் பணியிலும், வாழ்வு ஆதாரங்களிலும் ஆபத்தை சந்திக்கின்றனர் என்றும் திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
வறுமையை ஒழிக்க திருஅவை முயற்சிகள்
1964ம் ஆண்டு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் மும்பையில் உரையாற்றிய வேளையில், வறியோருக்கென உலக நிறுவனங்கள் நிதி திரட்டுமாறு கேட்டுக்கொண்ட வேளையிலிருந்து, கத்தோலிக்கத் திருஅவை, வறுமையை ஒழிப்பதற்கு உலக நிறுவனங்களிடம் தொடர்ந்து விண்ணப்பித்து வந்துள்ளது என்பதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
IFAD நிறுவனம் தன் 42வது அமர்வில் வறுமை ஒழிப்பு, பட்டினி நீக்கம் என்ற முக்கியப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முன்வந்திருப்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார்.
உலகின் பல நாடுகளில், கிராமங்களில் வேளாண்மை தொடர்வதற்குத் தேவையான வசதிகளையும், வாய்ப்புக்களையும் உலக நிறுவனங்கள் துரிதமாக, தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை தன் துவக்க உரையில் அழைப்பு விடுத்தார்.
“மனச்சான்றுடன் கூடிய அறிவியல்”
இந்த அமர்வில் மேற்கொள்ளப்படும் அனைத்து பகிர்வுகளிலும், “மனச்சான்றுடன் கூடிய அறிவியல்” என்ற கருத்து வலியுறுத்தப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் விண்ணப்பித்தார்.
IFAD நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரும், பட்டினியை இவ்வுலகிலிருந்து முழுமையாக விரட்டியடிக்கவும், நீதி மற்றும் வளமையை பெருமளவு அறுவடை செய்யவும் தான் ஊக்குவிப்பதாகக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்
Source: New feed