திருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணத்தோடு தொடர்பு கொண்ட நால்வரைக் குறித்து சிந்திக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் வழங்கிய மறையுரையில் அழைப்பு விடுத்தார்.
பிப்ரவரி 8, இவ்வெள்ளி காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள திருமுழுக்கு யோவானின் மறைசாட்சிய மரணத்தை தன் மறையுரையின் மையமாக்கினார்.
நற்செய்தி கூறும் நான்கு பேர்
தானாக முடிவெடுக்க இயலாமல் தவறு செய்த ஏரோது அரசன், பழிவாங்கும் வெறியுடன் இருந்த ஏரோதியா, தற்பெருமையுடன் நடனமாடிய இளம்பெண், மற்றும் தலை துண்டிக்கப்பட்ட இறைவாக்கினர் யோவான் என்ற நான்கு பேரையும் குறித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னையே வழங்கிய திருமுழுக்கு யோவான்
“மனிதராய்ப் பிறந்தவர்களுள் பெரியவராய் பிறந்த” திருமுழுக்கு யோவான், தன் இறுதி நாள்கள் நெருங்கிவிட்டன என்பதை முன்னரே உணர்ந்தவராக, தனக்குப் பின் வரும் செம்மறியான கிறிஸ்துவை அடையாளம் காட்டிவிட்டு, பின்னர் சிறைக்குச் சென்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மறைசாட்சிய மரணமடையும் ஒவ்வொருவர் வாழ்வும், ஒரு மறைபொருள் என்று கூறியத் திருத்தந்தை, ஒவ்வொரு மறைசாட்சிய மரணமும், இறைவனுக்கு வழங்கப்படும் தனித்துவமிக்க பரிசு என்று எடுத்துரைத்தார்.
தவறுகளில் மூழ்கிய ஏரோது மன்னன்
ஊழல் நிறைந்த வாழ்வில் தன்னையே மூழ்கடித்துக்கொண்ட மன்னன் ஏரோது, தான் கொல்லத்துணிந்த மனிதர், புனிதர் என்பதை உணர்ந்தும், அவர் சார்பாக முடிவெடுக்கும் துணிவின்றி, மேலும் ஒரு தீமைக்கு தன்னையே கையளித்தான் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
யோவான் மீது வெறுப்பு கொண்டிருந்த ஏரோதியாவைக் குறித்து திருத்தந்தை பேசியபோது, வெறுப்பு என்பது, சாத்தானின் உயிர் மூச்சு என்றும், அதை தன்னகத்தே கொண்டிருந்த ஏரோதியா, அழிவு ஒன்றையே நாள் முழுவதும் எண்ணிக்கொண்டிருந்தார் என்று கூறினார்.
சாத்தானின் கைப்பாவைகள்
நடனமாடி மகிழ்வித்த இளம் பெண்ணிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்று மன்னன் ஏரோது கூறிய சொற்கள், இயேசுவைச் சோதித்த சாத்தான் கூறிய சொற்களை நினைவுறுத்துகின்றன என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏரோது, ஏரோதியா, இளம்பெண் ஆகிய மூவரும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்ததை நாம் உணர்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
தன் மறையுரையின் ஒரு தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த டுவிட்டர் செய்தியில், “ஒவ்வொரு நாளும், நம் குடும்பங்களில், மற்றவர்களுக்கு நம் வாழ்வை அன்புடன் வழங்கும்போது, வாழ்வுக்கு மதிப்பு உள்ளது” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.
Source: New feed