அன்பு சகோதரர், சகோதரிகளே,
‘பேறுபெற்றோர்’ என்ற சொல்லுடன், இயேசு தன் படிப்பினைகளைத் துவக்குகிறார். அதே சொல்லை, இன்று, நமக்கு மறுபடியும் சொல்கிறார். நீங்கள் இயேசுவுடன் இருந்தால், அவரது வார்த்தையை ஒவ்வொரு நாளும் வாழ்ந்தால், நீங்கள் பேறுபெற்றோர். நீங்கள் பேறு பெறுவீர்கள் என்று இயேசு கூறவில்லை, மாறாக, நீங்கள் பேறு பெற்றுள்ளீர்கள் என்றே கூறுகிறார். இந்த மகிழ்வை இவ்வுலகின் எந்த ஒரு சூழலும் நம்மிடமிருந்து எடுத்துவிட முடியாது. துன்பங்கள் நடுவிலும் அமைதியைக் கொணரும் மகிழ்வு இது. அன்பு சகோதரர் சகோதரிகளே, உங்களைச் சந்தித்ததால் எனக்கு உண்டான மகிழ்வுடன், உங்களுக்கு நான் கூற விழைவது: நீங்கள் பேறுபெற்றோர்!
இயேசு கூறும் ஒவ்வொரு பேறும் நம் கவனத்தில் பதிகின்றது. இவ்வுலகம் எண்ணிப்பார்க்கும் பேறுகளுக்கு மாறான பேறுகளை இயேசு முன்வைக்கிறார். பொதுவாக, சக்தி மிகுந்தவர்களாய், செல்வம் நிறைந்தவர்களாய் இருந்தால், நம்மை பேறுபெற்றவர்கள் என்று மக்கள் கூறுவர். ஆனால், இயேசுவுக்கோ, வறியோர், கனிவுடையோர், இவ்வுலகத்தினால் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போனாலும், நீதியுடன் வாழ்வோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோர் பேறுபெற்றோர்.
இயேசு கூறுவது சரியா, இவ்வுலகம் சொல்வது சரியா?
இக்கேள்விக்கு இயேசு தன் வாழ்வின் வழியே பதில் சொல்கிறார். அவர், வறுமையில் வாழ்ந்தார் ஆனால், அன்பில் செல்வம் மிகுந்தவராக இருந்தார்; மற்றவர்களின் துன்பங்களைக் களைந்தார், ஆனால், தன் துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்; பணி பெறுவதற்கன்று, பணி புரியவே வந்தார்; வைத்திருப்பதைவிட, தருவதே மேல் என்பதைச் சொல்லித்தந்தார். இந்த அன்பு வழியில்தான், அவர், மரணத்தை, பாவத்தை, அச்சத்தை, இவ்வுலகப் போக்கை வென்றார். இயேசுவைப் பின்பற்றுவது எனில், இவ்வழியைப் பின்பற்றுவதாகும். இதை நீங்கள் நம்புகிறீர்களா?
நீங்கள் நற்செய்தியை வாழ்வாக மாற்றியுள்ளதற்காக உங்களுக்கு நன்றி கூற வந்துள்ளேன். எழுதப்பட்ட இசைக்கும், இசைக்கப்படும் இசைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப்போல, எழுதப்பட்ட நற்செய்திக்கும், வாழும் நற்செய்திக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் நீங்கள் நற்செய்தியின் இராகத்தை உணர்ந்து, ஆர்வமாய் பாடுகிறவர்கள். பல்வேறு நாடுகள், மொழிகள் கலாச்சாரங்களிலிருந்து வந்திருந்தாலும், நீங்கள் அனைவரும் இணைந்து நற்செய்தியைப் பாடுகிறீர்கள். ஆயர் ஹிண்டர் ஒருமுறை உங்களைப்பற்றி என்னிடம் கூறினார்: அதாவது, அவர் உங்களுக்கு மேய்ப்பராக இருப்பதைக் காட்டிலும், நீங்கள், உங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால், அவருக்கு மேய்ப்பராக விளங்குகிறீர்கள் என்று.
பேறுபெற்றோராக, இயேசுவைப் பின்பற்றுபவராக வாழ்வது, எப்போதும் மகிழ்வுடன் வாழ்வது என்று பொருள் அல்ல. உங்கள் சொந்த நாடுகளை, இல்லங்களை, குடும்பங்களை விட்டு தூரமாக வாழ்வது, எளிதல்ல. எதிர்காலத்தைப் பற்றிய உறுதி இல்லாமல் வாழ்வது, எளிதல்ல. ஆனால், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். பாலை நிலத்தில் துறவியாக வாழ்ந்த புனித அந்தனி அவர்களின் வாழ்வில் நிகழ்ந்தது, நமக்கு உதவியாக இருக்கும். அவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் துறந்து, பாலை நிலத்திற்கு தவம் புரியச் சென்றார். சில வேளைகளில் அவர் போராட வேண்டியிருந்தது. அவரது போராட்டங்களுக்குப்பின்னர், கடவுள் தோன்றி, ஆறுதல் வழங்கினார். அப்போது, அந்தனி இறைவனிடம், “இதுவரை எங்கிருந்தீர்? என் துன்பங்களிலிருந்து விடுவிக்க ஏன் வரவில்லை?” என்று கேட்டார். இறைவன் அவரிடம், “நான் உன்னோடுதான் இருந்தேன், அந்தனி” என்று கூறினார். நம் துன்பங்களில் இறைவன் நம்முடன் இருக்கிறார். அவரை நம்பி நாம் வாழ்வைத் தொடர்ந்தால், அவர், பாலை நிலத்திலும் பாதைகளை அமைப்பார் (எச. 43:19).
‘பேறுபெற்றோர்’ வழியில் நடப்பது, ஆரவாரமாகச் செயலாற்றுவது அல்ல. இயேசுவின் வாழ்வைப் பாருங்கள்: அவர் எந்த ஒரு நூலும் எழுதவில்லை, பிரம்மாண்டமாக எதையும் கட்டியெழுப்பவில்லை. அதேபோல், அவர் நம்மையும் வாழ அழைக்கிறார். நம் வாழ்வு என்ற ஒரு கலைப்படைப்பை உருவாக்குமாறு அவர் நம்மிடம் கேட்கிறார்.
இயேசு கூறிய பேறுகள், நம் வாழ்வின் வழியைக் காட்டும் வரைப்படம். இயேசுவை நம் வாழ்வில் ஒவ்வொருநாளும் பின்பற்றினாலே போதும், வேறு எதையும் பிரம்மாண்டமாகச் செய்யவேண்டாம் என்று அவர் கேட்கிறார். இயேசு கூறிய பேறுகள், ‘சூப்பர்’ நாயகர்களுக்காக உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக, எளிய மனிதர்களாகிய நமக்கு உருவாக்கப்பட்டவை. பாழடைந்த நிலத்தில் ஊன்றப்பட்டாலும், மாசுபட்ட காற்றை உள்வாங்கி, ஒவ்வொருநாளும், ஆக்சிஜன் என்ற உயிர் மூச்சை வெளியிடும் மரத்தைப்போல் வாழ நம்மை அழைப்பதே, இயேசு கூறிய பேறுகள். இவ்வாறு நீங்கள் வாழ்வீர்கள் என்பதே என் நம்பிக்கை.
இறுதியாக, பேறுபெற்றோர் வரிசையில் இரு அம்சங்களை சிந்திக்க விழைகிறேன். முதலில்: “கனிவுடையோர் பேறுபெற்றோர்” (மத். 5:5). மற்றவர்களைத் தாக்கி, வெல்பவர்கள் பேறுபெற்றோர் அல்ல, மாறாக, தங்கள் மீது பழி சுமத்துவோர் மீதும் கனிவுடையோர், பேறுபெற்றோர். தங்களைத் தாக்க வரும் கிறிஸ்தவர் அல்லாதோர், மற்றும், இஸ்லாமியரைக் குறித்து, அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன் உடன் துறவிகளுக்கு அறிவுரைகள் தந்தார். “நாம் அவர்களுடன் வாக்குவாதங்களை மேற்கொள்ள வேண்டாம். ஆனால், நாம் கிறிஸ்தவர்கள் என்பதை அன்புடன் பறை சாற்றவேண்டும்” (Regula Non Bullata, XVI) என்று அவர் கூறினார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வந்தவர்களைச் சந்திக்க பலர் ஆயுதங்களை ஏந்திச்சென்ற வேளையில், கிறிஸ்தவர்கள், அன்பையும், கனிவையும் ஏந்திச் செல்லவேண்டும் என்று புனித பிரான்சிஸ் கூறினார்.
இரண்டாவது: “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்” (மத். 5:9). தான் வாழும் சமுதாயத்தில் துவங்கி, கிறிஸ்தவர்கள் அமைதியை வளர்க்கின்றனர். திருவெளிப்பாடு நூலில், இயேசு குறிப்பிடும் பல்வேறு திருஅவைகளில், பிலதெல்பியா திருஅவை, உங்கள் சமுதாயத்தை ஒத்திருக்கிறது. இந்த ஒரு திருஅவைக்கு, எந்த ஒரு கடினமான சொல்லும் வழங்கப்படவில்லை. ‘பிலதெல்பியா’ என்ற சொல்லுக்கு, ‘உடன்பிறந்த அன்பு’ என்பது பொருள். எந்தத் திருஅவை, இறைவனின் வார்த்தையை ஏற்று, உடன்பிறந்த உணர்வுடன் வாழ்கிறதோ, அது இறைவனுக்கு ஏற்புடைய திருஅவையாகத் திகழும். உங்களிடையே, அமைதி, ஒன்றிப்பு, ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை ஆகியவை வளர நான் வேண்டுகிறேன்.
Source: New feed