உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்த போது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு.
அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை :
ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழா .
கி.பி. 526 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டிநோபுள் நகரை மிகப்பெரிய கொள்ளை நோய் தாக்கவே, சிறியவர் முதல் பெரியவர் வரை மக்களில் நிறையப்பேர் இறந்து போனார்கள். இதைப் பார்த்த யாவரும் செய்வதரியாமல் திகைத்தார்கள். அப்போது திருத்தந்தை முதலாம் ஜஸ்டின், இந்த கொள்ளை நோயை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, மக்கள் அனைவரையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்பதுதான் எனத் தீர்மானித்து, அவ்வாறு ஜெபித்தார். இதனால் விரைவிலேயே கொள்ளைநோய் நீங்கியது. அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
உடனே திருத்தந்தை அவர்கள், ஆண்டவர் மக்களை சிறப்பான விதத்தில் கொள்ளைநோயியிலிருந்து காப்பாற்றியதால், அனைவரையும் ஆண்டவர் இயேசுவை கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடப் பணித்தார். அப்படித் தோன்றியதுதான் இவ்விழா.
வரலாற்றுப் பின்புலம் .
இன்று நாம் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றோம். இதற்கான வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கின்றபோது, அது விடுதலைப் பயண நூலிலே காணக்கிடக்கிறது.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்து என்னும் அடிமைத்தன வீட்டிலிருந்து விடுப்பதற்காக பத்துவிதமான வாதைகளை அனுப்பினார். அவற்றில் ஒன்றுதான் ஆண் தலைப்பேறுகளைக் கொல்லுதல். ஆண்டவரின் தூதர் எகிப்து நாட்டினரின் வீடுகளைக் கடந்துசெல்கிறபோது இரத்தம் தெளிக்கப்படாத வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறுகளைக் கொன்றுபோடுகிறார். அதேநேரத்தில் ஏற்கனவே இரத்தம் தெளிக்கப்பட்டு இருந்த இஸ்ரயேலரின் வீடுகளில் இருந்த ஆண் தலைப்பேறுகளை அவர் கொல்லாமல் கடந்துசெல்கிறார். இதன் பொருட்டுதான் ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம் என்ற ஒரு நிலை உருவாகிறது. இதனை விடுதலைப் பயண நூல் 13:2 ல் நாம் வாசிக்கின்றோம், “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை”.
இயேசு தலைப்பேறு என்பதனால் மரியாவும் யோசேப்பும் அவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து ஆண்டவரின் கட்டளையை, மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுக்கிறார்கள். மோசேயின் சட்டப்படி, குழந்தையை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் நாளில் செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவம்போக்கும் பலியாகவும் குருவிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால் மரியாவும் ஜோசேப்பும் ஆட்டுக்குட்டியை கொண்டுவர வசதி இல்லாததால் இரு மாடப்புறாக்களைக் கொடுத்து மோசேயின் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். இயேசு இறைமகன். அப்படியிருந்தாலும் அவருடைய பெற்றோர்கள் மோசே இட்ட கட்டளையை நிறைவேற்றி, எல்லாருக்கும் முன்மாதிரியாய் விளங்குகிறார்கள்.
இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கும்போது அங்கே சிமியோனும் அன்னாவும் வந்து அவரைக் கண்டுகொள்கிறார்கள்.
இவ்விழா ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை முதலாம் ஜஸ்டின் என்பவரால் திருச்சபையில் சேர்க்கப்பட்டது என்பதை மேலே பார்த்தோம். ஆனால் எட்டாம் நூற்றாண்டில்தான் இவ்விழா இன்னும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தந்தை முதலாம் செர்கியுஸ் என்பவர்தான் குருக்களும் இறைமக்களும் கையில் மெழுகுதிரிகளை ஏந்தி, பவனியாகச் செல்லவேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். அதனால்தான் இவ்விழா மெழுகுதிரி திருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் .
ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நம்மை முழுமையாய் ஆண்டவருக்கு அர்பணித்தல்
இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, அவர் தன்னையே முழுமையாய் ஆண்டவர் பணிக்காய் அர்ப்பணிக்கின்றார். அதனால் அவர் மரியாவும் யோசேப்பும் காணாமல்போன தன்னை மூன்று நாட்களுக்குப் பிறகு கோவிலில் கண்டுபிடிக்கும்போது, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என்னுடைய தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்கிறார் (லூக் 2:49). அதைப் போன்று “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு என்கிறார் (யோவா 4:34). இவ்வாறு அவர் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறகு இறைவனின் விருப்பமே தன்னுடைய விருப்பம் என உணர்ந்து செயல்படுகிறார். திருமுழுக்கின்போது முற்றிலுமாக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாம், கடவுளுக்காக நம்மையே நாம் அர்ப்பணிக்கிறோமா? அல்லது கடவுளின் திருவுளத்தை ஏற்று நடக்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
Source: New feed