கடந்த வார இறுதியில், பானமா நாட்டில், உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, சனவரி 28, திங்கள் நண்பகல், உரோம் நகர் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செவ்வாய்க்கிழமையன்று ‘ரோமன் ரோட்டா’ அப்போஸ்தலிக்க நீதிமன்றத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார். புதனன்றும், அவரது வழக்கமான மறைக்கல்வி உரை இடம்பெற்றது.
துவக்கத்தில், லூக்கா நற்செய்தி, முதல் பிரிவிலிருந்து ஒரு சிறு பகுதி வாசிக்கப்பட்டது: ‘மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்’, (லூக்கா 1:38-39) இந்த வாசகத்தைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அண்மை பானமா திருத்தூதுப்பயணம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
அன்பு சகோதர சகோதரிகளே, உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களையொட்டி, பானமா நாட்டில் நான் மேற்கொண்ட பயணத்தின்போது, பானமா மக்கள் மீதும், தலத்திருஅவை மீதும் பொழியப்பட்ட அருளுக்காக, இறைவனுக்கு நன்றிகூற உங்களையும் அழைக்கின்றேன். அந்நாட்டில், இன்முகத்துடன் எனக்கு வழங்கப்பட்ட வரவேற்பிற்காக, அரசுத்தலைவருக்கும், ஏனைய அரசு அதிகாரிகளுக்கும், குறிப்பாக, தன்னார்வலப் பணியாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன். பல்வேறு மக்கள் குழுக்கள் அங்கு கூடி வந்திருந்தது, உலக இளையோர் நாளுக்கே உரிய முகங்கள் மற்றும் மொழிகளின் சங்கமமாகவும், பல்வேறு நாடுகளின் கொடிகளை அவர்கள் அசைத்துக்கொண்டே நின்றது, இவ்வுலகின் அமைதிக்கான புளிப்புமாவாக, இளம் கிறிஸ்தவர்கள் உள்ளார்கள் என்பதன் இறைவாக்கு அடையாளமாகவும் இருந்தது. இளையோர் நாள் கொண்டாட்டங்களின் முக்கியக் கூறுகளுள் ஒன்று, சிலுவைப்பாதை. பானமாவில் அந்த இளையோர், மத்திய அமெரிக்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளின் துன்ப துயர்களையும், அதையும் தாண்டி, குறிப்பாக, ஏழ்மையாலும், அடிமைத்தனங்களாலும், ஹெச்.ஐ.வி. மற்றும் எயிட்சாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களையும் இயேசு மற்றும் அன்னை மரியாவோடு இணைந்து சுமந்தனர். இளையோர் நாள் கொண்டாட்ட ஞாயிறு திருப்பலியில், உயிர்த்த இயேசு, இளையோரோடு புத்துணர்வாகப் பேசினார். நற்செய்தியை இன்றே வாழும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார், ஏனெனில், இளையோரே திருஅவை மற்றும் உலகின் தற்கால வாழ்வு என்பது இளையோரே. இறுதியாக, பானாமாவில், புதுப்பிக்கப்பட்ட பேராலயத்தின் திருப்பலி பீடத்தை திருநிலைப்படுத்தவும், திருமுழுக்கு பெறும் சடங்கிலும், உறுதிப்படுத்தல் திருவருள்சாதன சடங்கிலும், குருத்துவ திருநிலைப்பட்டிலும் பயன்படுத்தப்படும் புனிதப்படுத்தும் எண்ணெய் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த எண்ணெய், தூய ஆவியாரிடமிருந்து வாழ்வைப் பெறுவதற்கு உதவுகிறது, மற்றும், அதன் வழியாக, இயேசுவின் இளம் மேய்ப்புப்பணி சீடர்களாக உலகம் முழுவதும் திருப்பயணத்தைத் தொடர பலமளிக்கிறது, என்றார்.
இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை அவர்கள், இவ்வியாழனன்று, அதாவது, ஜனவரி 31ம் தேதி, புனித ஜான் போஸ்கோவின் திருவிழா உலகம் முழுவதும் திருஅவையில் சிறப்பிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார். கைவிடப்பட்ட இளையோருக்கு நம்பிக்கையையும், அவர்கள் தங்குவதற்கேற்ற உறைவிடத்தையும், வருங்காலத்தையும் வழங்கிய புனித ஜான் போஸ்கோவின் சாட்சிய வாழ்வு, நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்
Source: New feed