அன்பு இளையோரே, மாலை வணக்கம். உலக இளையோர் நாள் என்பது, உலகுக்கும் திருஅவைக்கும் மகிழ்ச்சி, மற்றும், நம்பிக்கையின் கொண்டாட்டம், மற்றும், விசுவாச சாட்சியம் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. நான் போலந்தின் கிரக்கோவ் நகருக்கு சென்றிருந்தபோது, பலர் என்னிடம், நான் பானமாவுக்கு வருவேனா? என்று கேட்டபோது, ‘எனக்கு அது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் பேதுரு நிச்சயம் அங்கு இருப்பார்’ என்று கூறினேன்.
இன்று உங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் புதுப்பிக்கவும் கொண்டாடவும் பேதுரு உங்களுடன் இருக்கிறார். திரு அவையும் பேதுருவும் உங்களுடன் நடைபோடுகின்றனர். நாங்கள் உங்களிடம் கூறுகிறோம், அஞ்சாமல் துணிந்து நடைபோடுங்கள். திருஅவையின் தொடர்ந்த புத்தும்புது உணர்வையும் இளமை துடிப்புடைய உணர்வுகளையும் மீண்டும் கண்டுகொண்டு தட்டியெழுப்ப இளையோராகிய உங்களுடன் இணைந்து உழைக்க விரும்புகிறோம். இதற்கு நமக்கு தேவைப்படுவது, பிறருக்கு செவிமடுப்பதும், பிறரோடு பகிர்ந்து கொளவதும், நம் சகோதர சகோதரிகளுக்கு பணிபுரிவதன் வழியான சாட்சிய வாழ்வுமாகும்.
தொடர்ந்து இணைந்து நடப்பது மிக மகிழ்ச்சிக்குரிய விடயம். அவ்வாறு தான் நாம் இங்கும் வந்து இணைந்துள்ளோம். பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், பழக்க வழக்கங்கள், பின்னணிகள், வரலாறுகளை நாம் கொண்டிருந்தாலும், நாம் இங்கு ஒன்றிணைந்து சிறப்பிப்பதை எதனாலும் தடை செய்ய முடியவில்லை. உண்மை அன்பு, நியாயமான வேறுபாடுகளை அழிக்க முயல்வதில்லை, மாறாக, அவற்றை, மேலான ஓர் ஒன்றிப்பில் இணைந்திருக்கச் செய்கிறது.
ஒருவர் மற்றவரோடு ஒன்றித்திருப்பதற்கு அவர்களைப்போல் நாமும் மாறத் தேவையில்லை, மாறாக, நாம் அனைவரும் பகிரும் அந்த கனவை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குக் கற்றுத் தருகிறீர்கள். அனைவருக்கும் இடமளிக்கும் கனவு இது. இந்த கனவிற்காகவே இயேசு, தன் வாழ்வை சிலுவையில் கையளித்தார். இந்த கனவுக்ககாகவே தூய ஆவியானவரும் பெந்தகோஸ்தே நாளின்போது அனைவர் இதயங்களிலும் நெருப்பை மூட்டினார். ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த கனவு வளரட்டும் என்ற நம்ப்பிக்கையுடனேயே வானகத்தந்தையும், இயேசு எனும் கனவை விதைத்தார். நம் நரம்புகளின் வழி ஓடும் இந்த கனவுதான், ‘நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ என இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், நம்மை மகிழ்ச்சியில் நடனமாட வைக்கின்றது.
இப்பகுதியைச் சேர்ந்த புனிதர் ஆஸ்கர் ரொமேரோ கூறுவதுபோல், கிறிஸ்தவம் என்பது நம்ப வேண்டிய உண்மைகள், கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள், தடைச் செய்யப்பட்டவைகள் ஆகியவற்றின் தொகுப்பு அல்ல. அத்தகையக் கண்ணோட்டம், நம்மை மனந்தளரச் செய்யும். கிறிஸ்தவம் என்பது என்னை அளவற்று அன்புகூர்ந்து, என் அன்பை எதிர்பார்த்த கிறிஸ்துவே. நாம் கேட்கலாம், எதனால் நாம் ஒன்றித்திருக்கிறோம், எது நம்மை இணைத்து வைத்திருக்கிறது என்று. நம்மை இதற்கு தூண்டுவதெல்லாம் கிறிஸ்துவின் அன்பே. நம்மை ஒடுக்காத, நம் குரலை அடக்காத, நம்மை கீழ்மைப்படுத்தாத, அடக்கியாள முயலாத அன்பு அது. நமக்கு விடுதலையளித்து, குணப்படுத்தி, நம்மை எழுப்பிவிடும் அன்பு இது. நமக்குள் ஒப்புரவை வளர்த்து, புதிய மாற்றங்களை வழங்கி, ஒரு வருங்காலத்தை வழங்கும் அன்பு இது. சேவை புரிவதற்கு கைகளை நீட்டும் இந்த அன்பு, தன்னை விளம்பரப்படுத்தாத அர்ப்பணத்தை உள்ளடக்கியது. இந்த அன்பை நீங்கள் நம்புகிறீர்களா? இதன் பொருள் புரிகிறதா?
Source: New feed