பொதுக்காலம் இரண்டாம் வாரம்
வியாழக்கிழமை
மாற்கு 3:7-12
மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு…
நிகழ்வு
அந்தப் பெருநகரில் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் குடியிருந்து வந்த ஒரு பணக்காரப் பெண்மணியிடம் நூறு ஆண்டுகளுக்கும் பழமையான, அதே நேரத்தில் விலையுயர்ந்த கண்ணாடிக் கூஜா ஒன்று இருந்தது. அதை அவர் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்தார். அது மட்டுமல்லாமல், தன்னைப் பார்க்க வந்தவர்களிடத்தில் எல்லாம் அவர் அதனுடைய பெருமையை நீண்டநேரம் பேசிவந்தார்.
இப்படியே நாட்கள் உருண்டோடிக் கொண்டிருக்கும்போது, ஒருநாள் தவறுதலாக அவருடைய கை பட்டு, அவர் வைத்திருந்த கண்ணாடிக் கூஜாவானது சுக்கு நூறாக நொறுங்கிப்போனது. அப்போது அவர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அதை நினைத்தே அவர் ஒருசில வாரங்கள் கவலையில் மூழ்கியிருந்தார்.
இந்நிலையில் அவருடைய வீட்டிற்கு தெரிந்த பெரியவர் ஒருவர் வந்தார். அவர் அந்தப் பெண்மணி கவலை தோய்ந்த முகத்தோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அவருடைய கவலைக்கான காரணத்தைக் கேட்டார். அந்தப் பெண்மணியும் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் பெரியவரிடத்தில் எடுத்துச் சொன்னார். அப்போது அந்த பெரியவர் சொன்னார், “ஒரு சாதாராண கண்ணாடிக் கூஜா உன்னுடைய மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டு விட்டதே. இந்த கண்ணாடிக் கூஜா என்றில்லை. எதன்மீதும் நீ அளவுக்கு அதிகமாக பற்றுக்கொண்டால் இதுதான் நடக்கும். ஆகையால் எதற்கும் அடிமையாமலும் எதன்மீதும் அளவுக்கதிகமான பற்றுக்கொள்ளாமலும் இரு. அப்போது உன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்”.
ஆம், எதற்கும் அடிமையாகாமலும் எதன்மீதும் பற்றுக்கொள்ளாமலும் இருந்தால் நம்முடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
மக்கள்கூட்டத்திடமிருந்து விலகியே இருந்த இயேசு
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்கள்கூட்டம் தன்னை நெருக்கிவிடாதவாறு இருக்க, தன்னுடைய சீடர்களிடம் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு சொல்கின்றார். இயேசு ஏன் அவ்வாறு சொல்கிறார் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்த்து, அவர் கடைப்பிடித்து வந்த விழுமியங்களை நாம் நம்முடைய வாழ்வில் எப்படிக் கடைப்பிடித்து வாழ்வது என்று பார்ப்போம்.
இயேசு மக்கள் கூட்டத்திடமிருந்து விலகி இருந்ததற்கான முதன்மையான காரணம், அவர் எதன்மீதும் ஆசையில்லாமல், பற்றில்லாமல் இருந்தார் என்பதே ஆகும். இயேசுவின் காலத்தில் இருந்த பரிசேயர்களும் மறைநூல்கள் அறிஞர்கள் மக்கள் தங்களைப் பார்க்கவேண்டும் (மத் 23:5), புகழவேண்டும் என்று எல்லாவற்றையும் செய்துவந்தார்கள். இயேசுவுக்கு மக்களுடைய பாராட்டோ, புகழ்ச்சியோ தேவையே இல்லை ஏனெனில் அவர் கடவுள் தன்மையிலிருந்து தம்மையே வெறுமையாக்கியவர் (பிலி 2: 7-8). அப்படிப்பட்ட இயேசு தாமரை இலை தண்ணீர் போல மக்கள் கூட்டத்திடமிருந்து ‘விலகியே’ இருந்தார்.
இரண்டாவது காரணம், இயேசுவை மக்கள் ஒரு ‘புதுமைகள் செய்பவராகப்’ பார்த்தார்கள். இயேசுவிடத்தில் சென்றால், வயிறார உணவு கிடைக்கும் (யோவா 6:26); நோய்கள் எல்லாம் நீங்கும் என்ற எண்ணத்தோடும் சென்றார்கள். இதை ஒன்றும் குறை என்று சொல்லமுடியாது என்றாலும்கூட, இயேசு போதித்த விழுமியங்களின்படி வாழ அவர்கள் தயங்கினார்கள். ‘எவ்வளவு வேண்டுமாலும் உம்மிடமிருந்து ஆசிபெற்றுக்கொள்வோம். ஆனால் நீர் போதிப்பதை எல்லாம் எங்களால் கடைப்பிடித்து வாழமுடியாது’ என்ற மனநிலையில் மக்கள் இருந்ததால், இயேசு அவர்களிடமிருந்து விலகியே இருக்கின்றார்.
மூன்றாவது, அதே நேரத்தில் மிக முக்கியமான காரணம், இயேசு செய்த அருமடையாளங்களை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் “இவரே உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர்” என்று அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்க முயன்றார்கள் (யோவா 6:14-15). அதனாலும் இயேசு மக்கள் கூட்டத்திலிருந்து விலகியே இருந்தார். இயேசு இந்த உலகத்திற்கு அதிகாரம் செலுத்தவோ, அடக்கி ஆளவோ வரவில்லை. மாறாக ஒரு துன்புறும் ஊழியனைப் போன்று மக்களுக்காக தன்னையே தரவந்தார். அதற்காகத்தான் அவர் அருமடையாளங்களை ஆற்றிவந்தார். ஆனால் மக்கள் அவற்றினைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அரசராக்க முயன்றதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையானது.
சிந்தனை
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு” என்பார் ஐயன் திருவள்ளருவர். இந்த உலக செல்வத்தின் மீதான நம்முடைய பற்றுகளை விடுத்து, உண்மையான இறைவன்மீது மட்டுமே பற்றுக்கொண்டு வாழவேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாக இருக்கின்றது. எனவே, நாமம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று இந்த உலக மாயைகளில் சிக்கிவிடாமல், உண்மையான இறைவன்மீது மட்டுமே பற்றுக்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed