பெரியவர் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தார். அவர் அங்கு சென்றிருந்த நேரம், சாலையோரத்தில் நரிக்குறவர் ஒருவர் குரங்குக் குட்டியை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த மக்களும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் குரங்குக்குட்டியை வைத்து வித்தை காட்டிக்கொண்டிருந்த நரிக்குறவர்மீது ஏற, அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார். அவரோடு இருந்த குரங்குக்குட்டி மட்டும் எப்படியோ சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. செய்தி அறிந்து காவல்துறையினர் விரைவாக அங்கு வந்து, அடிப்பட்டு செத்துக் கிடந்த நரிக்குறவரை ஓர் ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; போக்குவரத்தையும் சரிசெய்து, சிறிதுநேரத்திலேயே அந்த இடத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார்கள்.
காரில் அடிபட்ட குரங்குக்குட்டி மட்டும் யாராலும் கவனிக்கப்படாமல் ஓர் ஓரத்தில் முனங்கிக்கொண்டே கிடந்தது. அதைக் கவனித்த பெரியவர் தன்னுடைய வீட்டிற்குத் தூக்கிச் சென்று வைத்தியம் பார்த்தார். ஒருசில நாட்களிலேயே அது பூரணமாகக் குணமடைந்து அவரோடு ஒட்டிக்கொண்டது. இதற்குப் பின்பு பெரியவர் அந்த குரங்குக்குட்டியை தன் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே பாராமரித்து வந்தார். இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கும்போது, பெரியவர் எப்போதெல்லாம் அந்தக் குரங்குக் குட்டியின் வயிற்றுப் பகுதியைத் தொட்டாரோ, அப்போதெல்லாம் அது வலியால் துடிப்பதைக் கண்டார். ‘இந்த குரங்குக்குட்டிக்கு என்ன ஆயிற்று!, ஏன் இதனுடைய வயிற்றுப் பகுதியை நாம் தொடுகிற போதெல்லாம் வலியால் துடிக்கின்றது’ என்று அதனுடைய வயிற்றுப் பகுதியைத் தடவிப் பார்த்தார்.
அப்போது ஒரு கயிறானது அதனுடைய வயிற்றுப் பகுதியில் இறுகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டார். “இந்த குரங்குக் குட்டி இத்தனை நாளும் வலியால் துடித்ததற்கு முன்பு இதனுடைய வயிற்றில் கட்டப்பட்டிருந்த இந்தக் கயிறுதான் காரணமோ’ என்று அதனை அறுத்துப் போட்டார். அன்றிலிருந்து அது மிகவும் சந்தோசமாகவும் சுதந்திரமாகவும் அலைந்தது.
எப்படி அந்த குரங்குக்குட்டியின் வயிற்றில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுக்கப்பட்டதும், அது மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் அலைந்தோ, அது போன்று நம்முடைய பாவங்களை இறைவன் மன்னிக்கின்றபோது நாம் பாவத்திலிருந்து சுதந்திரம் அல்லது விடுதலை பெற்ற மக்களாக மாறுவோம் என்பது உண்மை.
முடக்குவாதமுற்றவரைச் சுமந்து வந்த நால்வர்
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கப்பர்நாகுமில் உள்ள வீட்டில் போதித்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் இருந்த வீட்டின் கூரையைப் பிய்த்து, முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் வைத்து நால்வர் கீழே இறக்குகிறார்கள். இந்த நான்குபேரும் நமக்கு ஒருசில செய்திகளை விட்டுச் செல்கின்றார்கள்.
முதலாவதாக, ‘நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்’ (மாற் 1:17) என்று இயேசு பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் சொன்ன வார்த்தைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பது போன்று, நற்செய்தியில் வருகின்ற இந்த நான்கு பேரும் முடக்குக்வாதமுற்ற மனிதரை இயேசுவிடம் கொண்டு வருகின்றார்கள். இரண்டாவதாக, இந்த நால்வரும் ‘இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கின்றது, அதனால் அவர் அருகே நாம் செல்வது கடினம்’ என்று மனமுடைந்து போகாமல், நம்பிக்கையோடு இயேசுவிடம் முடக்குவாதவற்றரைக் கொண்டு செல்கின்றார்கள். மூன்றாவதாக, அந்த நால்வரும் கூட்டாகச் செயல்படுகின்றார்கள்.
இவற்றையெல்லாம் காணும் இயேசு, முடக்குவாதமுற்ற மனிதருக்கு நலம்தருகிறார்.
பாவங்களை மன்னித்து நலமளிக்கும் இயேசு
முடக்குவாதமுற்ற மனிதரை நால்வரும் கூரையைப் பிய்த்து இறக்குவதைப் பார்த்த இயேசு, அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்கின்றார். இதைக் கேட்டு அங்கிருந்த மறைநூல் அறிஞர்கள், “இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்” என்று தங்களுடைய உள்ளத்தில் எண்ணத் தொடங்குகிறார்கள்.
இங்கே இரண்டு கேள்விகள் நம்முன்னால் எழும். ஒன்று. முடக்குவாதமுற்றரைக் குணப்படுத்திய இயேசு, நேரடியாகக் குணப்படுத்தியிருக்கலாமே? ஏன் பாவங்களை மன்னித்துக் குணப்படுத்தவேண்டும்? என்பது. இரண்டு. பாவங்களை மன்னிக்க இயேசுவுக்கு அதிகாரம் உண்டா? இல்லையா? என்பது.
மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்கள் பாவத்தின் விளைவாகவே வருகின்றன என்ற நம்பிக்கை யூதர்களிடத்தில் இருந்து வந்தது. (யோவா 9:1-3). இதனால் இயேசு அவர்களுடைய போக்கிலே, புரிதலே போய் முடக்குக்வாதமுற்ற மனிதரின் பாவங்களை மன்னித்து அவருக்கு நலம் தருகின்றார். அடுத்ததாக இயேசு இறைமகன், அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு (மத் 28:18). அதனால் அவருக்கு பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரரும் உண்டு. இதனைப் புரிந்துகொள்ளலாம் மறைநூல் அறிஞர்கள் இருந்தது வேடிக்கையானது.
சிந்தனை
நாம் செய்யும் பாவம் நம்மைக் கடவுளோடும் அயராலோடும் ஏன் நம்மோடும் நல்லுறவில் இருக்கவிடாமல் செய்துகொண்டே இருக்கும். ஆகவே, நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, மனமாறி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed