அதிகாரத்தோடு போதித்த இயேசு
நிகழ்வு
மலைப்பாங்கான பிரதேசத்தில் தோட்டம் அமைத்து, விவசாயம் செய்துவந்தார் அந்த விவசாயி. ஒருநாள் அவருடைய தோட்டத்திற்கு வந்த கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவர், “ஐயா! உங்களுடைய தோட்டத்தில் நீங்கள் கஞ்சா பயிருடுவதாக எனக்குத் தகவல் வந்திருக்கின்றது. அதனால் இப்போது நான் உங்களுடைய தோட்டத்தை சோதனையிடப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் அந்த விவசாயி, “என்னுடைய தோட்டத்தில் கஞ்சாவா!… அப்படிப்பட்ட ஆள் நானில்லை. இருந்தாலும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக என்னுடைய தோட்டத்தைச் சோதனையிட வந்திருக்கிறீர்கள்… பராவாயில்லை. உங்களுடைய விரும்பம் போல என்னுடைய தோட்டத்தை சோதனையிட்டுக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் சோதனையிடும்போது கவனமாகச் சோதனையிடுங்கள். ஏனென்றால், நான் வளர்க்கும் மாடுகள் ஆங்காங்கே மேய்ந்துகொண்டிருக்கின்றன. புதிய ஆளைப் பார்த்தால் அவை முட்டக்கூடும்” என்றார்.
அதற்கு அந்த காவல்துறை அதிகாரி, “என்னுடைய சர்வீஸில் நான் எத்தனை பிரச்சனைகளைச் சந்தித்திருப்பேன். இந்த மாடுகள் எல்லாம் எனக்கு எம்மாத்திரம், நீர் போய் உம் வேலையைப் பாரும், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அதிகாரத் தொனியில் பேசிவிட்டு, தோட்டத்துக்குள் இறங்கி சோதனையிடத் தொடங்கினார். இதற்கிடையில் விவசாயி, ‘அவர் சோதனையிடட்டும். நாம் போய் சாப்பிட்டு வருவோம்’ என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய குடிசைக்குள் நுழைந்தார். அவர் குடிசைக்குள் நுழைந்த மறுகணம், ‘ஐயோ! அம்மா!’ என்ற அலறல் சத்தம் கேட்டது. ‘போலீஸ்காரர்தான் மாட்டிடம் மாட்டிக்கொண்டுவிட்டார் போலும்’ என விவசாயி திரும்பிப் பார்த்தபோது, மாடு போலீஸ்காரரை விரட்ட, அவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று தலைதெறிக்க ஓடிவந்துகொண்டிருந்தார். உடனே விவசாயி அருகே கிடந்த ஒரு கம்பை எடுத்து, மாட்டை நோக்கி வீசினார். அடுத்த நொடி, பாய்ந்து வந்த அந்த மாடு அந்த இடத்திலே நின்றது. அப்போதுதான் போலீஸ்காரருக்கு உயிரே வந்தது.
மூச்சுவாங்க ஓடிவந்த போலீஸ்காரர், விவசாயிடம் வந்து, “நல்லவேளை நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள். இல்லையென்றால் என்கதி, அதோகதிதான்… உங்களிடம் நான் அதிகாரத் திமிரில் அப்படிப் பேசிவிட்டான். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்… உங்களுடைய தோட்டத்தில் கஞ்சாவும் இல்லை ஒன்றும் இல்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.
தங்களிடம் அதிகாரம் இருக்கின்ற திமிரில் மற்றவரை ஒருபொருட்டாகக்கூட மதிக்காத மனிதர்கள் இங்கு ஏராளம். அதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
மறைநூல் அறிஞர்கள் போலன்றி, அதிகாரத்தோடு போதித்த இயேசு
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு கப்பர்நாகும் ஊருக்கு வந்து, ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்குகின்றார். மக்களோ அவருடைய போதனையைக் கேட்டு, “இவர் மறைநூல் அறிஞர் போலன்றி, அதிகாரத்தோடு போதிக்கின்றாரே” என்று வியப்பில் ஆழ்கின்றார்கள். மக்கள் வியந்து பார்க்கின்ற அளவுக்கு இயேசுவின் போதனை எப்படி அதிகாரத்தோடு இருந்தது, அது அக்காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்களின் போதனையை விட, எப்படி வித்தியாசமாக இருந்தது என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
மறைநூல் அறிஞர்கள் அதிகாரத்தில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதிகாரத்தோடு போதித்தார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், இயேசு அதிகாரத்தில் இல்லை, அப்படியிருந்தபோதும் அதிகாரத்தோடு போதித்தார். அதற்கான காரணமென்ன என்று இப்போது பார்ப்போம்.
வார்த்தையும் வாழ்வும் இணையும்போது ஒருவருடைய போதனை அதிகாரம் கொண்டதாக இருக்கும்
இயேசுவின் போதனை அதிகாரம் கொண்ட போதனையாக இருக்க மிக முக்கியமான காரணம், அவருடைய வாழ்வும் வார்த்தையும் இணைந்தே போனதே ஆகும். இதற்கு விவிலியத்தில் வருகின்ற பல நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன. எம்மாவு நோக்கிச் செல்லக்கூடிய சீடர்கள் இயேசுவைப் பற்றிச் சொல்லும்போது, “அவர் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்” என்பார்கள். அதேபோன்று நிக்கதேம், “கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்று இயேசுவை நோக்கிக் கூறுவார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இயேசுவின் வாழ்வில் சொல்லும் செயலும் இணைந்தே இருந்தன என்று உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.
ஆனால், பரிசேயர்கள் சொன்னார்கள், அதைச் செயலில் காட்டவில்லை. (மத் 23:3) அதனாலேயே அவர்களுடைய போதனை அதிகாரம் இல்லாமல் இருந்தது.
சிந்தனை
அதிகாரம் மக்களுக்கு அன்புப் பணி செய்யத்தானே ஒழிய, அடக்கி ஆள அல்ல. இயேசு தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மக்களை அன்பு செய்யவும் அவர்கள்மீது பரிவுகொள்ளவும் பயன்படுத்தினார். நாமும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அன்பு செய்யப் பயன்படுத்துவோம், அதற்கு முன்னதாக நம்முடைய சொல்லும் செயலும் இணைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed