பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இருந்த ஒரு செல்வச் செழிப்பான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் குஷால் பாத்திமா. சிறுவயது முதலே பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து வளர்ந்து வந்த இவருக்கு 9 வயது நடக்கும்போது கொடிய நோய் வந்தது. இவருடைய பெற்றோர் இவரை பெரிய பெரிய மருத்துவமனைக்கெல்லாம் கொண்டு சென்று பார்த்தபோதும்கூட, அங்கிருந்த மருத்துவர்கள், “தங்களால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கைவிரித்து விரித்துவிட்டனர். இதனால் இவருடைய பெற்றோர் இவரை வீட்டுக்குக் கொண்டுவந்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில் குஷால் பாத்திமாவினுடைய தந்தை, ‘தன்னுடைய ஒரே மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற வருத்தத்திலே இறந்துபோனார். இதனால் இவர் தாயின் ஆதரவில் நாட்களைக் கழித்துவந்தார். அப்போதெல்லாம் இவர் அழாத நாளில்லை. ஒருநாள் இரவு இவர் கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருந்தபோது, குர்ஆனில் வரும் இயேசு நபியையும், அவர் தன்னுடைய பன்னிரெண்டு திருத்தூதர்களோடு சேர்ந்து நோயாளிகளைக் குணமாக்கியதையும், சென்ற இடங்களிலெல்லாம் நன்மைகள் பல செய்துவந்ததையும் நினைவுகூர்ந்தார். இப்படி அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போது, இயேசு தன்னுடைய பன்னிரெண்டு திருத்தூதர்களோடு அவர்முன் தோன்றி, “மகளே! உன்னை நான் எனக்கு சாட்சியாக ஏற்படுத்துகிறேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.
இந்நிகழ்விற்குப் பிறகு குஷால் பாத்திமா, தான் முற்றிலுமாகக் குணமானதை உணர்ந்தார். மறுநாள் அவரை வந்து பார்த்த அவருடைய தாயார் மற்றும் அவருடைய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், ‘மருத்துவர்களால் கைவிடப்பட்ட இவர் இப்படி அதிர்ஷ்டவசமாகக் குணமடைந்திருக்கின்றாரே’ என்று மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அன்றுமுதல் குஷால் பாத்திமா தனக்கு வாழ்வு கொடுத்த இயேசுவுக்கு சான்று பகரவும், அவருடைய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கவும் தொடங்கினார். இதனால் பலர் அவரை நாடி வந்தார்கள்.
இதற்கிடையில் தன் மகள் இப்படி இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவித்துக் கொண்டிருகிறாளே, இவளை என்ன செய்தால் தகும் என்று யோசித்துப் பார்த்த குஷால் பாத்திமாவின் தாயார், அவரை லாகூரில் இருந்த சேரிப்பகுதியில் விட்டுவிட்டு வந்துவிட்டார். தன்னுடைய தாயார் தன்னை இப்படி ஏழைகள் வாழும் சேரிப்பகுதியில் விட்டுவிட்டாரே என்பதை நினைத்து குஷால் பாத்திமா கவலைப்படவில்லை. மாறாக அங்குள்ள மக்களுக்கு அவர் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்கத் தொடங்கினார். இதனால் பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். அவரும்கூட தன்னுடைய பெயரை எஸ்தர் என மாற்றிக்கொண்டார். எஸ்தராக மாறிய குஷால் பாத்திமா வல்லமையோடு ஆண்டவருடைய வாக்கை எடுத்துரைத்து வந்தார்.
அவரைப் பற்றிய காட்டுத்தீ போல எங்கும் பரவியது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்தாரால் பெரிய பிரச்சினை வரும் என்று, அவரைப் பிடித்துக்கொண்டு போய், சிறையில் அடைத்து வைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தார்கள். அப்படியும்கூட அவர் அங்கிருந்த சிறைக்கைதிகளுக்கு இயேசுவைப் பற்றி அறிவித்து வந்தார். இதனால் அங்கிருந்த சிறை அதிகாரிகள் அவரை ஓர் இருட்டறையில் அடைத்து வைத்து, கடுமையாகச் சித்ரவதை செய்து கொன்றனர்.
ஓர் இஸ்லாமியப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்து, இயேசுவால் தொடப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு நற்செய்தி அறிவித்து உயிர்நீத்த குஷால் பாத்திமா என்ற எஸ்தர் ‘நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு’ மிகச் சிறந்த முன்மாதிரி.
ஏழையாகப் பிறந்து, ஏழைகளோடு இருந்து, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்த இயேசு
நற்செய்தி வாசகத்தில், இயேசு ‘தன்னுடைய வழக்கப்படி’ தொழுகைக்கூடத்திற்கு வந்து, வாசிக்க எழுகின்றார். அங்கு அவரிடத்தில் எசாயாவின் சுருளேடு கொடுக்கப்பட, அதில் வருகின்ற ‘ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும்…” என்பதை வாசித்துவிட்டு, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிவிட்டது” என்று சொல்லிவிட்டு அமர்கின்றார்.
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க இறைவன் தன்னை அனுப்பியதாகக் கூறும் இயேசு, தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏழையோடு ஏழையாக இருந்து, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தார் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. ஏழைகள் யாராலும் கவனம் செலுத்தப்படாதவர்கள், கண்டுகொள்ளப்படாதவர்கள். அதனாலே இயேசு அவர்கள்மீது கரிசனைகொண்டு அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.
சிந்தனை
ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஏழைகள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார். நாமும் இயேசுவைப் போன்று ஏழைகள்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பது நம்முடைய கடமை.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed