ஜெர்மன் நாட்டின் 2600க்கும் மேற்பட்ட சிறார் பாடகர்கள், இவ்வெள்ளியன்று, நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடி, உலகில் துன்புறும் குழந்தைகளுக்கென நிதி திரட்டியுள்ளனர்.
மாசற்ற குழந்தைகள் திருநாளான டிசம்பர் 28ம் தேதியன்று, ஜெர்மனியில் இடம்பெற்ற இந்த சிறார் பாடகர் திரட்டியுள்ள நிதி, பெரு நாடு, மற்றும், உலகின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த 2600 சிறார் பாடகர்களுடன் இணைந்து, பல்வேறு பங்குத்தளங்களின் ஏறத்தாழ 3 இலட்சம் சிறார்களும் தங்கள் பங்குதளத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று, ‘கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்ற அட்டைகளுடன் நிதி திரட்டி உதவியுள்ளனர்.
1959ம் ஆண்டு, உலகின் ஏழை குழந்தைகளுக்கென ஜெர்மனியின் குழந்தைகளால், நிதி திரட்டும் திட்டம் துவக்கப்பட்டதிலிருந்து, இதுவரை நூறு கோடி யூரோக்களுக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்த நிதியின் வழியாக, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஓசியானியா, மற்றும், கிழக்கு ஐரோப்பாவின் குழந்தைகளுக்கென 71,700 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பீதேஸ் செய்தி கூறுகிறது
Source: New feed