ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்”
பெருநகர் ஒன்றில் வாடகைக் கார் ஓட்டிக்கொண்டிருந்தான் தாமஸ் என்ற இளைஞன். ஒருநாள் அதிகாலையில் அவனுடைய செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அதை எடுத்து அவன் பேசியபோது, மறுமுனையில் ஒரு மூதாட்டியின் குரல் கேட்டது. மூதாட்டி அவனிடம், நகரில் இருந்த ஓர் இடத்திற்குச் சொல்லி, அந்த இடத்திற்கு வரமுடியுமா? என்று கேட்டார். அவன் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், “வருகிறேன்” என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினான்.
மூதாட்டி சொன்ன இடத்திற்கு தாமஸ் சென்றபோது ஓர் அறையில் மட்டும் விளக்கெரிந்து கொண்டிருந்தது. மற்ற இடமெல்லாம் இருட்டாக இருந்தது. தாமஸ் அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தான். “ஒரு நிமிடத்தில் வருகிறேன்” என்று அந்த மூதாட்டியின் குரல் கேட்டது. பின்பு எதுவோ இழுபடுவதுபோல் ஒரு சத்தம் வந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மூதாட்டி ஒரு பெட்டியுடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.
தாமஸ் தற்செயலாக அந்த மூதாட்டியின் வீட்டினுள்ளே பார்த்தபோது, அது பல வருடங்களாக யாருமே பயன்படுத்தாதுபோல் காட்சியளித்தது. எல்லாம் பழைய பொருட்களாயிருந்தன. அவன் மூதாட்டியினுடைய பெட்டியை எடுத்து வந்து காரில் வைத்துவிட்டு, அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துவந்து காரில் உட்கார வைத்தான். காரில் ஏறியவுடன் மூதாட்டி ஒரு முகவரியைக் கொடுத்து, அங்கே போகச் சொன்னார். தாமசும் காரை மெல்ல ஓட்டத் தொடங்கினான்.
கார் கொஞ்ச தூரம் நகர்ந்திருக்கும், அப்போது மூதாட்டி அவனிடம், “தம்பி! நகரத்தின் மையப்பகுதி வழியாக காரை ஓட்டிச் செல்ல முடியுமா?” என்று கேட்டார். அதற்கு அவன், “அது சுற்றுவழியாயிற்றே” என்றான். “பரவாயில்லை. எனக்கு ஒன்றும் அவசரமில்லை. நான் போவது ஒரு முதியோர் இல்லத்திற்குத்தான் (Hospice) நான் எனது கடைசி காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறேன். இந்த நகரத்தை நான் பார்ப்பது இதுவே கடைசிமுறையாகும்” என்றார். இப்படிச் சொல்லி முடித்ததுதான் தாமதம். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வரத் தொடங்கியது. சிறுது இடைவெளிவிட்டு மேலும் தொடர்ந்தார். “எனக்கென்று யாருமில்லை. நான் அதிக நாட்கள் தாங்கமாட்டேனென்று மருத்துவர்கள்கூட கூறிவிட்டார்கள்”.
தாமஸ் காரின் வாடகை மீட்டரை நிறுத்தினான். “வேறு எங்கெல்லாம் போகவேண்டும் என்று நினைக்கிறீர்களோ. அங்கெல்லாம் போகலாம் பாட்டி” என்றான். பின்னர் அந்த மூதாட்டி சொன்னதற்கு ஏற்ப, அவர் வேலை செய்த இடம், அவர் அவருடைய கணவரைச் சந்தித்த இடம், அவர்கள் சுற்றிய இடங்கள், அவரின் குழந்தைகள் படித்த இடங்களென்று பல இடங்களைச் சுற்றிக் காட்டினான். போன பல இடங்களில் உற்சாகமாக தன் வாழ்வை விவரித்தார், சில இடங்களில் கண் கலங்கினார் அந்த மூதாட்டி. கடைசியில் பொழுது விடிந்துகொண்டிருக்கும்போது, “எனக்குக் களைப்பாக இருக்கிறது. நாம் போகலாம்” என்றார்.
இருவரும் அமைதியாக அந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு இரண்டு மருத்துவப் பணியாளர்கள் ஒரு சக்கர நாற்காலியுடன் வந்தனர். மெதுவாக அந்த மூதாடியை நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது மூதாட்டி தாமசைப் பார்த்து, “தம்பி நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும்?” என்றார். அவனோ, “ஒன்றுமில்லை” என்றான். அதற்கு மூதாட்டி, “உனக்கு நஷ்டமாகுமே. நான் ஏதாவது தந்தாகவேண்டுமே” என்றார். அருகே சென்ற தாமஸ், அவரைக் கட்டி அணைத்துவிட்டு, “எனக்கு இது போதும்” என்றான். மூதாட்டியோ அவனுடைய கையை அழுத்திப் பிடித்தவாறு, “இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இந்த சந்தோசத்திற்கு காரணமான உன்னை நான் என்றுமே மறக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு முதியோர் இல்லத்திற்குள் சென்றாள்.
மூதாட்டி அவனிடமிருந்து விடைபெற்றதும் அவனுக்கு ஏதோ போல் இருந்தது. அவன் அந்த மூதாட்டி கடைசியாகச் சொன்ன வார்த்தைகளையே அன்றைய நாள்முழுவதும் அசைபோடத் தொடங்கினான்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வை ஏதோ ஒரு கற்பனைக் கதை என்று நம்மால் கடந்துபோக முடியாது. கதையில் வரும் மூதாட்டியைப் போன்று எத்தனையோ வயதானவர்கள் அன்பிற்கும் ஆறுதலான வார்த்தைகளுக்கும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடத்தில் நம்முடைய அன்பையும் ஆறுதலையும் வெளிப்படுத்துவதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பெற்றோர், அவரை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் செல்கின்றனர். அப்போது தூய ஆவியாரின் உணர்த்துதலால் அங்கு வருகின்ற சிமியோன் என்ற பெரியவர் குழந்தை இயேசுவைக் கையில் தாங்கி, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன” என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்.
இங்கே குழந்தை இயேசுவின் பிரசன்னம் வயது முதிர்ந்த சிமியோனுக்கு நிம்மதியை, நிறைவு, சந்தோசத்தைத் தருகின்றது. நாமும் இயேசுவைப் போன்று நம் குடும்பங்களில் இருக்கின்ற பெரியவர்களுக்கு, வயதானவர்களுக்கு நம்முடைய அன்பால், ஆறுதலான வார்த்தைகளால், நமது உடனிப்பால் சந்தோசத்தைத் தரமுடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாருக்கும், அதிலும் குறிப்பாக முதியோர்களுக்கு நம்முடைய அன்பைத் தருவோம். அவர்களுடைய முதுமையில் தோள்கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed