மடு அன்னையின் தேவாலயத்திற்கு இலங்கை வாழ் மக்கள் குறிப்பாக இன,மத, மொழிக்கு அப்பால்
அன்னையின் அருளையும் ஆசீயையும் பெறுவதற்காக வந்து செல்லுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன மத பேதமின்றி கலந்து கொள்ளுவது உலகறிந்த உண்மை.
மடு தேவாலய பிரதேசமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக காணப்படுகின்றது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் ஆலயத்தின் சுற்றுவட்டத்தில்
அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். அவ்வேளையில் எறிகணை வீச்சினால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதுடன்
அன்னையின் ஆலயம் சேதமாக்கப்பட்டதையும் உலகமறியும்
2020ம் ஆண்டிற்குள் மடுமாதா தேவாலயத்தின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் மடு தேவாலய பிரதேசத்தினை புனித பூமியாக மாற்றுதல் தொடர்பாக
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அவர்களின் கடிதத்தின் பிரகாரம் பாவனையில் உள்ள அனைத்து காணிகளையும்
அபிவிருத்தி செய்வதற்காக உரிய அமைச்சின் ஊடாக இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது.
இக் குழுவில் உள்ளடங்கியவர்களின் விபரம் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை
மன்னார் மறைமாவட்ட மேதகு ஆயர் அவர்களும், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வண பிதா அன்ரனி விக்டர். சோசை அடிகளாரும்,
ஜனாதிபதியின் சட்டத்தரணியும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த சட்டத்தரணியுமான றியன்சி அரச குணரட்ன அவர்களும்,
மற்றும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ப. அன்ரன் புனிதநாயகம் அவர்களும்
இணைந்து கலந்துரையாடியதன் பிரகாரம் அதிமேதகு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அக்கடிதத்தில் முக்கியமாக 2 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்ட குழுவில் மடு தேவாலயத்தின் பரிபாலகர் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும்,
2. மன்னார் மறைமாவட்ட மேதகு ஆயர் ஆண்டகை அவர்களும் இக்குழுவில் உள்வாங்கப்படுவதோடு மடு தேவாலய பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படும்
எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையின் பரிசீலனையுடனும், அனுமதியுடனும் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும்
இந்த இரண்டு விடயங்களும் புதிதாகப் பிரசுரிக்கப்படும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட வேண்டும் எப்பதுடன் 1982ம் ஆண்டு வெளியிடப்பட்ட
யாத்திரை ஸ்தலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் இதுதொடர்பான சரத்துகள் உள்ளடங்கியதாக புதிய வர்த்தமானி அறிவித்தல் இருக்க வேண்டும் என்ற
கோரிக்கைகளும் ஆகும்.
இந்நிலையில் ஆயர் ஆண்டகை அவர்களின் கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் ஜனாதிபதி செயலகத்தினால் இற்றவரைக்கும் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது 302 ஏக்கர் காணியை மட்டும் புனித பூமியாக பிரகடனப்படுத்தி வெளியிடப்படவிருக்கும் வர்த்தமானி அறிவித்தலின் மாதிரி வரைபு ஒன்று
மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதிரி வரைபின் படி தற்போது மடு தேவாலயத்திற்கு உரிய ஏறத்தாழ
5000 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை புனித பூமி என்ற போர்வையில் 302 ஏக்கருக்குள் மட்டுப்படுத்தப்படும் ஒரு செயலாக கத்தோலிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எதிர்வரும் 16.12.2018 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கின்ற தேசிய நத்தார் தின விழாவில்
இது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பாக அனைத்து மக்கள்
சார்பான அதிதிருப்தி, ஆட்சபனையினை தொடர்பில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ப. அன்ரன் புனிதநாயகம் அவர்கள்,
09.12.2018 அன்று ஐனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த சட்டத்தரணியுமான றியன்சி அரச குணரட்ன அவர்கள் மற்றும்
மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து மேன்மைதங்கிய ஜனாதிபதிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் 16.12.2018 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்கள்
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு 09.12.2018 அன்று தொலைநகல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
எனவே ஐனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை
தெரிவிப்பதோடு ஐனாதிபதி அவர்கள் இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு
சரியானதொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறைமாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நிற்கின்றோம்.
நன்றி
J.J. கெனடி
செயலாளர்
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம்
Source: New feed