இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.
அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும் பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார்.
அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள்.
தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“இயேசு என்னும் பரிவுள்ள இறைவன்”
சீனாவில் அவாந்தி என்றொரு விகடகவி இருந்தார். நம் நாட்டில் தெனாலி ராமன், பீர்பால் எப்படி பிரபலமோ அதுபோன்று, சீனாவில் அவாந்தி பிரபலம்.
அவாந்தி இருந்த ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஆடம்பரமாகவும் செல்வச் செழிப்போடும் இருந்தான்; மக்களோ உணவின்றி பட்டினி கிடந்தார்கள். மக்கள் இப்படி உணவின்றி பட்டினி கிடக்கின்றார்களே, அவர்களுக்கு ஏதாவது கொடுத்து உதவலாமே என்று அவனுக்கு கடுகளவுகூட எண்ணம் வரவில்லை, மாறாக அவன் ஒவ்வொருநாள் மாலை வேளையிலும் தன்னுடைய பங்களாவிற்கு முன்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தான்.
இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட நினைத்த அவாந்தி, ஊரில் இருந்த ஒருசில இளைஞர்களைக் கூப்பிட்டு, அவர்களிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, “இந்த பணத்தைக் கொண்டு, அரிசி வாங்கி, அதனைக் கஞ்சியாகக் காய்ச்சி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கிய சிறிதுநேரத்தில் மக்களுக்குக் கொடுக்கத் தொடங்குங்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்… இன்றைக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நான்தான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கின்றேன்” என்று சொல்லி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
மாலையில் குறிப்பிட்ட நேரத்தில், செல்வந்தனின் பங்களாவிற்கு முன்பாக ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. மக்களும் ஆடல் பாடல் நிகழ்சிகளை மிக மும்முரமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அவாந்தியோ, சிறிதுநேரத்திற்கு பிறகு நடக்கப்போவது என்ன என்பது பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல், செல்வந்தனின் அருகே அமர்ந்து ஆடல் பாடல் நிகழ்சிகளைப் பார்த்து வந்தார்.
நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், பின்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மக்களுக்கு மத்தியில் வந்து, “உங்களுக்காக கஞ்சி தயாராக இருக்கின்றது. எல்லாரும் சாப்பிட வாருங்கள்” என்றார்கள். இதைக் கேட்ட மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு சாப்பிடக் கிளம்பினார்கள். இப்போது நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அந்த செல்வந்தனும் அவாந்தியும் மட்டுமே அங்கிருந்தார்கள். செல்வந்தனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் அவாந்தியைப் பார்த்து, “என்ன இந்த மக்கள்! இப்படி இருக்கிறார்கள்!. நாமோ இவர்களுக்காக மிகுந்த பொருட்செலவில் கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், இவர்கள் கஞ்சிக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்களே” என்று அங்கலாத்தான்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவாந்தி, செல்வந்தன் பேசி முடித்ததும் பேசத் தொடங்கினார், “ஐயா பெரியவரே! மக்கள் உணவில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இப்படி மிகுந்த பொருட்செலவில் ஒவ்வொருநாளும் கலைநிகழ்ச்சிகளை வழங்குவது எந்தவிதத்தில் நியாயம்?. நீங்கள் காட்டுகின்ற கலைநிகழ்ச்சிகள் அவர்களுடைய பசியைப் போக்காது. கஞ்சிதான் அவர்களுடைய பசியைப் போக்கும். அதனால்தான் கஞ்சியைக் கண்டதும் உங்களுடைய கலைநிகழ்ச்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள்… இனிமேலானது மக்களுடைய பசியைப் போக்க ஆவணசெய்யுங்கள்” என்றார். இதைக் கேட்டபோதும் அந்த செல்வந்தன் தன்னுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி நடக்கத் தொடங்கினான்.
மக்கள் உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்படும்போது, அவர்களை திசை திருப்புவதற்காக ஏதேதோ செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று, ஒரு மலையில் ஏறி அமர்கின்றார். இயேசுவைக் கண்டதும் பெருந்திரளான மக்கள் அவரிடத்தில் வருகிறார்கள். அவர்கள் தங்களோடு தூக்கிக்கொண்டு வந்த நோயாளிகளை, உடல் ஊனமுற்றவர்களை, பார்வையற்றவர்களை அவருக்கு முன்பாகக் கிடத்துகிறார்கள். இயேசு அவர்கள் அனைவரையும் குணப்படுத்துகின்றார். அதன்பின்பு இயேசு தன் சீடர்களை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். இவர்களைப் பசியாய் அனுப்பிவிடவும் விரும்பவில்லை” என்று சொல்லி, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன” என்று கேட்கின்றார். அவர்கள், “ஏழு அப்பங்களும் சில மீன்களும் இருக்கின்றன” என்று சொன்னதும் அவற்றைத் தன்னிடம் கொண்டு வரச் சொல்லி ஆசி வழங்கி, அவற்றை மக்களிடம் கொண்டு போகச் சொல்கிறார். மக்களும் வயிறார உண்கிறார்கள்.
பெண்கள் குழந்தைகள் நீங்கலாக உணவுஉண்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய நான்காயிரம் என்கிறார் நற்செய்தியாளர். இத்தனை மக்களுக்கும் இயேசு உணவளித்து, அவர்களிடம் இருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்றால், அவர் மக்களுக்கு எது தேவையோ அதை நன்றாக உணர்ந்திருந்தார். அதனால்தான் பரிவோடு அதனை அவர்களுக்குச் செய்துதந்தார்.
இயேசுவின் வழியில் நடக்கும் நாம், மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு உதவுகின்றோமா? அவர்களிடத்தில் பரிவு கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ‘மக்களோடு இரு, மக்களுக்காக இரு’ என்பார்கள். இயேசு மக்களோடு இருந்தார், மக்களுக்காக இருந்தார். அதனால்தான் அவர்களுடைய தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்தார்.
நாமும் இயேசுவைப் போன்று மக்களின் தேவையை அறிந்து, அவர்களிடம் பரிவோடு நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed