எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படவில்லையெனில், 2030ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு நாளும், எண்பது வளர்இளம் பருவத்தினர் இறக்கக்கூடும் என்று, ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு எச்சரித்துள்ளது.
டிசம்பர் 01, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு நாளையொட்டி, “சிறார், HIV மற்றும் AIDS : 2030ல் உலகம்”, என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள, யுனிசெப் குழந்தை நல அமைப்பின் இயக்குனர் Henrietta Fore அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
எயிட்ஸ் நோய் தொடர்புடைய மரணங்கள் மற்றும், இந்நோய்க் கிருமிகளால் புதிதாகத் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவந்தாலும், இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தேவையான வேகம் காட்டப்படவில்லையெனவும் Henrietta Fore அவர்கள் கூறியுள்ளார்.
எயிட்ஸ் நோயால் இறக்கும் சிறாரில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஐந்து வயதை எட்டுவதில்லை என்றும், இந்நோய் தடுப்பு மற்றும் இந்நோய்க்குரிய சிகிச்சைகள், அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், யுனிசெப் இயக்குனர் கூறியுள்ளார்.
உலகளவில், எயிட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்படும் சிறாரின் எண்ணிக்கையை, 2030ம் ஆண்டுக்குள், 14 இலட்சமாகக் குறைக்கும் திட்டம் உள்ளது, ஆயினும் தற்போது அச்சிறாரின் எண்ணிக்கை ஏறத்தாழ 19 இலட்சமாக உள்ளது என்றும், அந்த அறிக்கை கூறுகின்றது.
Source: New feed