விடியற்காலையில் இருள் நீங்குமுன்னரே, இயேசுவின் கல்லறை நோக்கிச் சென்ற மகதலா மரியா, கல்லறை காலியாக இருப்பதைக் கண்டதை மையமாக வைத்து, எருசலேமின் இயேசுவின் கல்லறைக் கோவிலில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், கர்தினால் லியனார்தோ சாந்த்ரி.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கான பேராயத்தின் தலைவர் கர்தினால் சாந்த்ரி அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் மேற்கொண்டுவரும் மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக, இயேசுவின் கல்லறைக் கோவிலில் நிறைவேற்றிய திருப்பலியில், இறைவனிடமிருந்தும், உடன்வாழ் மனிதர்களிடமிருந்தும் நாம் விலகியிருப்பதால் உருவாகும் இருள் குறித்து எடுத்துரைத்தார்.
ஏழைகள், துன்புறுவோர், போரால் பாதிக்கப்பட்டோர், குறிப்பாக, சிரியா நாட்டின் மக்கள் குறித்து பாராமுகமாக, வெளிவேடம் எனும் உடையணிந்து நாம் செல்லும்போது, அமைதியை நாம் வழங்கத் தவறுவது மட்டுமல்ல, இருளையும் விதைத்துச் செல்கிறோம் என்றார், கர்தினால் சாந்த்ரி.
நற்செய்தியால் ஊட்டம் பெற்றுள்ள நாம், இவ்வுலகில் நம்பிக்கையைத் தூண்டிவிடும் பாஸ்கா நெருப்புப் பொறியாகச் செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் சாந்த்ரி.
மத்தியக் கிழக்குப் பகுதி திருஅவைப் பணிகளைப் பார்வையிட்டு வரும் கர்தினால் சாந்த்ரி அவர்கள், எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை மூன்றாம் தியோபிலோஸ் அவர்களையும் சந்தித்து, எருசலேம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை குறித்து கலந்துரையாடினார்.
மேலும், புனித பூமியில் திருஅவை நடத்திவரும் கல்வி நிலையங்களையும் சென்று சந்தித்து மாணவர்களோடு உரையாடினார், கர்தினால் சாந்த்ரி.
Source: New feed