‘சிறந்த அரசியல் கொள்கை என்பது, அமைதிக்குப் பணி புரிவதாக இருக்கவேண்டும்’ என்பது, 2019ம் ஆண்டின் அமைதி நாளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைப்பு என திருப்பீடம் அறிவித்துள்ளது.
வரும் சனவரி மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்பட உள்ள 52வது உலக அமைதி நாளுக்குரிய கருப்பொருளை வெளியிட்டுள்ள திருப்பீடம், அரசியல் பொறுப்புணர்வு என்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியது, குறிப்பாக, மக்களைப் பாதுகாக்கவும், ஆட்சி புரியவும் அழைப்புப் பெற்றுள்ளவர்களுக்கு இது அதிகம் அதிகமாக உள்ளது என அதில் கூறியுள்ளது.
சட்டத்தை பாதுகாப்பதையும், சமுகக் குழுக்கள், தலைமுறைகள், கலாச்சாரங்கள் ஆகிய அனைத்திற்கிடையேயும், உரையாடலை ஊக்குவிப்பதையும், இந்த சமூகப் பொறுப்புணர்வு எதிர்பார்க்கிறது என திருப்பீடத்தின் செய்தி மேலும் உரைக்கிறது.
ஒருவருக்கொருவர் நம்பிக்கையில்லாத இடத்தில், அமைதி இருக்க முடியாது, நம்பிக்கை என்பதன் முதல் நிபந்தனை, நாம் கொடுத்த வாக்கை மதித்து காப்பாற்றுவதாகும் எனவும் எடுத்துரைக்கும் இச்செய்தி, அரசியல் அர்ப்பணம் என்பது, பிறரன்பின் மிக உன்னத வெளிப்பாடாக இருக்க வேண்டும் எனவும், வாழ்வு மற்றும் வருங்காலம் குறித்த அக்கறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
ஒரு மனிதனின் உரிமைகள் மதிக்கப்படும்போது, மற்றவர்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்ற கடமையுணர்வை அவன் பெற வேண்டியது அவசியம் என்று புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் கூறிய வார்த்தைகளை எடுத்துரைக்கும் இச்செய்தி, நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உள்ளுணர்வை பெறும்போது, நம் கடமைகளும் உரிமைகளும் மேலும் அதிகரிக்கின்றன என மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Source: New feed